சுயமரியாதையுடன் வாழவிரும்பும் தமிழ் ஈழத்தினர் வெறும் 5 % மட்டும்தானா?

''உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் அற்றது நாடு'' என்ற வாழ்வை 2000 ஆண்டுகள் சரித்திரமாக்கிய தமிழினத்தின் வாழ்வை ,மாண்பை, மரபுகளை, தன்மான உணர்வோடு வாழும் உரிமைகளை, மதியிலிருத்தி தமிழர்கள் வாழ முனையாது வயிற்றுப் பசியையும், வாழ்க்கை வசதிகளையும் எண்ணி இவற்றை எல்லாம் மறக்கவே முன்வருவர் என்று தப்புக் கணக்குப் போடும் குறுமதியாளர்களின் குதர்க்கங்களின் வெளிப்பாடே

5% தமிழர்கள் மட்டும்தான் தமிழ் ஈழத் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கும் மக்கள் என்ற அமெரிக்க அரசுத் தூதுவரின் அண்மைய பிதற்றலாகும்.

திறந்த சிறையிலே 40இ000 ஸ்ரீ லங்காவின் இராணுவ காட்டு மிராண்டி வெறித்தன சித்திர வதைகளினிடையிலே நாளும் பொழுதும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழியின்றி பசியும், பொருட்தட்டுப்பாடுகளும், விலையேற்றங்களும் தலைவிரித்தாட, மரண பயம் உடல் உணர்வுகளை உறையவைக்க விடிவை நோக்கி ஏக்கப் பெருமூச்சோடு யாழ் குடாநாட்டில் வாழும் மனிதர்களில் 5% தானாம் முழு விடுதலைபெற்று அமைதியோடு செழிப்பும், சிறப்புமாக தமது மண்ணோடு ஒட்டி உறவாடி வாழவிரும்பும் மக்கள.; அமெரிக்கரின் கணிப்பீடு இது.

வாழ்ந்த மண்ணை, வீடுவாசல்களை, செல்வங்களை, உற்றம் சொற்றம் உறவுகளை, கனவுகளை, எதிர்பார்ப்புக்களை எல்லாம் விட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என்று கூண்டோடு தப்பி ஓடி, கடலிலும், அலைகளிலும் பல உயிர் உறவுகளைப் பரிதாபமாகப் பலிகொடுத்துவிட்டு இன்று அன்னிய நாடுகளிலே அகதிகளாக உறைவிடம் தேடியுள்ள 10 இலட்சம் தமிழர்களில் தாயகத்திற்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் மக்கள் வெறும் 5% தானா?.

அடிமைத் தளைகளை தகர்த்தெறிந்து ஏழ்மையும், அறியாமையும் நீக்கி இல்லாமையும், போதாமையும் ஒழித்து, பேதமும், பிளவுகளும் நீக்கி, பிறரைத் தாழ்த்தாமல், பிறர்தாழ் விழாமல், சுரண்டாமல், சுரண்டப்படாமல் தாம் உழைத்த உழைப்பின் பயனை மட்டுமே அனுபவித்து விடுதலைபெற்ற பேரானந்தத் தோடு வாழவிரும்பும் மக்கள் தமிழர்களில் 5% தானா?

எம்மை அடக்க வந்த பீரங்கிகளை அழித்து, பல்குழல் துப்பாக்கிகளை துவம்சம்செய்து, வானத்திலிருந்து குண்டு மழை பொழிந்து அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்த கோழைத்தனங்களை குண்டு வீசியளித்து, காட்டாற்று வெள்ளங்களாக தரைவளியே நகர்ந்து எமது வாழ்வை, வளங்களை சாம்பலாக்கிய பேய்க் கூட்டத்தின் நிழல் இனி என்றுமே எமது வாழ்வில் பட இடமளிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி போராடிவரும் வீர பரம்பரையினர் வெறும் 5% மட்டுமா?.

வேட்டுக்கேட்டால் மிரண்டு ஓடிவிடுவார்கள், இவர்கள் சிறை என்றவுடன் சிந்தை குளப்பி சிறு நரிகள் போல் குலைநடுங்க ஓடுவார்கள், இவர்கள் இழந்த அரசை, இனி இவர்கள் மீட்பதாவது, இவர்கள் ஒன்றுபட்டு எம்மை எதிர்ப்பதாவது, என்று இறுமாப்போடு இருந்த சிங்கள இனவெறியினரை கதிகலங்க வைத்த வீரத்தாய்க் குலத்தின் செல்வங்களும் இந்த 5% ல் அடங்குகின்றனரா?

இயற்கை வளம் கொஞ்சுகின்ற எங்கள் தமிழ் ஈழத்திருநாட்டின் வழங்களைப் பெருக்கி,விலைவாசி ஏற்றங்களைத் தடுத்து, கள்ள வாணிபம், கொள்ளை லாபம், குறுக்கு வழிகளில் கலப்படம் போன்ற கேடுகளைக் களைந்து, நல்லாட்சியும; ஒழுங்கும், நல்லொழுக்கமும் நிறைந்த நவீன தொழில் நுட்பம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் கனவோடு கண்வழித்துத், கண் தூங்குகின்ற தமிழர்கள் வெறும் 5% தானா?

