இந்தியாவின் ஈழத் தமிழர் மீதான கரிசனை மாயையும் உண்மையும்

சமீபத்தில் இந்தியாவின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா குறித்த ஊடக அக்கறை அதிகரித்தது.

இந்தியா அவ்வப்போது இலங்கை குறித்து தெரிவிக்கும் அபிப்பிராயங்கள் எல்லாமே மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையவை போன்ற தோற்றமொன்று நம் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது.

பின்னர் சில நாட்கள் போக எல்லாமே புஸ்வாணமாகி விடுகின்றன.

அப்படியான ஒன்றுதான், சமீபத்தில் இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வந்து சென்ற போதும் எற்பட்டது.

அந்த வருகை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அதில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் இடம்பெற்றிருந்ததுதான்.

சில வருடங்களிற்கு முன்னர் விடுதலைப் புலிகள் போதைவஸ்து மூலம் நிதி சேகரித்து வருகின்றனர் என்று கூறியவரும், கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தவருமான அதே நாராயணன்தான் தற்போது இந்தியா ஈழத் தமிழர் நலன் குறித்து கரிசனையுடன் இருப்பதாக கூறிச் சென்றிருக்கிறார்.

அதனைக் கேட்ட நம்வர்கள் சிலரும் உச்சி குளிர்ந்து போயிருக்கின்றனர்.

கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பேரணியை நடாத்தியிருந்து.

அது தொடர்பாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக ஏற்பாட்டாளர், இந்திய மத்திய அரசு தமிழகத் தமிழர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, இந்திய ஆளும் வர்க்கம் இதில் தமிழகத்தை புறக்கணிக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மத்திய அரசு தனது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு மாநில அரசின் குடிமக்களாகிய தமிழக மக்களின் நலன்களையே ஒரு பொருட்டாக மதிக்காத போது, ஈழத் தமிழர்களின் நலன்களையா மதிக்கப் போகின்றது?

இந்தியா நீண்டகாலமாக நமது அரசியல்வாதிகளுக்கு சொல்லி வரும் செய்தி, நாங்கள் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையாக இருக்கின்றோம். அவர்களின் பாதுகாப்பில் எங்களுக்கு அக்கறை உண்டு. இந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் வடிவம்தான் இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம்.

அந்த காலத்தில் இந்தியாவின் ஈழத் தமிழர் அக்கறையானது, தான் விரும்பும் ஒன்றை ஈழத் தமிழர்கள் மேல் திணிப்பதாக இருந்தது.

அது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இன்றுவரை இந்தியா வெறுமனே எந்தவொரு அரசியல் பெறுமதியுமற்ற வகையில் இந்த வார்த்தையை பிரயோகித்து வருகின்றது.


அதன் கபட நோக்கத்தை விளங்கிக்கொள்ளாமல் நம்வர்கள் சிலரும் இந்தியா ஏதோ பெரிதாக வெட்டி விழுத்திவிடப் போவதாக எண்ணி குதிக்கின்றனர்.

சிறிலங்கா அரசு பேச்சுவார்தையின் அடித்தளமாக இருந்த இராணுவ வலுச் சமநிலையை சீர்குலைக்கும் நோக்கில் நில ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேற்கொண்ட போதே, அதுவரை நடைமுறையில் இருந்த அனைத்து விடயங்களும் முடிவுக்கு வந்துவிட்டன.

அதன்போது ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளதாக கூறும் இந்தியா எந்தவிதமான நடவடிக்கைளையும் எடுக்கவில்லை.

பின்னர் ஒரு தலைப்பட்சமாக சிங்களம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகிய போதும் இந்தியா அது குறித்து ஒரு சில அபிப்பிராயங்களுடன் நிறுத்திக்கொண்டது.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருந்த வடகிழக்கு இணைப்பை சிங்களம் தகர்த்த போதும் இந்தியா அது குறித்து வழமைபோல் சில வாய்ச்சவடால்களுடன் நிறுத்திக் கொண்டது.

இப்படி ஈழத் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகும் போதெல்லாம் அதனை எந்த வகையிலும் தடுக்க திராணியற்றிருக்கும் இந்தியாவிடம் இருந்து ஈழத் தமிழர்கள் எதை எதிர்பார்ப்பது?

இந்தியாவிற்கு எப்போது ஈழத் தமிழர் மீது அக்கறை வருகின்றது என்று பார்ப்போமானால், சிங்களம் இராணுவ தேவைகளுக்காக பாக்கிஸ்தான், சீனா ஆகியவற்றை நோக்கி சாயும் போது மட்டுமே, என்றுமில்லாதவாறு ஈழத்தமிழர் மீது இந்தியாவிற்கு அக்கறை வந்து விடுகின்றது.

