கொமாண்டோ தாக்குதல்களில் இராணுவம் வெற்றி பெறுமா?

வடபோர்முனையில் பாரிய வெற்றிகளை பெறலாம் என்ற ~ரத்வத்த கால| கனவுகளுடன் வன்னிக்குள் கால்பதித்த இராணுவத்தினருக்கு, தமது கனவுகள் இரவுகளைவிட நீளமானவை என்ற உண்மை இப்போதுதான் விளங்க ஆரம்பித்திருக்கிறது.

நீளக்கயிற்றில் கால்நடைகளை மேய விடுவது போல இராணுவத்தை வன்னிக்குள் ஆழக்கால் பதிக்க அனுமதித்துவிட்டு இப்போதுதான் புலிகள் தமது வேலையை படிப்படியாக ஆரம்பித்துள்ளார்கள்.

மன்னாரில் இதுவரை தாம் காட்டிய முன்னேற்ற வேகத்தை இனிக்காண்பிக்க முடியாது என்ற உண்மையை களத்தில் ஏற்படும் இழப்புகள் இராணுவத்துக்கு தினம் தினம் இடித்துரைத்துக்கொண்டேயிருக்கின்றன.

மிதிவெடிகளாலும் பொறிவெடிகளாலும் காயப்படும் படையினரின் எண்ணிக்கையை பார்க்கும்போது, பலியை விட காயம்தான் பெரிய பிரச்சினை என்ற காலம் கடந்த ஞான நிலையை இராணுவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே, ஆட்கள் இழப்பை குறைத்து எதிரிக்கு இழப்பை அதிகரிக்கும் வகையில் புதிய புதிய திட்டங்களை களத்தில் நடைமுறைப்படுத்த இராணுவம் பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆழ ஊடுருவும் அணிக்கு ஆள்பிடிக்கும் வேலை ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, தமது கொமாண்டோ வகை தாக்குதல் எனும் ~காயமடைந்த| திட்டத்தையும் மீள தூசி தட்டியெடுக்கும் முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது.

அண்மையில் விடத்தல்தீவை நோக்கி இராணுவம் அனுப்பிய தனது தாக்குதல் பிரிவை கொமாண்டோ அணி என்று சிங்கள ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறது. சிறு அணிகளாக ஊடுருவி சென்று அவை மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் புலிகளின் கொடுத்த பதிலடியால், பலியானவரின் உடலத்தையும் விட்டுவிட்டு தப்பியோடும் நிலைக்கு பின்னடைவை கண்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினாலும் இந்திய இராணுவத்தினாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோ வகை தாக்குதல் என்பது படுகாயமடைந்த ஒரு திட்டம்.

இப்படியான தாக்குதல்களுக்கு புலிகள் கொடுத்த பதிலடிகளை பார்த்தால் நேற்று விடத்தல்தீவில் நடைபெற்றமை ஒரு சிறு துரும்பு சம்பவம் என்றே கூறலாம். அவ்வளவுக்கு, மிகப்பெரிய கொமாண்டோ முறியடிப்பு தாக்குதல்களையெல்லாம் களத்தில் கனகச்சிதமாக நிறைவேற்றியமைதான் புலிகளின் கடந்த கால வரலாறு.

புலிகளுக்கு எதிராக முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோ தாக்குதல் என்றால் 1985 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சுதுமலையில் தளபதி கிட்டு அவர்களின் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம்.

சுதுமலையில் தளபதி கிட்டு முகாமிட்டிருந்த வீட்டுக்கு அண்மையாக திடீரென தரையிறங்கிய சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் அவற்றிலிருந்து தமது விசேட கொமாண்டோ படையினரை இறக்கிவிட்டு பறந்துவிட்டது. இவர்கள் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவான மொஸாட்டிடம் பயிற்சி பெற்ற சிறப்பு அணியினர்.

தரையிறங்கிய கொமாண்டோக்கள் தளபதி கிட்டுவின் முகாம் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியவாறே முன்னேறி வந்தனர். உடனடியாக, அருகிலிருந்த முகாம் வீரர்களையும் இணைத்துக்கொண்டு தளபதி கிட்டு மேற்கொண்ட பதிலடி தாக்குதல், தரையிறங்கிய கொமாண்டோக்களுக்கு அகோர அடியாகிவிட்டது.

