வதந்திகளை நம்பவேண்டாம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்

ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் "பொய்மையில் இருந்து உண்மைக்கு" எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்பிற்குரிய தமிழீழ மக்களே!

எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான்.

மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளான்.

உளவியல் போரின் இலக்காக மக்களை தேர்ந்தெடுத்திருக்கும் எதிரி, மக்களிடையே வதந்திகளை பரப்பி மனங்களை குழப்பி வருகின்றான்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே. இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என எதிரி கணக்கிடுகின்றான்.

எனவே, மக்களின் மனரீதியான தைரியத்தை கண்டு சரிப்பதன் மூலம் தமிழர் போராட்டத்தை அழிக்கமுடியும் என எண்ணி வதந்திகளை பரப்பி வருகின்றான்.

இந்த வதந்திகளின் காவு சக்தியாக நாம் இருந்தோமானால், அது நம் இனத்தை பலவீனமாக்கும் செயலுக்கு நாமே துணை போவதாக அமையும்.

எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்.

நம்பிக்கையீனங்களை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முயலும் எதிரியின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும்.

வதந்திகள் கொடிய பாம்பைவிட ஆபத்தானவை. உண்மை ஊர் சுற்றி முடிப்பதற்குள் வதந்திகள் உலகைச் சுற்றி வந்துவிடும்.

எனவே, ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு, பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும்.

இதுவே எதிரியின் உளவியல் போரை வெற்றிகொண்டு தமிழர் தாய் மண்ணை விடுவித்து பலமான தேசமாக்க துணைநிற்கும்.

"இருள் முடிந்தே தீரும் பொழுது புலர்ந்தே தீரும்"

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"


என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments