தமிழர்களுக்கு தடை!

யாழ். குடாநாட்டிற்கு கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்துச் சேவைகள் இரண்டுவார காலத்திற்கு சிறிலங்கா அரசால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 23 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை இவ் இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டே இப்போக்குவரத்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கொழும்பின் பாதுகாப்பிற்குத் தமிழர்களால் அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் மகிந்த அரசாங்கத்தால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனக் கூறுவது தவறாகமாட்டாது.

அண்மையில் மேலகமக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் கொழும்பு வருவதைத்தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பகிரங்க வேண்டுகோள் ஒன்றைவிடுத்திருந்தார். இவ்வேண்டுகோள் அவர் விடுத்த போது பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. சில வெளிநாடுகள், சில சர்வதேச ஊடகங்கள் கூட இது குறித்த சற்று விசனம் தெரிவிக்கவே முற்பட்டன.

அதாவது இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்பட்டதேன்? இது தேவையான ஒன்றுதானா? இன ரீதியினாலான முரண்பாட்டை தீவிரமாக்குவதாக இது அமையமாட்டாதா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு வகையில் மனோகணேசன் குற்றம் காணப்பட்டார் என்றே கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் மனோகணேசன் இதற்குச் சரியான பதிலை அளித்தும் இருந்தார். அதாவது கொழும்பில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஏற்கனவே தமிழர் மீது இருந்த கெடுபிடி சார்க் உச்சி மாநாட்டுடன் மேலும் மேலும் தீவிரமாகி தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கும் சிறையில் அடைக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு எனறு அவர் தெரிவித்திருந்தார்.

அதனை மனோகணேசனை விமர்சனம் வெய்தவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ சிறிலங்கா அரசாங்கம் தற்பொழுது அதனை நிரூபணம் செய்யும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதெனலாம். அதாவது வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பிற்கும் வருவோரைத்தடை செய்ய முற்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமே யாழ். போக்குவரத்திற்கான இடைக்காலத் தடை விதிப்பாகும் . இத்தனைக்கும் யாழ். குடாநாடு ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக-சுமார்12 வருடங்கள் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதியாகும். அங்குள்ள மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அரசாங்கத்தால் பிரசாரம் செய்யப்படுவதுண்டு.

அத்தகையதொரு இடத்தில் இருந்து கொழும்பின் பாதுகாப்பிற்கு குறிப்பாகச் சார்க் மாநாட்டிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வரும் என் அரசாங்கம் கருதின் அதில் அர்த்தம் எதுவும் உண்டர்? இத்தகைய நடவடிக்கைக்குக் காரணம் ஏதுவும் உண்டா?

இதற்கு ஒரே காரணம் தமிழர்கள் எவரையுமே நம்புவதற்குச் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதே ஆகும். அதாவது தமது கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்தே புலிகள் முறைத் தெழுந்து விடுவார்கள் என்ற ஜயப்பாடே காரணமாகும். அவ்வாறு இல்லாதுவிடில் ஏன் பயணக்கட்டுபாடு.

சிறிலங்கா ஆட்சியாளருக்கு ஒன்று தெரியும். தமிழ் மக்களின் போராட்டத்தை ஆயுத ரீதியில் வெற்றி கொண்டு விடமுடியாது என்பது. அத்தோடு தமிழர் தாயகம் அவர்களுக்கு எப்பொழுதும் முட்படுகையாகவே தாயகத்தில் எங்கிருந்தும் முளைத்தெழுவர்கள் என்பதைக் குறிகாட்டுவதாகவே வீரச்சாவடைந்த வீரர்களும் விதைக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகத் தான் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் பகுத்தறிய முடியாது சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர் அனைவர்கள் மீதும் பிராயணத்தடையை மேற்கொள்ள முனைகிறது. தனது பிரசாரத்திற்கு முரணாகவும் நடந்து கொள்ள முனைகிறது. அதாவது புலிகள் வேறு தமிழர் வேறு எனக்கூறும் அரசாங்கம் நடவடிக்கைகளின் போது அனைத்துத்தமிழருக்கும் எதிராகவே செயற்பட்டுவருகின்றனர்.

இந்த யதார்த்தத்தை இன்று புரிந்து கொள்ள வேண்டியவர்கள் சர்வதேச சமூகத்தினரே. ஏனெனில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிச்சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு எதிரான உதவி எனக்கூறி வழங்கப்படும் உதவிகளை சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர். இதனால் உதவி புரிவோர் தமது உதவி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும.

ஈழநாதம்

Comments