பொதுநல சேவையினூடாக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் சிவத்தமிழ்ச்செல்வி --- பிரமுகர்கள், அமைப்புகள் புகழாஞ்சலி


தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமுமடைந்தேன். நான் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதால் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமலிருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது'

என இந்து மாமன்றத் தலைவர் வி. கைலாயபிள்ளை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சிவத்தமிழ்ச் செல்வியின் சமய சமூகப் பணிகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவை. ஆலயப் பணியுடன் இணைந்த பொதுநல சேவையின் ஊடாக சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

இதன் காரணமாக உலகளாவிய ரீதியிலே உன்னத நிலையில் இந்துப் பெருமக்களின் இதயங்களில் வைத்துப் போற்றப்பட்டு வந்தார். இவரது உயர்ந்த சேவையைப் போற்றும் வகையில் அகில இலங்கை இந்து மாமன்றம் பொன்விழாவையொட்டி 2005 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடத்திய இந்து மாநாட்டில்"தெய்வத் திருமகள்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

அம்மையாரது மறைவுக்கு இந்து மாமன்றத்தின் சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்ம சாந்திக்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

விவேகானந்த சபை பொதுச் செயலாளர்

யாழ்ப்பாணத்தில் சிவத்தமிழ்ச்செல்வி ஆற்றி வந்த தொண்டினை யாராலும் ஈடுசெய்ய முடியாது. எல்லோருக்கும் அன்னையாக வாழ்வின் வழிகாட்டியாக இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சமளித்து வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை நெறி நாயன்மார்களின் வாழ்க்கையை பின்பற்றியதாகவே அமைந்திருந்தது.

இவ்வாறு சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு குறித்து கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளர் இராஜபுவனீஸ்வரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நேற்று முன்தினம் அன்னையின் மறைவுச் செய்தி எம்மை துயரத்துள் ஆழ்த்தியது. அம்மையார் அவர்கள் கொழும்பு விவேகானந்த சபையுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக எமது சபையின் காப்பாளராகவும் இருந்தார். இவரது சைவப் பணி குறிப்பாக ஆத்மீக சொற்பொழிவுகள் எமது சபையின் மேடையில் தான் ஆரம்பித்ததாக அடிக்கடி அவர் குறிப்பிடுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

சைவத் திருமுறைகளில் ஆளுமை கொண்டவர்கள் சபை ஆண்டுதோறும் நடத்திவருகின்ற திருமுறை விழாக்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றுவது வழமையாக இருந்தது. அவரது குரல்வளம் திருமுறைகளை மேற்கோள் காட்டி திறம்பட உரையாற்றும் சிறப்பு அவரையே சாரும். சிறந்த ஓர் சைவசமய சொற்பொழிவாளரான இவரது பேச்சு வல்லமையை உலக வாழ் சைவ மக்கள் போற்றுவார்கள். அதுமாத்திரமல்ல தமிழர்கள் வாழுகின்ற நாடெல்லாம் சென்று சொற்பெருக்காற்றியவர். இவரைப் பாராட்டும் வகையில் யாழ். பல்கலைக்கழகம் 'கலாநிதி' பட்டத்தை வழங்கியது.

அவர் கொழும்பில் பாத்திமா கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிகின்ற காலத்தில் விவேகானந்த சபைக்கு அடிக்கடி வருவதுடன் எமது அகில இலங்கை சைவ சமய பாடப் பரீட்சைக்கும் உதவியுள்ளார்.

அவரது பதின்னான்காவது வயதில் சபை நடத்துகின்ற சைவசமய பாடப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றவர். சபையின் நூற்றாண்டு விழாவை யாழ்ப்பாணத்தில் அவரினாலேயே அமைக்கப்பட்ட நல்லூரில் அமைந்துள்ள துர்க்கா மணி மண்டபத்திலே தாமே தலைமைதாங்கி நடத்தி வைத்த பெருமை அவரைச் சாரும். சைவசமய குழந்தைகள் அத்தனையும் சைவ சமயப் பாடப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும், சித்தியெய்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைவதற்கு உலக சைவ மக்களின் பிரார்த்தனை என்றும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவர் வழியில் தொடர்ந்து கடமைகளை சிறப்புற நடத்துவதற்கு எல்லாம் வல்ல துர்க்கா துரந்தரி வழிகாட்டுவாராக.

அகில இலங்கை இந்து வாலிபர் சங்கம்

"சமயப் பணியினூடாக சமுதாயப் பணியையும் மேற்கொண்டு இந்து சமயத்தவருக்கு வழிகாட்டியாக விளங்கிய பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி பூவுல வாழ்வை நிறைவு செய்தாலும் அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்' என அகில இலங்கை இந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் த. மனோகரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அநாதரவான பெண் குழந்தைகளை அரவணைத்து வாழ்வளித்ததன் மூலம் சமுதாயப் பணிக்கு உயிரும் உரமும் தந்தவர். அவர் தொடங்கிய நற்பணிகள் தடையின்றித் தொடர ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்

"திருவாசகக் கொண்டல் தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். பழுத்த பழம் தானே காம்பை விட்டு வீழ்வதுபோல் நிலமிசை நீடு வாழ்ந்த சிவத்தமிழ்ச்செல்வி அழியாத புகழை நிலைநாட்டி நில்லா உலகில் இனியும் நில்லோமென மீளா உலகு சென்றுள்ளார்' என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தை எம் உள்ளம் உருக அள்ளித்தந்த அன்னை இனி எம்மிடையே இல்லையென எண்ணும் போது எம்மை மீறி கண்கள் கலங்குகின்றன.

அவர் நிகழ்த்திய உரைகள் காற்றோடு கலக்காது நூல்களாகவும் ஒலிப்பேழையாகவும் வெளிவந்திருப்பது ஆறுதல் தரும் விடயமாகும்.

என்கடன் பணி செய்து கிடப்பதே என தொண்டு செய்து வாழ்ந்த அன்னையின் துர்க்கா மகளிர் இல்லமும் முதியோர் காப்பகமும் அவரின் சமூகப்பணிக்கு சான்று பகரும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

Comments