பேசி சிங்களப் பேரினவாதிகள் எதனையுமே தந்த வரலாறில்லை.....



பேசி சிங்களப் பேரினவாதிகள் எதனையுமே தந்த வரலாறில்லை..... என்ற உண்மை தெரிந்திருந்தும் வலுவான படைக்கட்டுமானங்களை உருவாக்கி, உலகத்திலேயே தமிழ்ப்படைக்கட்டுமானத்தை வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற அரங்கில் ஏறினார்கள்? இந்தக்கேள்விக்கான பதிலோடு தமிழரின் பிரச்சனைக்கான தீர்வைக் காணவென முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் நிலமைகளையும் மீளவும் பார்ப்பது காலத்தின் கடமையும் தேவையும் என நினைக்கின்றேன்.
சிங்களப் பேரினவாதிகள் பலவழிகளிலும் ஈழத்தமிழினத்தை அழித்து வருகின்றனர். இதனை மூடி மறைத்து தமிழினத்தின் உணர்வையும், உரிமையையும் மதிப்பது போல பாசாங்கு செய்து, உலகின் கவனம் தமிழர் மீது பட்டுவிடக்கூடாது என்பதனை எண்ணியே சமாதானப் பேச்சுவார்த்தையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.

இலங்கைத்தீவை அன்னியர்கள் முழுமையாக சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டுப் போக முன்பே, தமிழரின் உரிமைக்காக சேர் பொன் அருணாசலம் ஆயிரத்தி தொழாயிரத்து இருபது காலப்பகுதியில் பேசினார். இந்தப் பேச்சின் மூலம் எந்தப்பயனும் விளையவில்லை.

1948 ஆம் ஆண்டிற்குப் பின் சிங்களப் பேரினவாத்ததுடன் தமிழரின் பிரச்சனையை தீர்ப்பதற்காக தந்தை செல்வா இருமுறை ஒப்பந்தம் செய்தார். எந்தப் பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ளாமல் அந்த ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டன.

•· 27.07.1957 பண்டா - செல்வா ஒப்பந்தம்

•· 24.03.1965 டட்லி - செல்வா ஒப்பந்தம்

இந்த இரு ஒப்பந்தங்களும் தமிழ் சிங்கள இனம் ஒரு நாட்டிற்குள் வாழ முடியாதா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அமைதி வழியில் உரிமை கேட்கத் தொடங்கிய காலமாகும். இன்று அமைதி வேண்டுமெனப் பேசுகின்ற உலகம் அன்று அமைதி வழியில் நின்றவர்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அமைதி வழியில் உரிமை கேட்ட போது, சிங்களப்பேரினவாதம் துளியெனவும் கருத்திலெடுக்காது ஈழத்தமிழினத்தை கருவழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்தது. தமிழரை பல தடவைகள் கொன்று குவித்ததன் விளைவே தமிழர் ஆயுதமேந்திப் போராடவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அனைத்துலக சமூகத்தின் பிடிக்குள் புலிகளை சிக்கவைத்து சமாதானம் என்ற மகுடத்தை சுமக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலுவை குன்ற வைக்கலாமென்ற உள்நோக்கத்துடன் 22.02.2002 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ரணில் - பிரபா ஒப்பந்தம் என்ற பெயருடன் அலுவல் பார்க்கத் தொடங்கினார்.
ஆயுதப்போராட்டம் வலுப் பெறத் தொடங்கிய ஆரம்ப காலத்திலும் பேசுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்ட சிங்களப் பேரினவாத அரசு இந்திய அரசின் துணையோடு அதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டியதன் விளைவே 10.04.1985, 12.08.1985 ஆகிய இரு நாட்களிலும் இரு தடவைகள் திம்பு பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதன் மூலமும் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

எனவே தமிழர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டு தலைநிமிர்வதை தவிர வேறு வழியின்றி போராடிவந்த காலப்பகுதியில் தான் இந்தியாவின் முழுமூச்சான தலையீட்டுடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் போது சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவை துணைக்கு வைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடலாமென்றே எண்ணிச் செயற்பட்டது.

