சிங்களத்தின் அசைவிற்கு ஆப்பு வைத்த வெடியோசை

சிங்கள தேசத்தின் அடக்குமுறை சக்திகளின் அசைவிற்கு ஆப்பு வைத்த அந்த வெடியோசையை இந்த மண் இலகுவில் மறந்துவிட முடியாது.

துப்பாக்கி முனையில் பிறந்திருந்த ஈழ விடுதலைப் போராட்டக் குழந்தையை அப்போதுதான் சிங்கள தேசம் அதிர்ச்சியோடு பார்த்தது எனலாம்.

1983 யூலை 23 நள்ளிரவை அண்டிய நேரம் நிகழ்ந்த அச்சம்பவம் எமது விடுதலைப் போருக்கு ஒரு மைல்கல்லாய் அமைந்தது.

அடக்குமுறை வழிமுறையை பிரயோகித்து தமிழினத்தின் சுதந்திர உணர்வை மழுங்கடித்துவிட முயன்ற சிங்களத்தின் போக்கிற்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்த எமது விடுதலைப்படை தன் அதிர்ச்சியூட்டும் அசாத்தியமான தாக்குதல்களால் சிங்களப் படைகளுக்கு அதிர்ச்சிகளைக் கொடுக்கத் தொடங்கிய போது.

அந்த வகையில் 1983 யூலை 23 ஆம் திகதி இரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற சிங்களப் படையின் வாகனத் தொடரணி மீதான கண்ணிவெடித் தாக்குதல் எமது வரலாற்றில் பல முக்கிய பதிவுகளை தந்தது எனலாம்.

முதலாவதாக அந்தத் தாக்குதலில் முக்கியத்துவம், அடுத்ததாக அந்தத் தாக்குதல் வெளிக்காட்டிய விடுதலைப் புலிகளின் பலம் பற்றிய செய்தி, அடுத்து சிங்கள இனத்தின் ஆழப்பதிந்திருந்த இனவாத மனநிலையை வெளிப்படுத்திய சம்பவத்தை தூண்டிய விடயமாகவும் அது அமைந்திருந்தது.

அடுத்து அத்தாக்குதல் எமது மூத்த போராளி ஒருவரை விதையாகக் கொடுத்த சம்பவமும் பதிவாகியது. முதலாவதாக அத்தாக்குதலின் முக்கியத்துவம் பற்றி இங்கு பார்ப்போமேயானால் அது ஒரு கரந்தடி தாக்குதல் என்பதற்கப்பால் ஒரு கணிசமான படையினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முதலாவது பெரிய தாக்குதலாக அமைந்திருந்தது.

இத்தாக்குதல் குறித்து இத்தாக்குதலில் பங்குகொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் எழுதிய சில விபரங்களை இவ்விடத்தில் பதிவாக்கிக் கொள்ளல் பொருத்தமாக இருக்கும்.

'1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒரு டெலிக்கா வான் வந்து கொண்டிருந்தது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் எல்.எம்.ஜி.யுடன் கம்பீரமாக உட்காந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான், வானின் பிற்பகுதியில் தம்பி (தமிழீழ தேசியத்தலைவர்) மற்றும் ஏனைய தோழர்கள்....."

கேணல் கிட்டு அவர்களின் மேற்சொன்ன கூற்றுக்கள் அத்தாக்குதலில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் குறித்த முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்தி நிற்கிறது.

யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி வீதியைச் சந்திக்கும் இடமாகிய தபால்பெட்டி சந்தியிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் இராணுவ வாகனங்களே அன்றைய தாக்குதல் திட்டத்தின் இலக்கு.

வழமையாக அந்த வாகனங்கள் வரும் நேரத்திற்கு முன்பாகவே அவை வந்துவிட அவசரமாக தாக்குதல் திட்டம் தயாராகி இடம்பெற சடுதியாக நின்ற இராணுவ வாகனங்களிற்கு அதிரடித் தாக்குதலை நடாத்தி அதில் 13 சிங்கள இராணுவத்தைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சம்பவம் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் திருப்புமுனையைத் தந்தது.

