திருப்புமுனைகள் பல தந்த கரும்புலிகள் ஒரு தனிப்பலம்

1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய வடிவம் ஒன்று பிறப்பெடுத்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது.

நெருப்புக் குளித்து நின்ற தேசத்தில் தனி ஒருவனாய் பொறுப்புச் சுமந்து போய்வெடித்த அந்த அற்புத தியாகத்தின் தோற்றுவாய் அன்று ஒரு பெரும் மாறுதலை எம் விடுதலைப் போராட்டத்திற்கு பெற்றுத்தந்தது.

இறுக்கமான கட்டமைப்புக்குள் வளர்ச்சியுற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகைப்படையின் எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவே இருந்து பல சாதனைகளைச் செய்து கொண்டிருந்த காலமது.

யாழ். குடாவில் பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இப்படிப்பட்ட காலச் சூழ்நிலையில்தான் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஜே.ஆர். அரசு இன்னும் அதிகரித்த போக்கைக் கடைப்பிடித்தது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆக்கிரமித்து தமிழர்களை கொன்றொழித்து அடிமை கொண்டு வாளேந்திய சிங்கத்தை வலுவாக நாட்ட இப்போதைய மகிந்தர் போல் அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் முயன்று வந்தார்.

'ஒபரேசன் லிபரேசன்" எனும் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு யாழ். குடா வடமராட்சிப் பகுதிகளில் பெரும் இன அழிப்பினை மேற்கொண்டு நில ஆக்கிரமிப்பை நிகழ்த்தியது ஜே.ஆர் அரசு.

முன்னரே நிராயுதபாணிகளாய் நின்ற தமிழர்களைப் பார்த்து போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என இறுமாந்து பேசிய ஜே.ஆர் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்தால் எவ்வளவு சர்ச்சை செய்திருப்பார் என்று பாருங்கள்.

புலிகள் அழிந்தார்கள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இனித் தலைதூக்க முடியாது என்றும் விரைவில் அனைத்துப் புலிகளையும் அழித்து விடுவேன் என்றும் பேரினவாதப் போதை தலைக்கேறிய நிலையில் ஜே.ஆர் பிதற்றிக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட சூழல் தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் கசப்பானதாக இருந்தது. ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வெற்றிக் களிப்புகள் எம் இனத்தை சினமூட்டியது.

அடுத்து எமது விடுதலைக்கான வழி என்ன, என்ற கவலைகள் எம்மினத்தைப் பீடித்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எமது தேசியத் தலைவரின் இலட்சியத்தில் மாறாத போராட்ட வடிவம் ஒன்று பிறப்பெடுக்கிறது.

வடமராட்சியின் பல பகுதிகளை ஆக்கிரமித்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அகங்காரத்துடன் நிலைகொண்டிருந்த சிங்களப் படையின் முகாமிற்கு முடிவுகட்ட புலிகள் தயாராகினர்.

மிகப்பெரிய ஆக்கிரமிப்பு படை, மிகச் சொற்ப புலிகள் அணி, நவீனமயப்பட்ட போர்க்கலங்கள் கொண்ட பகைப்படை, கணக்குப் பார்த்துப் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் எனப் பெரிய இடைவெளிகளைக் கொண்ட சமச்சீரற்ற படைப்பலத்தில் நின்றுகொண்டு புலிகள் அன்று வெற்றிச் சாதனை படைத்தார்கள் என்ற செய்தி சிங்கள தேசத்தை உறைய வைத்தது. தமிழர் மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விடுதலைப் போராட்டம் மீதான நம்பிக்கையை வானுயர உயர்த்தியது.

அந்தச் சாதனையின் நாயகனாய் கரும்புலி கப்டன் மில்லர் நம்பிக்கை ஒளிதந்து தீபமாய் மறைந்தார்.

வெடி மருந்தேற்றிய வண்டியை ஓட்டிச் சென்று பகை முகாமிற்குள் முழங்கிய கப்டன் மில்லரின் உயிர் வெடியால் அங்கு நிலை கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் படுகாயங்களுக்குள்ளாகியும் பலம் இழக்க, அதிர்ச்சியடைந்த ஏனைய சிங்களப் படை சிதறி ஓட, இச்செய்தி வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதி முழுமையிலும் நிலைகொண்ட சிங்களப் படைகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. தம்மை வெடியாக்கி தமிழன் போர் புரியத் தொடங்கிவிட்டான் என்ற செய்தி சிங்கள அரசை திக்குமுக்காட வைத்தது.

