தக்க வைக்கப்படும் போராட்டமே இறுதியில் வெற்றி பெறும்

வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் நடவடிக்கைகள் பல முனைகளின் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. முகமாலையில் கடைசியாக வாங்கிய அடியோடு குறிப்பிடக் கூடிய படை நகர்வுகள் எதனையும் சிறிலங்காப் படையினர் அப் பகுதியில் மேற்கொள்ளவில்லை. ஆனால் மன்னார், வவுனியா, மணலாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

மன்னாரில் இருந்து நகர்ந்து விடத்தல் தீவைக் கைப்பற்றி, அதன் பிறகு பூநகரி வரை முன்னேறி யாழ் குடாவுடன் பாதை அமைக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மன்னார் மாவட்டத்தில் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

வவுனியாவில் இருந்து பல முனைகளில் முன்னேறிய படையினர் பெரியமடு, மூன்றுமுறிப்பு போன்ற இடங்கள் வரை முன்னேறி சிறாட்டிக்குளம் வரை வந்துள்ளனர். மன்னாரில் சண்டை செய்யும் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்த நகர்வுகள் உள்ளன.

மறுபுறம் மணலாற்றிலும் முல்லைத்தீவை நோக்கி நகரும் நோக்கோடு இன்னும் ஒரு படை நடவடிக்கை இடம் பெறுகிறது. விடுதலைப் புலிகளை திசைதிருப்பும் வகையில் இந்த நடவடிக்கையை படையினர் மேற்கொண்டாலும் முடிந்தவரை முன்னேறி முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பது படையினரின் நோக்கமாக இருக்கின்றது.

கடந்த வாரங்களில் மன்னார் வவுனியாப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகள் சற்று வேகம் எடுத்திருந்தன. பல சிறிய கிராமங்கள் படையினரிடம் வீழ்ந்தன. ஆனால் அதற்கு முன்பு மடு, அடம்பன் போன்ற இடங்களைக் கைப்பற்றுவதற்கு பல மாதங்களாக சிறிலங்காப் படையினர் சண்டை செய்ய வேண்டி வந்தது.

குறிப்பாக மடுவைக் கைப்பற்ற படையினர் ஓராண்டு காலமாக சண்டை செய்தனர். மடுவில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவு வரை முன்னேறியும் பல மாதங்கள் அப் பகுதியில் சிறிலங்காப் படையினர் முடங்கிப் போய் கிடந்தனர். அடம்பனை மிக அண்மித்த பின்பும் அடம்பனை கைப்பற்ற படையினருக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது.

இப்படி சிறிலங்காப் படையினர் முடங்கிப் போய் இருந்ததானது, சிறிலங்காவின் தென்பகுதியில் சிறிலங்கா அரசு மீதான விமர்சனங்களை உருவாக்கி விட்டிருந்தது. ஆனால் மடுவைக் கைப்பற்றிய பின்பு சிறிலங்காப் படையினர் குறுகிய காலத்தில் பல கிராமங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

மடுவைக் கைப்பற்றிய கையோடு பல முனைகளில் முன்னகர்ந்த படையினர் பெரியமடுவையும், பெரியமடுவிற்கு கிழக்காக உள்ள மூன்றுமுறிப்பையும் கைப்பற்றியதோடு வடக்கு நோக்கி சிறாட்டிக்குளம் வரை நகர்ந்து ஒரு குறிப்பிட்ட பரப்பளவு உள்ள ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மன்னாரில் அடம்பனைக் கைப்பற்றிய பின்பு மாந்தை, பாப்பாமோட்டை போன்ற பகுதிகளைக் கைப்பற்றியபடி முன்னகர்ந்த படையினர் விடத்தல்தீவில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.