இந்த விடயத்தில் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்த்த்தில் இந்தியா தனது நலனிலும் கூடிய அக்கறை செலுத்தியதன் விளைவாக இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூட சகித்துக் கொண்டதெனச் சொல்லலாம். கொழும்பில் இந்தியாவின் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு படையாட்களின் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டபோது சிங்களப் படையாள் ஒருவரே துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கினார். இதனை இந்தியா சகித்துக் கொண்டது. ஆனால் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் அவர்களது பிராந்திய வல்லாதிக்க நலனிற்காக பச்சடிபோன்ற மதிப்பிற்குள் அடங்கியது. எனவே ஒப்பந்தம் செய்வது பற்றி மட்டுமே கரிசனை காட்டியது இந்தியா.

29.07.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் ஈழத்தமிழரின் பாதுகாப்பு, உரிமை என்பதிலும் பார்க்க திருகோணமலையில் உள்ள ஒன்பது எண்ணைக் குதங்களையும் குத்தகைக்கு எடுப்பது போன்ற விடயங்கள் தான் உள்ளடங்கியது.

இன்று தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கின் நிலமை எப்படியுள்ளதென கவனிப்போர் இதுபற்றி கூடுதலாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை எனத்தான் சொல்வார்கள்.

இதன்பின்னர் 1990 காலப்பகுதியில் அன்றைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி பிறேமதாசவுடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையானார்.

பேசவந்த சிங்களப் பேரினவாதிகளும் அவர்களிற்கு துணை நின்றவர்களும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு தமிழர் தரப்பை மட்டுமே குற்றம் சுமத்தினர். இந்தமாதிரியான சூழ்நிலைக்கும் முகம் கொடுத்தபடியே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் தமிழர் தரப்பிற்கு இருந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக சமாதானத்தை தாரக மந்திரமாக சுமந்து பதவிக்கதிரையில் அமர்ந்த சந்திரிகா குமாரதுங்க வெண்தாமரையையும், வெண்புறாவையும் சுமந்து கொண்டு போரிற்கான முயற்சியை திரைமறைவில் செய்தபடியே தமிழர் பிரச்சனை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசினார்.

03.01.1995 ல் பேச்சு ஆரம்பமாகியது
08.01.1995 ல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
பேச்சை சந்திரிகா அரசு ஒருவித நாடக மேடையாக வைத்துக் கொண்டு, போரைத் தொடக்கி புலிகளை அடியோடு அழித்து விடலாமென்ற எண்ணத்தையே கொண்டது. பேச முற்பட்டோம் அதற்கு புலிகள் இணங்கவில்லை. எனவே தான் போரை நடத்த உலக நாடுகளிடம் கைநீட்டலாமென்ற அசையாத நம்பிக்கையுடன், வஞ்சகமாக நடக்க முற்பட்டதன் விளைவு குறுகிய காலத்திற்குள் விடயம் முடிவுற்றது.

19.04.1995 அன்றே போர்நிறுத்தம் முடிவுற்று தீவிரமான போர் தொடங்கியது. புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு சமாதானத்திற்கான போரை ஒருபுறம் நடத்திக்கொண்டு தமிழினத்தை அழித்தொழிப்பதில் கவனம் செலுத்தியதில் செம்மணி புதைகுழிகள் போன்ற தமிழரின் புதைகுழிகளின் மேலேறி பதவியை அனுபவித்த அளவிற்கு தமிழரின் போராட்டத்தை அழிக்கவோ ஆட்டம் காணவோ செய்ய முடியவில்லை.