அடுத்த கட்டம் தமது படைகளால் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன வரும் அளவிற்கு அந்தக் கரும்புலித் தாக்குதல் சிங்கள அரசை தலைகீழாய் புரட்டிப் போட்டது எனலாம்.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே இந்தியாவின் தலையீட்டை அவசரமாக ஏற்கவேண்டிய சூழ்நிலைக்கு சிறிலங்கா சென்றது.

இவ்வாறாக அந்தக் கரும்புலித் தாக்குதல் சிங்கள தேசத்தின் மனோபலத்தை சிதைத்ததுடன் விடுதலைப் போராட்டம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகரித்ததாயும் அமைந்தது.

ஒரு சுதந்திரப் போராளிக்குரிய உச்சக்கட்ட தியாகமாக தன் உயிரை, உடலை, நேரம், இடம் குறித்து வெடியாக்கி வென்ற கரும்புலி கப்டன் மில்லரின் தியாகம் எமது விடுதலைப் போருக்கான புதிய பாதையைத் திறந்தது.

கரும்புலி கப்டன் மில்லர் தொடக்கி வைத்த கரும்புலிகள் தசாப்தத்தில் இன்று 355 வரையான கரும்புலி மாவீரர்கள் இந்த மண்ணிலும் தாயகக் கடல்களிலும் எதிரியின் தேசத்திலும் தம் இன்னுயிர்களைக் கரைத்திருக்கிறார்கள்.

இந்த மண்ணின் மீதும் தாம் நேசித்த மக்கள் மீதும் அளப்பெரிய பற்றுக்கொண்டவர்களாய் அந்தத் தேசத்திற்கும், மக்களிற்கும் தம்மாலான உயர்ந்தபட்ச தியாகத்தைச் செய்ய வேண்டும் என்ற பற்றுறுதியோடு தம் உயிரை, உடலை, இவ்வுலகப்பற்றை ஒறுத்து வெடியாகிப்போன அந்தக் கரும்புலிகளின் எண்ணத்து உணர்வுகளை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த மாவீரர்கள் என்ன நோக்கத்திற்காக மடிந்தார்கள் என்பதை எப்போதும் நினைவிருத்திச் செயற்பட வேண்டும்.

கரும்புலிகள் நிகழ்த்துகின்ற சாதனைகள் எமது போராட்டப் போக்கில் பல திருப்புமுனைகளைச் செய்து வந்திருக்கின்றது என்பதை வரலாறுகளில் நாம் காணலாம்.

1987 ஆம் ஆண்டு கரும்புலி கப்டன் மில்லர் கொடுத்த திருப்புமுனை போல் பின்னாளில் பல திருப்புமுனைகள் கரும்புலிகளால் நிகழ்த்தப்பட்டன.

1995 ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்து வைத்த திருமலைத் துறைமுகத்தில் இடம்பெற்ற ரணசுறு, சூறயா கப்பல்கள் மீதான தாக்குதல். அதேபோல் மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஓயாத அலைகள் - 03 தாக்குதல் நடவடிக்கைகளின் போது இராணுவத் தளங்களுக்குள் பகைப்படையின் ஏவுதளங்களைச் செயலிழக்க வைத்த தாக்குதல்களிலிருந்து மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியாகக் கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் புகுந்து சிங்கள தேசத்தின் வான்படைப் பலத்தைச் சிதைத்து சிங்கள அரசை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும் தாக்குதல் வரை பெரும் திருப்புமுனைகளை கரும்புலி அணிகளின் தாக்குதல்கள் ஏற்படுத்தியிருந்ததனைக் காணக்கூடியதாக உள்ளது.

இவை சில பெரிய உதாரணங்கள் மட்டுமே. தரைக் கரும்புலிகள் நிலையிலிருந்து கடலிலும் காவியம் படைக்க எழுந்த கடற்கரும்புலிகளால் பெரும் போரியல் வெற்றிகளைப் பெறக்கூடியதாய் இருந்ததுடன் கடற்பகுதியில் தமிழர் படையின் ஆதிக்கம் வலுப்பெறவும் கரும்புலித் தாக்குதல்கள் வழிசமைத்தன.