அத்துடன் வவுனியாவில் இருந்து முன்னேறிய படையினரும் மன்னாரில் இருந்து முன்னேறிய படையினரும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இணைந்து கொண்டனர். ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பின்பு ரணகோச என்ற நடவடிக்கையின் மூலம் சில இடங்களைப் படையினர் கைப்பற்றியிருந்தனர் அந்த இடங்களில் பெரும்பாலானவற்றை படையினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வேகமான முன்னகர்வுகள் தென்னிலங்கையில் மகிந்த அரசு மீதான விமர்சனங்களை குறைக்கச் செய்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்த அரசை ஆதரிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது. படையினரின் வெற்றி பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு, தன்னை உறுதிப்படுத்தி வருவதோடு, தமிழ் மக்களின் மனோபலத்தையும் உடைக்க மகிந்த அரசு முனைகின்றது.

ஆனால் மகிந்த அரசின் பல திட்டங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டன என்பதுதான் உண்மை.

இடங்களைக் கைப்பற்றுவதோடு, அதிகளவிலான விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கோடுதான் வன்னி மீதான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஆரம்பித்தது. பல முனைகளில் விடுதலைப் புலிகளை சண்டைக்கு இழுத்து ஒவ்வொரு முனையிலும் பல விடுதலைப் புலிகளைக் கொன்று, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி இல்லாது ஒழிப்பது சிறிலங்கா அரசின் முக்கியமான திட்டமாக இருக்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட களமுனைகளில் தினமும் சண்டை செய்வதன் மூலம் மாதத்திற்கு ஆயிரம் விடுதலைப் புலிகளையாவது அழித்து விடலாம் என்று கணக்கிட்டு படை நடவடிக்கையை ஆரம்பித்த சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வ தகவலின் படியே ஒவ்வொரு மாதமும் ஆயிரம் படையினரை களத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் நிற்கின்றது. புதிதாக ஆட்களைச் சேர்ப்பதற்கும், படையை விட்டு ஓடியவர்களை மீண்டும் படையில் இணைப்பதற்கும் சிறிலங்கா அரசு படாதபாடு பட்டுவருகிறது.

அதே வேளை விடுதலைப் புலிகள் தரப்பிலும் குறிப்பிடத்தக்க அளவிலான இழப்புக்கள் ஏற்படத்தான் செய்கின்றன. கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் தரப்பில் தினமும் ஆறு, ஏழு பேர் என்று வீரச்சாவடைந்து வருகின்றனர். ஆனால் இதே அளவு இழப்புக்களை விடுதலைப் புலிகள் ஏற்கனவே பலமுறை சந்தித்தும் தமது பலத்தை இழக்காது பேரெழிச்சியோடு அலையாய் எழுந்து வந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம்.

1997ஆம் ஆண்டில் இருந்து 2000ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுக் காலப் பகுதியில் ஏறக்குறைய ஏழாயிரத்தி ஐந்நூறு விடுதலைப் புலிகள் வீரச்சாவடைந்திருந்தார்கள். ஜெயசிக்குறு நடந்த 1997, 1998ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தினமும் சராசரி ஏழு விடுதலைப் புலிகள் வீரச்சாவடைந்தபடி இருந்தனர். அதுவும் ஒரேயொரு களமுனை திறக்கப்பட்டிருந்த அன்றைய காலகட்டத்தில் இந்த இழப்பை விடுதலைப் புலிகள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் கடைசியில் போரில் களைத்துப் போய் சமாதானம் பேசுவதற்கு சிறிலங்கா அரசு இறங்கி வந்தது என்பதுதான் வரலாறு. தற்பொழுது சிறிலங்கா அரசு தன்னுடைய இழப்புக்களை மறைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளின் இழப்புக்களை மிகைப்படுத்திக் கூறி வருகிறது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சிறிலங்கா அரசினால் தாக்குப்பிடிக்க முடியாது நிலை வரும்.