நீண்ட போரொன்றை செய்து தமிழீழத்தின் படைக் கட்டுமானங்கள் படைவலுச் சமநிலை கொண்டதென நிறுவுவதைத் தவிர சிங்களப் பேரினவாதத்தின் படைகளால் வெல்லப்பட முடியாத தென்ற உணர்தலின் பின் தான் அடுத்த கட்டம் பற்றி ரணில் விக்கிரமசிங்க சிந்திக்கலானார். அவர் அனைத்துலக சமூகத்தின் பிடிக்குள் புலிகளை சிக்கவைத்து சமாதானம் என்ற மகுடத்தை சுமக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலுவை குன்ற வைக்கலாமென்ற உள்நோக்கத்துடன் 22.02.2002 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ரணில் - பிரபா ஒப்பந்தம் என்ற பெயருடன் அலுவல் பார்க்கத் தொடங்கினார்.

இலங்கைத் தீவிற்குள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்ட இனம் தமிழராக இருக்க பேசிப் பேசியே குள்ளத்தனமாக தமிழரின் சுயநிர்ணய உரிமை என்ற பேச்சை விடுத்து, போராட்டத்தை தோற்கச் செய்வதும் மீண்டும் உலக சமூகத்தின் ஆதரவுடன் தமிழரின் போராடும் திறனை மழுங்கச் செய்து தருவதை வேண்டிக் கொள்ளுங்கள் என்ற நிலைக்குத் தள்ளிவிடலாம் என்பது தான் சிங்களப் பேரினவாதிகளின் எண்ணமாகவிருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதானமான போக்கை கடைப்பிடித்தனர். பலதரப்பட்டவர்களின் எண்ணமும் புலிகள் ஒருதலைப்பட்சமாக விலகி விடுவார்கள். அப்படி விலகினால் அமெரிக்காவோ இந்தியாவோ எவராக இருந்தாலும் நேரடியாக சிங்களப் பேரினவாதிகளிற்கு உதவி செய்து புலிகளை ஆட்டங்காணச் செய்யலாம் என்பதுதான் எண்ணம். புலிகளும் தங்களின் வலுக் குன்றிவிடக்கூடாதென்றதில் கவனம் செலுத்திக் கொண்டே பேச்சு மேசையை அலங்கரித்தனர். இதில் தமிழர் தரப்பும் விலைகொடுத்தது. இந்த விலைகொடுப்பு போராட்டத்தில் தவிர்க்க முடியாததாகியது. ஆனால்...... எவரிடமும் மண்டியிடவில்லை..... ரணில் வஞ்சகமாக செயற்பட்டதால் அவரிற்கு அவரின் மொழியிலேயே பதிலளிக்கப்பட்டது. இதனைப் புரிந்து கொள்ளாத மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன் பிரபாகரனுடன் பேசுவேன் எனச் சொன்னவர் எல்லாரும் எறிச் சறுக்கிய குதிரையிலேயே ஏறிச் சறுக்கிச் சென்றார். சமாதானப் பேச்சு, ஒப்பந்தம் என்பவற்றை செய்ததன் வரலாற்றில் பேசியும், ஒப்பந்தம் செய்தும் சிங்களப் பேரினவாதிகள் தமிழரிற்கு எதனையுமே கொடுக்கவில்லை.