இதனால் சிங்களப் படை பெரும் அபாயத்தை எதிர்கொண்டதுடன் ஒரு சில கரும்புலிகளை எதிர்பார்த்து பெரும் தொகை இராணுவ வளத்தையும் படையினரையும் ஈடுபடுத்த வேண்டிய அவசியத்திற்குள்ளானது.

இவ்வாறாக பல திருப்புமுனைகளுக்கு காரணமாய் இருந்த எம் கரும்புலிக் கண்மணிகளின் ஈகம் தற்போது முனைப்புப் பெற்றுள்ள பெரும் யுத்தத்திலும் செல்வாக்குச் செலுத்தத் தவறவில்லை.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான 21 கரும்புலிகளின் எல்லாளன் நடவடிக்கை சிங்களப்படையின் வான்படைப் பலத்தை வால் சுருட்ட வைத்ததுடன் அடுத்து இடம்பெற இருந்த சிங்களப் படைகளின் வன்னி நோக்கிய பாரிய படைமுன்னெடுப்பையும் கேள்விக்குறியாக்கியிருந்தது.

கிழக்கில் புலிகள் ஒழிந்தார்கள் வடக்கையும் விரைவாய் கைப்பற்றி விடுவோம் என்ற சிங்கள அரச படைத் தலைமைகளின் சர்வதேசப் பிரசாரத்திற்கும் பெரும் நெருக்கடியை அத்தாக்குதல் கொடுத்தது.

இதேபோல் தற்போதும் சிங்கள தேசம் விடைகாண முடியாது முழிக்கும் கடலடிக் கரும்புலித் தாக்குதல்கள் எமது கடற்பரப்பில் புதிய வரலாற்றைப் படைத்து நிற்கிறது.

நாயாற்றுக் கடற்பரப்பில் தமது டோறாப் படகு எவ்வாறு மூழ்கியது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த கடற்படைக்கு பேரிடியாக அடுத்து திருக்கோணமலைத் துறைமுகத்தில் இராணுவ விநியோகக் கப்பல் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட செய்தி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

விடை காணப்படாத வினாவாக இன்றும் சிங்களப் படைத்துறையைக் குடைந்து கொண்டிருக்கும் மேற்கூறப்பட்ட தாக்குதல்களைத் தம் உயிரைக் கொடுத்து நடாத்திவிட்டு கடலோடு கரைந்துவிட்ட அந்தக் கரும்புலி மாவீரர்கள் இப்போதும் பகைக்குப் புரியாத புதிராகவே உள்ளனர்.

அடுத்த கட்டமாக கரும்புலித் தாக்குதல்கள் எவ்வாறு இடம்பெறும் என ஊகிக்க முடியாத அளவிற்கு பகைத்தரப்பை என்றும் பயப்பீதியுடன் வைத்திருக்கக்கூடிய சக்தியாக கரும்புலிகள் உள்ளனர் என்பதே சமகால போர் அரங்கின் நிலைமைகளாகும்.

கரும்புலிகள் நினைவுகளாய் மலரும் இன்றைய காலம் எமக்கு மிகவும் முக்கியமானது. ஒரே இலட்சியத்திற்காய் தம் உயிர்களை வெடியாக்கிய அந்தக் கரும்புலிகள் பல்வேறு ரூபங்களில் தமது உயிர்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

தரைக் கரும்புலிகளாக, கடற்கரும்புலிகளாக, முகம் மறைத்து, முகவரி மறைத்து எமக்கு வெற்றிச் செய்திகளை மாத்திரம் தந்து மறைந்த கரும்புலிகளாக பல வடிவங்களுடன் இப்போராட்டத்தின் தடைக்கற்களைத் தகர்த்து நிற்கும் அத்தனை கரும்புலி மாவீரர்களையும் நினைவு கொள்ளும் இந்நாளில் அக்கரும்புலிகளின் இலட்சியம் சுமந்த பாதையில் உறுதியுடன் பயணிப்பதே அம் மாவீரர்களுக்கு இத்தேசம் செய்யும் பிரதி உபகாரமாக இருக்கும்.

-க.ப.துஸ்யந்தன்-

வெள்ளிநாதம் (04.07.08)

Comments