அப்போது, முகாமில் பெரிய ஆயுதங்கள்கூட இருக்கவில்லை. இருந்த ஆயுதங்களை வைத்து, நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்ட முறியடிப்பு தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு புலிகளிடம் வாங்கிய முதலாவது நெத்தியடி என்று கூறலாம்.

அதன்பின்னர், புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோ தாக்குதல் என்றால், இந்திய இராணுவத்தினர் மேற்கொண்டதை குறிப்பிடலாம்.

இந்திய அமைதிப்படை சிறிலங்காவில் கால்பதித்திருந்த காலப்பகுதியில் - 1987 பிற்பகுதியில் - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்கென இந்திய இராணுவம் பெருமெடுப்பிலான தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு கொமாண்டோ தாக்குதல் ஒன்றை நடத்தியது. அப்போது, தலைவருடன் பொட்டு அம்மான், சங்கர் முதல் பல முக்கிய தளபதிகள் கூடவிருந்தனர்.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மைதானத்தில் தரையிறக்கிய தமது கொமாண்டோ அணிகளை புலிகளின் தலைவர் இருந்த இடத்தை நோக்கி நகர்த்தி அவரை பிடிப்பதற்கு அப்போது அங்கிருந்த இந்திபடை தளபதிகள் பெரும் பாடுபட்டனர்.

அந்த கொமாண்டோ அணிக்கு எதிரான முறியடிப்பு தாக்குதலை தலைவர் பிரபாகரன் நேரடியாக நின்று நெறிப்படுத்தினார். ஆனால்,அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றி அனுப்பிய தளபதி பாண்டியன் அணியினர் (இவரது ஞாபகார்த்தமாக புலிகள் ஆரம்பித்த படையணிதான் இம்ரான் - பாண்டியன்) இந்திய இராணுவத்தின் கொமாண்டோ தாக்குதலை முறியடித்தனர்.

முன்னர், இஸ்ரேலின் பயிற்சி பெற்றவர்களை சமாளித்த புலிகள் பின்னர் இந்திப்படையினரை நேரடியாக சந்திக்குமளவுக்கு முறியடிப்புத் தாக்குதலில் அப்போதே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

கெரில்லா தாக்குதல் முறையில் புலிகள் அப்போது அடைந்திருந்த அபார வளர்ச்சிக்கு இந்த முறியடிப்பு தாக்குதல்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வெளிநாடுகளில் சென்று சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ அணியினர் புலிகளிடம் வகையாக வாங்கிய இன்னொரு சம்பவமாக மணலாற்றுக்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் முறியடிப்பையும் குறிப்பிடலாம்.

தொண்ணூறுகளில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த பிரேமதாசா அரசு, அக்காலப்பகுதியில் கேணல் கெட்டியாராச்சி என்ற தளபதியின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பி கொமாண்டோ பயிற்சி வழங்கியது.

காட்டு சண்டைக்கென Jungle War Fare எனப்படுகின்ற பிரத்தியேக பயிற்சிகளையெல்லாம் பயின்று முடித்து சிறிலங்கா திரும்பிய இந்த கொமாண்டோ படையினர் தமது வீரத்தை காண்பிக்க களம் தேடிக்கொடிருந்தனர். அப்படி அலைந்து திரிந்த படையினருக்கு தக்க தருணம் கிடைத்தது.

1991 இல் ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலுக்கான விநியோகம் மணலாற்று காட்டுப்பகுதியிலிருந்தே செல்வதாக கருதிய இராணுவம், மணலாறு காட்டுக்குள் அமைந்திருந்த புலிகளின் தளங்களின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன், அமெரிக்க பயற்சி பெற்ற தனது கொமாண்டோ பிரிவை களத்தில் இறக்கியது.

