நொந்துபோன ஈழத் தமிழர்களை நோகடிப்பது வெந்தபுண்ணில் வேல் செருகுவது ஆகும்.- பழ. நெடுமாறன்

"தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆவணங்களைப் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றைப் பரி சீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாதவர்கள் நிலம் மற்றும் வீடுவாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்கவேண்டும். அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது" என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும்.

சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் சிங்கள இனவெறியர்களால் விரட்டி யடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத்தமிழர்களில் பலர் அரசு அமைத்திருக்கிற அகதி முகாம்களில் போதுமான உணவின்றியும் சுகாதாரக் கல்வி வசதிகள் இல்லாமலும் வாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழி எதையும் தமிழக - இந்திய அரசுகள் செய்ய வில்லை.

அகதிகளின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வந்தபோது இந்திய அரசு அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.

அரசு உதவியை எதிர்பாராமல் தங்களுடைய சொந்த முயற்சியின் பேரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் இன்னொரு வகையினர்.

தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் மானத்துடன் வாழவும் அவர்கள் தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சிலர் வீடுகளை வாங்கியும் குடியிருந்து வருகிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை திரும்பிய பிறகு இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கப் போவதில்லை. தங்கள் நாட்டிற்கு நிச்சயமாகத் திரும்பிப் போய்விடுவார்கள்.

நமது நிழலில் அண்டியிருக்க வந்த நமது சகோதரர்களை விரட்டியடிப்பதற்கு கருணாநிதி முற்படுகிறார்.

தமிழகத்தைச் சுரண்டவந்த மார்வாடியும், குஜராத்தியும், மலையாளியும் பிறரும் தமிழகத்தில் நிலம் வீடுகள் வாங்கிக் குவிக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை விவசாயிகளிடமிருந்து பறித்துத் தர கருணாநிதி கொஞ்சமும் தயங்கவில்லை.

அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் கொள்ளையடித்துத் திரட்டியுள்ள பணத்தில் தமிழகமெங்கும் நிலம் வீடு வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார��
�கள். ஆனால் இதற்கெல்லாம் தடைவிதிக்க கருணாநிதி அரசு முன்வரவில்லை.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐய்ரோப்பிய நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அங்கு உழைத்து சம்பாதித்த பணத்தில் வீடுகள் வாங்க அந்த அரசுகள் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை.

ஆனால் தமிழ்நாட்டை தங்களது இரண்டாம் தாயகமாகக் கருதிவந்த ஈழத்தமிழர்களை இங்கிருந்து விரட்டுவதற்கு கருணாநிதி முற்படுகிறார்.

முன்பு இவர் முதலமைச்சராக இருந்தபோது "முகாம்களுக்கு வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் பெயர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடுகளை வாடகைக்குக் கொடுப்பவர்களும் பதிவு செய்ய வேண்டும்" என ஆணை பிறப்பித்தார்.

இதன் விளைவாக அகதி களுக்கு வீடுதர யாரும் முன்வரவில்லை. வீடுகளின் வாடகையும் கண்டபடி உயர்த்தப்பட்டது. பதிவு செய்வதற்கு காவல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இன்னமும் இந்தத் துயரம் தொடர்கிறது.

போர்க்களத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து தனியார் மருத்துவமனைகளிலிருந்த ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கைது செய்து சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அவர்களை வேலூர் கோட்டை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவரும் கருணாநிதியே என்பதை யாரும் மறக்கவில்லை.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பல்வேறு துன்பங்களை தொடர்ந்து தரும் கருணாநிதியின் போக்கை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது.

தென்செய்தி


Comments