உச்சிவெயிலிலும் உழைத்து வாழ்ந்த உழவனும், பல தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் உற்பத்திசெய்த பாட்டாளிகளும், சிறுவர் சிறுமியர்களுக்கு அறிவுக் கண்களைத் திறக்க கல்வித் தொண்டாற்றிய ஆசிரியர்களும், நோய்நொடி நீங்கி நல்ல உடல்வளத்தோடு வாழ உதவிய மருத்தவத் துறையினரும், காட்டு வெள்ளத்தை அடக்கி நீர்வளத்தைத் தேக்கி நிலவளம் பெருக்கிய பொறியியலாளர்களும், நல்ல நாட்டு நிர்வாகத்திற்காகப் பல துறைகளில் சேவைபுரிந்த அரச சேவையினரும் நிறைந்துள்ள தமிழர் சமூகத்தில் 5% தானா விடுதலைத் தாகமுடையவர்கள்?.

வாழ்விடமில்லாமல் ஈழத்தில் கரை ஒதுங்கியவர்களின் வாரிசுகள் ஆதிக்க வெறியராகி இன்று தமிழினவெறி தலைக்கேறி கடந்த 60 வருடங்களாக தமிழர்களுக்கு கொடுத்த இன்னல்கள் எப்படி இவர்களோடு வாழமுடியும் என்ற எண்ணத்தைத் தமிழர்களுக்குக் கொடுக்க முடியும்.

தமிழின் தொன்மையை, அதன் மாண்பை உய்த்துணர விரும்பாது தமிழர்களின் தொழில் வாய்ப்புக்கள், நிலம், கல்வி என்று படிப்படியாகத் திட்டமிட்டுப் பறித்தவர்களோடு இனி எப்படி ஒரு வாழ்வு அமையமுடியும். இங்கே சர்வதேசத்தினரின் குறைபுத்தி பேதலித் தனங்களே வெளிப்படுகின்றன.

ஆனால் அடிமைத்தனத்தையும், சிங்கள காட்டுமிராண்டித்தனங்களையும் ஏற்று, சகித்து தமிழின அடையாளத்தை விட்டுக்கொடுத்து, வாழவிரும்பும் ஆண்ட பரம்பரை நாம் அல்ல, என்று ஓயாது உலகிற்கு கூறிக்கொள்ளும் கால கட்டத்திலேயே நாம் வாழ்கின்றோம். அமெரிக்கா விட்டிருப்பது ஒரு சவால் என்றே எடுத்துக் கொள்வோம்.

கிழக்குத் தீமோரின் வீடுதலைப் போர்க் கால கட்டத்திலேயும் இப்படியான அடிஅத்திவாரமற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பொதுமக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது 100% மான மக்களும் தமக்கு இந்தோனிசியாவிலிருந்து விடுதலைவேண்டுமென்ற தமது உள்ளக்கிடக்கையையே வெளிப்படுத்தினார்கள்.

மக்கள் வெளிப்படுத்திய இந்த ஆவலின் காரணமாகவே கிழக்குத் தீமோர் என்கின்ற நாடு சர்வதேசத்தினராலும் அங்கீகரிக்கப்பட்டது.

எமது தமிழ் ஈழத் திருநாட்டிலும் பொது வாக்கெடுப்பு ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகும்வரை எமது ஆயுதப்போரும் மக்கள் போராட்டங்களும் தொய்வின்றித் துணிபும் உரமும்பெற்று பொங்கி வளிந்த வண்ணம் தொடரவேண்டும்.

இன்று உலகமெங்கும் கொண்டாடப் படுகின்ற பொங்குதமிழ் நிகழ்ச்சிகளின் உள்நோக்கமே மக்களின் அபிலாசைகள் ஓங்கி ஒலிப்பதற்கு தளமமைத்து தருவதுதான். மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, தனி மனித சுதந்திரமும; ஐனநாயகமும் பேணப்படும் இந் நாடுகளில் வாழும் எமக்கு பொருளாதார வளங்களைப் பெருக்கும் சந்தர்ப்பங்கள் மட்டுமல்ல எமது சுயமரியாதை நிறைந்த சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்தவல்ல வாய்ப்புகளும் நிறைந்து கிடக்கின்றன.

5% என்று எம்மை அவமரியாதை செய்த கூற்றிற்கு ஆயிரமாயிரமாகத் திரண்டுவந்து பதில் கொடுக்கும் சந்தர்ப்பம் பொங்கு தமிழ் நிகழ்வால் உருவாக்கப்படுகின்றது. எமது வாழ்நாளில் கிடைக்கின்ற பெருமைமிகு வாய்ப்பு இது என்றே கொள்ளவேண்டும். எமது எதிரிகளுக்கும், எமது இனத்தை விலைபேசி வயிறு வளர்க்கும் கூட்டத்தினருக்கும் நீங்கள் கொடுக்கப் போகின்ற பதில் எமது ''சுயநிர்ணய உரிமைகளின் அங்கீகாரமொன்றே'' எமது நிலைப்பாடு என்பதுதான்.

UK ல் வாழும் 150,000 தமிழர்களும் இப் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் முடிவான நிலைப்பாட்டை கோரிக்கைகளை உரக்க உலகிற்கு கூறுவது உங்கள் தலையாய கடமையாகும்.

ஆடித் திங்கள் 12ம் நாள் சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு அலைஅலையாய் வாருங்கள்.

''பொங்கு தமிழை'' தமிழர்களின் பெருவிழாவாகக் கொண்டாடி ஆனந்தக் கூத்தாடுவோம்.

இடம்: Richardson Evans Playing Field, Rohamton Vale, London SW15 3PQ
நேரம்: 3.00 pm-------- July ,12 ,2008


Comments