இந்த பின்புலத்தில்தான் சமீபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறிய ஆதரவு வார்த்தைகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்திய உயர்மட்டக்குழுவின் திடீர் வருகை குறித்த பல்வேறு ஊடக அபிப்பிராயங்கள் உண்டு. அதில் எது சரி பிழை என்பது அவரவரது அரசியல் நிலைப்பாடுகளைப் பொறுத்தது.

விரைவில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மகாநாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியா, சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க முயல்வதாகவே பல தமிழ் அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர்.

இதில் உண்மை இருக்கலாம். ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு சாதகமான அழுத்தங்களா ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

சமீப காலமாக சிங்களம், இந்தியாவின் பிராந்திய அரசியல் நலன்களுடன் நேரடியாக மோதிவரும் பாகிஸ்தான். சீனா ஆகிவற்றிடமிருந்து அதிகளவில் ஆயுத உதவிகளை பெற்று வருவதால் கலக்கமடைந்திருக்கும் இந்தியா அதனை மட்டுப்படுத்துவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றது.

ஏலவே இது குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் சிறிலங்கா அரசை எச்சரித்திருந்ததையும் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் மீறி சிங்களம் செயலாற்றி வரும் சூழலில்தான் இந்த சந்தர்ப்பத்தை நாராயணன் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றார்.

தற்போது மகிந்த நிர்வாகம் மிகவும் உற்சாகத்துடன் முன்னெடுத்து வரும் யுத்தம் எதுவரை போகும், அதனை எதுவரை புலிகள் அனுமதிப்பர் என்பது குறித்து இந்தியாவிடம் சில தெளிவான அவதானங்கள் உண்டு.

மேற்கு போன்று விடுதலைப் புலிகள் மீது ஒரு சில அழுத்தங்களை பிரயோகித்து விட்டு அமைதி கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை.

இந்தியா சதா தனது புலனாய்வுப் பிரிவின் மூலம் இலங்கை நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருகின்றது.

அந்த பின்புலத்தில்தான் இந்த யுத்தத்தின் எதிர்விளைவுகள் குறித்து கூடுதல் கவனம் கொள்கின்றது.

எனவே ஆகக்குறைந்தது தான் விரும்பும் ஒரு தீர்வையாவது இந்தச் சூழலில் கொண்டுவர வெண்டுமென்ற ஈடுபாடு இந்தியாவிற்கு இருக்கலாம். ஆனால் அதற்கான புறச்சூழல் இலங்கையில் தற்போது இல்லாமலிருப்பதுதான் இந்தியா எதிர்கொள்ளும் நெருக்கடி.

நோர்வேயின் இணக்க முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நிலைமைகள் முற்றிலும் இந்தியாவிற்கு சாதகமாக அமையலாம் என்ற கணிப்பு இந்தியாவிடம் இருந்திருக்கலாம்.

ஆனால் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியமை. வடக்கிலும் எந்தவொரு பாரிய தாக்குதல்களை முன்னெடுக்காமை, ஒருவகையில் பலவீனமாக இருப்பதான தோற்றத்தையே தொடர்ந்தும் காட்டி வருகின்றமை போன்ற தன்மைகள், இந்தியாவால் சிங்களத்தை திருப்பி பழைய இடத்திற்கு தள்ள முடியாத நிலைமையை தோற்றுவித்துள்ளது.

எனவே சிங்களம் தொடர்ந்தும் உற்சாகமாக யுத்தத்தை முன்னெடுக்கும் சூழலில் தனக்கு சாதகமான சூழல் வரும் வரை இந்தியா மீண்டும் காத்திருக்கும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட சூழலில் சிங்களத்தையும் திருப்திப்படுத்தி, தமிழர் தரப்பினையும் திருப்திப்படுத்துவதற்கான அரசியல் காய்நகர்;தல்களில் அது தற்போது ஈடுபட்டு வருகின்றது.

இந்தியா ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையாக இருக்கும் ஒரு நாடு என்பதை காட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே, ஈழத் தமிழர்களை அகதிகளாக உள்வாங்கும் கொள்கையை தொடர்ந்தும் இந்தியா கடைப்பிடித்து வருகின்றது.

இந்தியா தனது, ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பான அடிப்படைக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாத வரையில் எந்தவொரு சாதகமான சூழலும் இந்தியாவால் வரப் போவதில்லை.

இந்தியா குறித்து தெளிவற்றிருக்கும் நம்வர்கள் சிலர் இராஜதந்திர அரசியலின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள முயல வேண்டும்.

இராஜதந்திரம் என்பது எப்போதும் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்பதல்ல.

திரும்பத் திரும்ப வார்தைகளை நம்பி காலத்தை கழிப்பதுமல்ல.

-தாரகா-

Comments