அப்படியென்றால் ஏன் ரணிலுடன் ஒப்பந்தம் செய்து பேசவேண்டும்? அதற்கான பதிலைச் சொல்வதற்கு முன் நாம் ஒரு முக்கியமான விடயத்தை நோக்குவோமெனில் இறுதியாக 2002 ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் தமிழர் தரப்பு பலமாக நின்று ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்க்க் கூடிய தளத்தில் தான் செய்யப்பட்டது। அனைத்துலக சமூகத்திற்கு ஈழத்தமிழினத்தை அழிக்கும் சிங்களப் பேரினவாதிகளின் சுயத்தை வெளிப்படுத்துவதற்கான ஒப்பந்தமாகவே புலிகள் இதனை நோக்கினர்। ஏனெனில் அடித்து பெற்றதுண்டு. பேசி எதனையுமே பெறவில்லை. எனவே இந்த ஒப்பந்தம் அனைத்துலக சமூகத்தை நடுநிலமையாக வைத்து செய்யப்பட்டதோடு தமிழர் தரப்பு நிதானமாக பொறுமையாக சிங்களப் பேரினவாதிகளின் முகத்தை அம்பலமாக்கியுள்ளது. போர்நிறுத்தம் நீடிக்காது என சொன்வர்கள் உண்மையில் என்ன நடக்கின்றதென வாயடைத்து நின்றனர். எத்தனையோ நெருக்கடிகளையும், இழப்புக்களையும் தமிழருக்கு ஏற்படுத்திய போதும் பொறுமையாக நின்ற புலிகளை ஈழத்தமிழரும் ஐயங்கொண்டு நோக்குமளவிற்கு களநிலமை மாறிக் காணப்பட்டது. போரின் புதிய நுணுக்கங்களை கையாண்ட தலைவர் பிரபாகரன், அரசியலிலும் நுட்பமாகவே செயற்பட்டார். விளைவு இன்று தெரிந்திருந்திருக்கும். ஸ்ரீ லங்கா பேரினவாத அரசே ஒருதலைப்பட்சமாக ஒப்பந்த்த்தில் இருந்து விலகியது. இப்பொழுது உலகம் எதைப் புரிந்து கொள்ளப் போகின்றது? இனி என்ன நடவடிக்கையினை செய்யப் போகின்றது? கவலைகளும், கண்டனங்களும், மீள்பரிசீலனை செய்யக்கோருவதன் மூலமும் எதனையும் அமையிவழியில் சாதிக்க முடியாது. எனவே உலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு டொலரும் தமிழினத்தை அழிப்பதற்கானதென்பதை கவனித்து நடவுங்கள் எனத் தான் ஈழத்தமிழர் வேண்டுகின்றனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் எத்தனை உயிர்கை பலியெடுத்தனர்? இனி ஒப்பந்தம் இல்லை..... இன்னும் கொடுமை வேகம் கொள்ளப் போகின்றது. இனியும் தமிழர் அமையி வழியில் தான் பயணிக்க வேண்டுமா?

தலைவர் பிரபாகரன் சமாதானம் பற்றி இப்படி சொல்கின்றார்.


சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன் எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, சுதந்திரமாக கௌரவமாக வாழவேண்டும் என்பதை எனது ஆன்மீக லட்சியம்.போரின் வன்பமையும், துயரும் எப்படியென்று புரிந்த்தனால் தான் பிரபாகரன் சமாதானத்தை விரும்பினார்.

சமாதானம் பேசிப்பேசி தமிழரை ஏமாற்ற அதைனப் பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல அவர். ஆகவே... ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். பேசிப் பேசி ஏமாந்து போகக் கூடிய தமிழர் தலைமையல்ல இன்றுள்ளது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சருகுகளல்ல புலிகள். ஏனெனில் படைவலுச் சமநிலை தமிழர் பக்கம் மேலோங்கிவரும் களநிலமை அடுத்த கட்டமாக நடக்கப்போகின்றது.

பேசிப் பெற்ற வரலாறில்லை, அடித்துப் பிடித்த வரலாறுண்டு. குள்ளத்தனமாகவும், கொடூரமாகவும் தமிழினத்தை அழிக்கும் காலம் தொடராது. இனி முழுப்போருக்கான காலம் முடிவுற்று அமைதி நிலவுகின்ற போது மீண்டுமொரு பேச்சுவார்த்தை நடக்கலாம். அதில் எல்லைகளை நிர்ணயிக்கும் பேச்சு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக புலத்தில் வாழும் ஈழத்தமிழரும் வலுக்குன்றாமல் உழைக்கவேண்டும்
.

முரசத்திற்காக மதி

Comments