இச்சம்பவம் பற்றி விபரித்த கேணல் கிட்டு அவர்கள் '......செல்லக்கிளி அம்மான் றக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க, முன்னால் வரும் ஜீப்பிற்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டியைத் தாக்கி அதில் தப்புபவர்களை சுடுவதாக எமது திட்டம்..... நாம் ஜீப்பை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்படுகிறது. எமக்கு அதிர்ச்சி ஏன் அப்படி நடந்தது..... சிந்திக்க நேரமில்லை. நானும் என் னோடு நின்றவர்களும் சுடத் தொடங்கினோம்." என விபரித்து வரும் கேணல் கிட்டு அவர்கள் அத்தாக்குதலில் தேசியத் தலைவரின் தாக்குதல் திறன் குறித்து விபரிக்கையில்,

'ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் ஜி 3 வெடிக்கத் தொடங்கியது. ஜி 3 இல் இருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்கு தயாராக எழுந்த இராணுவத்தை வரிசையாக விழுத்தத் தொடங்கியது. சற்றும் எதிர்பாராமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்சநிலைக்குள் சிக்க வைத்து விட்டது.

ஆனால் இந்த எதிர்பாராத திருப்பமே இந்த தாக்குதலின் முழு வெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த ஒன்பது இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது" என்கிறார்.

முதலாவது பெரிய தாக்குதல், என்ற ரீதியில் முக்கியமாக பதிந்துவிட அந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை வெளிப்பாட்டை உலகிற்கு பறைசாற்றி நின்றதெனலாம். தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியை குறைத்து மதிப்பிட்ட சிங்களத்திற்கு தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அது பதிவானது.

அடுத்ததாக இத்தாக்குதலின் எதிரொலியாய் இனவாதத்தை தூண்டி விட்டு தமிழர்களை எழுந்த வேகத்தில் விழுத்திவிட சிங்களத் தலைமை முயன்ற சம்பவமும் யூலை இனப் படுகொலையாய் பதிந்தது. இச்சம்பவங்கள் பிற்காலத்தில் சிங்களத்தின் உண்மைத் தோற்றத்தை மிக வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன் தமிழரின் விடுதலைப் போராட்டப் பாதையை அவசியமாக்கியது எனலாம்.

அடுத்ததாக அத்தாக்குதலில் எமது மூத்த விடுதலைப் போராளிகளில் ஒருவரான லெப். செல்லக்கிளி அம்மானை இழந்த அச்சம்பவம் முக்கிய பதிவாகியது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் மக்களால் பெரிதும் அறியப்பட்ட வீரனாக இருந்த செல்லக்கிளி அம்மான் பல துணிகர அதிரடித் தாக்குதல்களால் பகைவனை திணறடித்திருக்கிறார். எதிரிப்படைகள் தமது புலனாய்வுப் பிரிவை முடுக்கிவிட்டு வலை விரித்துத் தேடும் அளவிற்கு இவர் எதிரிக்கு பெரும் சவாலாக இருந்துள்ளார். இவர் குறித்த நினைவுப் பதிவுகளை இவருடன் கூடநின்ற மூத்த போராளி ஒருவர் நினைவு கொள்கையில்,

'விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளங்களை பலமாக இடுவதில் இவர் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். விடுதலைப் போருக்கான முதலாவது துப்பாக்கியை பெறுவதற்கு தனது மாட்டினை விற்று பணத்தை முதலீடு செய்யும் அளவிற்கு அவரின் பங்களிப்பு இருந்தது. மற்றும் விடுதலைப் போராளிக்கு இருக்க வேண்டிய அத்தனை சாமர்த்தியங்களும் கைவரப் பெற்ற மதிநுட்பமான போராளியாகவே நாம் அவரைக் கண்டோம்.

பஸ்தியாம்பிள்ளை எனும் சிறிலங்காக் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்லக்கிளி அம்மானை கைது செய்யத் தனது சகாக்களுடன் சென்ற போது அவர்களை தனது சாதுரியத்தால் மடக்கி பஸ்தியாம்பிள்ளையின் ஆயுதத்தாலேயே அவரையும் அவரது சகாக்கள் மூவரையும் சுட்டுக்கொன்று விடுதலைப் போராட்டத்தின் தடைக்கல் ஒன்றை தகர்த்த பெருமை அவரைச் சாரும்" என்றார். இதுதவிர அவரது பல துணிகர செயல்களையும் அப்போராளி நினைவுபடுத்தினார்.

- க.ப.துசியந்தன் -
ஈழநாதம் (23.07.08)

Comments