சிறிலங்கா அரசின் வன்னி மீதான நடவடிக்கையை விடுதலைப் புலிகள் தமது பாணியில் எதிர்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் காத்திரமான எதிர்ப்பைக் காட்டுகின்ற விடுதலைப் புலிகள் தமக்கு சாதகம் இல்லாத பகுதிகளில் சிறிய எதிர்ப்புக்களோடு விலகி விடுகின்றனர். தற்பொழுது விடத்தல்தீவையும் சிறிலங்காப் படையினர் “ட” வடிவத்தில் சுற்றி வளைத்து நிற்கின்றனர். அந்த வகையில் அப் பகுதியில் இருந்தும் விடுதலைப் புலிகள் விலக வேண்டி வரலாம். விடத்தல்தீவைக் கைப்பற்றி சிறிலங்கா அரசு வெற்றி விழா கொண்டாடவும் கூடும்.

ஆனால் நிலங்களைக் கைப்பற்றுவதன் மூலம் போராட்டத்தை இல்லாது செய்ய முடியாது. நிலங்களை இழந்தாலும் போராட்டத்தை தக்க வைப்பதில் விடுதலைப் புலிகள் என்றும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வெற்றி பின்பு நிலங்களை மீட்கின்ற வெற்றியாக மாறியிருக்கிறது.

இந்தியப் படையினரின் காலத்தில் மணலாற்றின் காடுகளைத் தவிர விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நிலப் பகுதி எதுவும் இருக்கவில்லை. நிலம் தக்க வைக்கப்படவில்லையே தவிர போராட்டம் தக்க வைக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டம்தான் இந்தியப் படையை ஈழத்தில் இருந்து வெளியேற்றியது.

இன்றைக்கும் தமிழீழத் தாயகத்தில் நிலப் பகுதிகள் சிலவற்றை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ள போதும், தமிழீழப் போரட்டம் எழுச்சியோடு நிற்கின்றது. போராட்டம் இருக்கின்ற வரை, சிறிலங்காப் படையினர் எத்தனை முறை நில ஆக்கிரமிப்பை செய்தாலும், அந்த நிலங்கள் மீண்டும் தமிழர்களால் மீட்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்கா அரசின் நிலை இன்றைக்கு பரிதாபகரமானதாக இருக்கின்றது. அங்கு சிறிலங்கா ஜனாதிபதியின் பாதுகாப்புக்குச் சென்ற உலங்குவானூர்த்தி தாக்கதலுக்கு உள்ளாகின்றது. படையினரின் முகாம்கள் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றன. அம்பாறையில் பல இடங்களில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அம்பாறையின் பக்கத்து மாவட்டங்களுக்கும் போர் விரிவடைகின்றது. போராட்டம் தக்க வைக்கப்பட்டிருப்பதால் கிழக்கில் சிறிலங்கா அரசு இத்தனை நெருக்கடிகளையும் சந்திக்கின்றது.

தமிழர்களின் போராட்டம் வன்னியில் மையம் கொண்டிருப்பதாக நம்பி சிறிலங்கா அரசு வன்னி மீது பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. வன்னியில் சில பகுதிகளை சிறிலங்காப் படையினர் தற்பொழுது ஆக்கிரமித்துள்ள போதும், வரவிருக்கின்ற சண்டைக் களங்கள் மிகவும் இழுபட்டுச் செல்லப் போகின்றன. சில மாதங்களில் முடிப்பதாக சொல்லிக் கொண்டு மகிந்தவின் அரசு தொடங்கிய வன்னி மீதான நடவடிக்கை தற்பொழுது ஒன்றரை வருடங்கள் ஆகிய பின்பும் நீள்கிறது. சிறிலங்காப் படைத் தளபதி வெற்றி பெறுவதற்கு அடுத்த ஆண்டு வரை செல்லும் என்று புதிய காலக் கெடு ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதற்குள் கிழக்கில் பல பகுதிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்படுவதோடு வடக்கிலும் அலையென எழுந்து சிங்களத்திற்கு சரியான பதிலடி ஒன்றை விடுதலைப் புலிகள் கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

- வி.சபேசன்

Comments