பேரினவாதத்துக்கு பேரிடி கொடுத்துள்ள பொங்கு தமிழ் பேரெழுச்சி

உலகெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள் தமிம் மக்களின் ஒற்றுமையின் பலத்தை சர்வதேசத்துக்கு இன்னொரு தடவை இடித்துரைத்திருக்கின்றன.

எவ்வளவுதான் தடை வரினும் தமது கொள்கைகள் மாறாது என்றும் எழுச்சி வீழாது என்றும் தமது உறுதியை தமிழினம் பன்னாட்டு சமூகத்துக்கு ஓங்கி ஒலித்திருக்கிறது.

புலிகள் களத்திலே எதிரிக்கு பதிலடி கொடுப்பது போலவே புலம்பெயர்ந்துள்ள மக்களும் தமக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களுக்கெல்லாம் பதிலடியாக பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்டு தமது ஒற்றுமையை பறைசாற்றியிருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் விடுதலைப் புலிகளை மதிப்பது போலவே தாம் வாழும் நாடுகளின் சட்டவரையறைகளை மதித்து மேற்கொண்டுள்ள இந்த எழுச்சி நிகழ்வுகள், அந்நாட்டு மக்களின் பார்வையை படிப்படியாக ஈழப் பிரச்சினையின் பக்கம் திருப்பியுள்ளன என்பது இம்முறை பொங்கு தமிழால் ஏற்பட்டுள்ள இன்னொரு திருப்பம் எனலாம்.

இது இவ்வாறிருக்க, இம்முறை பொங்கு தமிழ் வித்தியாசமான வெற்றியையும் கண்டிருக்கிறது.

அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களிலெல்லாம் தமது ஒற்றுமையையும் தனித்தேசத்திற்கான தமது தாகத்தையும் வெளிப்படுத்திவந்தவர்கள், இம்முறை சிங்கள அரசின் பிரசாரத்தை முறியடித்து அதன் பொய்ப் பரப்புரை என்ற முகமூடியை முற்றாக கிழித்தெழிந்திருக்கிறார்கள்.

தமிழினம் தனது அபிலாசைகளை வலியுறுத்தியதற்கு மேலாக சிங்கள தேசத்தின் பயங்கரவாதத்தை தருணம் பார்த்து தோலுரித்து காட்டியமை, தற்போதைய அரச தலைவர் மகிந்த ராபக்சவுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இம்மாத இறுதியில் சிறிலங்காவில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான இந்த மாநாடு மாலைதீவில் நடைபெறுவதாக முன்னர் ஒழுங்காகியிருந்தபோதும், மாநாட்டை நடத்துவதற்காக செலவீன பிரச்சினையால் அந்நாடு இது விடயத்தில் பின்னடிக்க, தான் ஏதோ மிகப்பெரிய செல்வந்த நாடு போல அந்த வாய்ப்பை சிறிலங்கா பெற்றுக்கொண்டது.

எவ்வளவு கோடி செலவானாலும் இந்த மாநாட்டை சிறிலங்காவில் நடத்தவேண்டுமென மகிந்த ராஜபக்ச விரும்பியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அதாவது, மனித உரிமைகள் மீறல் விடயத்தில் தற்போது சர்வதேசத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா அந்த சிக்கலில் இருந்து எழுந்து சற்று மூச்சுவிடக்கூடிய நிலைமைக்கு வருவதானால் ஏதோ ஒரு விதத்தில் சர்வதேச ஆதரவை மீண்டும் தன்பக்கம் திருப்பவேண்டும்.

தற்போது வடக்கில் ஆரம்பித்திருக்கும் யுத்தத்தில் கிழக்கு போன்றதொரு முடிவை எட்டிவிட்டால் அதனை முன்வைத்து, சார்க் மாநாட்டை தனது நாட்டுக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான ஒரு பிரசார கூட்டமாக்கி விடலாம் என்பது மகிந்தவின் கணிப்பு.

அதற்காக இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்துக்குள் வடக்கை முற்றாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என இலக்கு வைத்து மகிந்த - கோத்தபாய - பொன்சேகா கூட்டணி ஆரம்பித்த யுத்தம் மன்னாரிலும் மணலாறிலும் மல்லாக்க படுத்துக்கிடக்கிறது. அதற்கு அப்பால் அசைவதாக தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்று முன்னர் அறிக்கை விட்ட இராணுவத் தளபதியும் இன்னும் ஒரு வருடம் தந்தால் வேலையை முடிக்கலாம் என்று கட்டட ஒப்பந்தக்காரர் போல மகிந்தவின் முன்வந்து கையை பிசைந்துகொண்டு நிற்கிறார்.

ஆனால், நடைபெறப்போகும் சார்க் மாநாட்டில் தமக்கு வடக்கில் ஏற்படும் தோல்வியை சர்வதேசத்துக்கு மூடிமறைத்து மகிந்த வீரவசனம் பேசவதற்கு ஏற்ற மாதிரி, புலிகளை மரபு ரீதியான இராணுவ போர் முறையிலிருந்து முடக்கிவிட்டோம் என்ற அறிக்கையை விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தோரணையில் இராணுவ தலைமை விடுத்திருக்கிறது.

