கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு

1983 ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு எல்லைக்கோடு. எதுவுமே மீண்டும் முன்னரைப்போன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தி நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்த அனர்த்தங்கள் மிகுந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை (Black July) என்று வர்ணித்திருந்தார். அந்தக் கறுப்பு ஜூலைக்கு பிறகு சரியாக 25 வருடங்கள் கடந்துவிட்டன.

1983 ஜூலை 23 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குள் இருந்த இனவெறிச் சக்திகள் நாடுபூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இனவாத வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான வாய்ப்பாக அமைந்தது.

அக்கால கட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமுமே உண்மையில் கணிப்பிட முடியாதவையாகும். அதையடுத்து, மூண்ட உள்நாட்டுப் போர் கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இலங்கையின் சகல சமூகங்களுமே அவலத்துக்குள்ளாகியிருக்கின்றன.

அரச இயந்திரத்தின் முற்றுமுழுதான அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜூலையில் நாட்டின் ஜனாதிபதி அரசாங்கத் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றுவதற்கு நான்கு நாட்கள் சென்றது.

அப்போதுகூட ஜெயவர்தனா வன்முறைகளைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. தமிழ் மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு சொல்லைக் கூட அவர் உச்சரிக்கவில்லை.

மாறாக, காடையர் கும்பல்களின் கொடூரச் செயல்களை தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயற்கையான பிரதிபலிப்பு என்று அவர் நியாயப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.


இலங்கையின் 7 பிரதமர்களுக்குச் செயலாளராகவும் இரு ஜனாதிபதிகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதிய "Rendering unto caesar' என்ற நூலில் கறுப்பு ஜூலையில் ஜெயவர்தனா தன்னை அழைத்துப் பேசிய சந்தர்ப்பமொன்று பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

"காற்று கொடும்புயலாக கடும் வேகத்துடன் வீசும் போது அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் வளைந்து கொடுப்பதேயாகும். அப்புயல் தொடர்ந்து எப்போதுமே வீசப்போவதில்லை. புயல் ஓய்ந்தவுடன் வளைந்த மரங்கள் மீண்டும் வழமை நிலைக்கு வரும்' என்று ஜனாதிபதி தனக்கு கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியது தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் பிரட்மன் எழுதியிருந்தார்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்துநிறுத்த ஜெயவர்தனா எதையுமே செய்யத் தயாராயிருக்கவில்லை. புயல் ஓயும் வரை காத்திருந்தார். புயல் ஓயவில்லை. பின்னரான 25 வருட காலத்தில் உள்நாட்டுப் போரின் விளைவாக பிரளயமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தனது ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஜெயவர்தனா ஒரு போதுமே பச்சாதாபப்பட்டதில்லை. தேசிய இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிப்பதாகக் கூறிக் கொண்டு இராணுவ ரீதியாக முடிவைக் காண்பதிலேயே அக்கறை செலுத்தினார்.

அவருக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வுகள் குறித்துப் பேசினார்களேதவிர, அவர்களும் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியே சென்றார்கள்.

இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் அக்கறையோ இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவைக்கட்டுவதற்கு உதவவில்லை. மாறாக, நிலைவரங்கள் முன்னரைவிட சிக்கலானவையாக மாறுவதற்கே அவை உதவியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமாதான முயற்சிகள் என்று கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் எல்லாம் வேறு மார்க்கங்களிலான போராகவே அமைந்திருந்தன.

கறுப்பு ஜூலைக்குப் பிறகு 25 வருடங்கள் கழித்து இன்றும் இலங்கை அரசாங்கம் இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இராணுவத் தீர்வு சாத்தியம் என்று முன்னென்றுமில்லாத அளவுக்கு சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான அரசியல் சூழ்நிலையையே இன்று காண்கின்றோம்.

தென்னிலங்கையில் இன்று காணப்படுவதைப் போன்று சமாதான ஆதரவுச் சக்திகளின் குரல் முன்னொருபோதும் அமிழ்த்தப்பட்டிருக்கவில்லை. இன நெருக்கடியை வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை என்று கொச்சப்படுத்தும் பேரினவாதச் சக்திகளினால் சமாதான ஆதரவுச் சக்திகளை மிரட்டிப் பணியவைக்கக் கூடிய இடரார்ந்த அரசியல் சூழ்நிலையை இன்று காண்கின்றோம்.

கறுப்பு ஜூலையில் இருந்தோ அல்லது அதற்குப் பின்னரான உள்நாட்டுப் போரில் இருந்தோ எந்தப் பாடத்தையும் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் கற்றுக்கொள்ளவில்லை.

வரலாற்றிலிருந்து அரசியல்வாதிகள் பாடங்களைப் படிப்பதில்லை என்பதே நாம் எல்லோரும் வரலாற்றிலிருந்து படித்துக்கொண்ட பாடமாக இருக்கிறது.


தொடர்ந்தும் அழிவுகளைச் சந்திக்வேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள்!

தினக்குரல்

Comments