இவ்வாறு பல்வேறு சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தியுள்ள எழுச்சிப் போராட்டம் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்க் மாநாட்டை தனது பிரசார கூட்டமாக்குவதற்கு எண்ணிய சிறிலங்காவுக்கு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொங்கு தமிழ் பெரும் பொறியாக மாறியிருப்பது கண்டு மகிந்த மிரண்டு போயுள்ளார்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கிவரும் தனது அரசின் போக்கை பற்றியும் சர்வதேசத்துக்கு தொடர்ந்து பிரசாரம் செய்து தனது அரசுக்கு எதிராக மேலும் மேலும் பன்னாட்டு அழுத்தத்தை ஏற்படுத்தும் தமிழர்களின் போராட்டத்தால் அரச தலைவர் சீற்றமடைந்திருக்கிறார்.

தனது வெளிவிவகார அமைச்சின் ஊடாக வெளிநாட்டு தூதரகங்களின் சீறிப்பாய்ந்துள்ள மகிந்த, இப்படியான பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசுகளை அனுமதியளிக்கவிட வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்.

பதிலாக வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்களை திரண்டெழுந்து தமிழ் மக்களுக்கு எதிராக பரப்புரை போராட்டங்களில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை நடந்தது போகட்டும். இனிமேலாவது விழிப்பாக இருந்து தமிழின எழுச்சிப் போராட்டங்களை நடத்துவதற்கு வெளிநாட்டு அரசுகள் அனுமதியளிக்க விடவேண்டாம் எனக்கூறி, எதிர்வரும் 23 ஆம் திகதி கறுப்பு ஜூலை நினைவுநாளன்று தமிழர் எழுச்சி நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுமாறும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி சார்க் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் 23 ஆம் திகதி நடைபெறக்கூடிய கறுப்பு ஜூலை நினைவை ஒட்டிய எழுச்சி நிகழ்வுகள் தனது அரசுக்கு பாதகமாக அமையும் என்று அரச தலைவர் மகிந்த தெரிவித்ததிலிருந்து, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் ஏற்கனவே, மகிந்தவின் சார்க் பிரசார கூட்டத்துக்கு மரண அடி கொடுத்திருக்கின்றன என்ற விடயம் தெளிவாகியுள்ளது.

இதிலிருந்து தெளிவாகும் விடயம் யாதெனில், களத்திலே இனியொரு முன்நகர்வை ஏற்படுத்தவிடாது அரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலை முடக்கியுள்ள விடுதலைப் புலிகளும் வெளிநாடுகளில் எழுச்சி நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து மகிந்த அரசின் சர்வதேச பிரசாரத்தை முடக்கியுள்ள புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள். களத்தில் உள்ள மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஒரே இலக்கினில் இணைந்திருக்கிறார்கள் என்பதே ஆகும்.

இதுவே இன்றைய காலத்தின் தேவை.

இராணுவ பலமும் மக்களின் எழுச்சியும் ஒரு நேர்கோட்டில் இணைந்திருந்த போராட்டங்கள் தோற்றதாக சரித்திரமே இல்லை.

இன்று பொங்கு தமிழ் மூலம் சர்வதேசத்தை தமிழினம் நோக்கி திரும்பி பார்க்கவைத்த மக்கள், நாளை இன்னொரு எழுச்சி மூலம் சர்வதேசம் எமது கருத்தையும் கேட்கும் வகையில் போராட வேண்டும்.

அதன் மூலம், தேயிலைக்காக சிறிலங்காவை பார்க்கும் சர்வதேசம் எங்கள் தேவைக்காகவும் திரும்பிப் பார்க்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சார்க் உச்சி மாநாட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு சார்பாக நடத்த முயன்ற ஒரு நாட்டுத்தலைவரின் திட்டத்துக்கு தமிழினம் இன்று வேட்டு வைத்திருக்கிறது என்றால் இனி, இனி நடைபெறப்போகும் எழுச்சிகள் இமாலய வெற்றிகளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

களத்திலே தமிழ் மக்கள் முழுநேரப் போராளிகளாக அளப்பரிய தியாகங்களை புரிந்துகொண்டிருக்கையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் பகுதி நேரமாக மேற்கொள்ளும் இந்த எழுச்சி நிகழ்வுகளில் ஒவ்வொரு தமிழனும் தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஓவ்வொரு தமிழனும் தனக்காக மாத்திரம் போராடினால் போதும். எமது இலக்கு இலகுவில் கைகளில் கிடைத்துவிடும். இந்த தாரக மந்திரத்தை கடந்த காலங்களில் ஏற்கத்தவறிய எமது இனத்தின் பிழையினால்தான் இன்று நாடு நாடாக போரிட்டுத்தான் எமது உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடுகதி வேகத்தில் செல்லும் காலப்பறவையின் இறக்கைகளில் எமது இறப்புக்களையும் இழப்புக்களையும் மட்டுமே எழுதி வைக்காமல் எமது விடுதலை வரிகளை எழுதி வைப்போம்.

-ப.தெய்வீகன்-

Comments