மணலாற்று காட்டுக்குள் புகுந்த சிறப்பு கொமாண்டோ படையினர் பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். புலிகளும் விடுவதாக இல்லை. அகோரமான பதிலடி கொடுத்தார்கள். பின்வாங்க மனமில்லாத கொமாண்டோ படையினர், அடுத்தடுத்து மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வெவ்வேறு இடங்களுக்குள்ளால் புகுந்து தாக்குதல்களை நடத்தினர்.

அனைத்துமே படுதோல்வி.

புலிகளின் தாக்குதலால் கொமாண்டோ படையின் தளபதி கேணல் ஹெட்டியாராச்சிக்கு ஒரு கண் பறந்தது.

இந்த கொமாண்டோ முறியடிப்பு தாக்குதல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் புலிகளின் மகளிர் நடத்திய மன்னகுளம் சமர் தான் சிறிலங்கா கொமாண்டோ படையணிக்கு விழுந்த மரண அடி எனலாம்.

~ஜெயசிக்குறு| இராணுவ நடவடிக்கையின்போது புளியங்குளத்தை கைப்பற்றுவதற்கு இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக தனது முயற்சியில் வெற்றிபெறாத இராணுவம், ஏ-9 பாதையை சுற்றிக்கொண்டு காடுகளுக்குள்ளால் ஊடுருவி சென்று கனகராயன்குளத்தை கைப்பற்ற முயன்றது.

அப்போதுதான், பெண்புலிகளின் பெயர் சொல்லம் மன்னகுளம் சமர் இடம்பெற்றது.

கனகராயன்குளத்தை கைப்பற்றவென அமெரிக்க ~கிரீன் பரேட்| பயிற்சி பெற்ற சுமார் 300 கொமாண்டோக்கள் களமிறக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் ~கிரீன் பரேட்| கொமாண்டோக்களில் ஒரு பிரிவினர் தமது கற்கை நெறியின் ஒரு அங்கமாக இந்த தாக்குதலை களத்தில் நின்று பார்ப்பதற்கு வன்னிக்கே வந்திருந்தனர். அவர்கள் அங்கு பயன்படுத்திய நடமாடும் ஏ.சி.வண்டி ஒன்று, புலிகளால் பின்னர் மீட்கப்பட்டது.

அவர்களுடன் வந்திருந்த சில அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா கொமாண்டோ படையணியினருக்கு யால காட்டுப்பகுதியில் மேலதிக பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர்.

(இந்த ~கிறீன் பரேட்| அணிக்கு பயிற்சி வழங்கவென கொழும்பு வந்த அமெரிக்க இராணுவ உயரதிகாரிகள் தங்கியிருந்த கலதாரி ஹோட்டலின் மீது அப்போது தற்கொலை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.)

இவ்வாறு பெருமெடுப்பில் வன்னிக்குள் வந்திறங்கிய சிறிலங்கா கொமாண்டோ படையினர், ஒருநாள் காலை மன்னகுளம் பகுதியிலிருந்த புலிகளின் முன்னரங்குகளை ஊடறுத்து தாக்குதலை நடத்த முயன்றனர். அப்போதுதான் பிடித்தது போர் அகோரம். இம்மியும் பின்வாங்காத பெண் புலிகள், சிறப்பு கொமாண்டோ படையினர் மீது அகோர தாக்குதல் நடத்தினர். காலையில் ஆரம்பித்த தாக்குதல் மதியமே முடிவுக்கு வந்தவிட்டது. பெரும் இழப்புக்களுடன் சடலங்களையும் கைவிட்டுவிட்டு பின்வாங்கி ஓடினர் கொமாண்டோக்கள்.

இந்த சமரில், முன்னணி அரணில் நின்று மூன்று முனையிலான தாக்குதலையும் தலைமை தாங்கி நெறிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்த பெண் போராளி நீலாம்பரி அந்த சண்டையின் நாயகி எனக்கூறலாம்.

கொமாண்டோக்களின் சுமார் 110 சடலங்கள் பின்னர் செஞ்சிலுவை சங்கத்தினூடாக இராணுவத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த சம்பவம் சிறிலங்கா இராணுவ கொமாண்டோ வரலாற்றில் அழிக்க முடியாத வடு.

இப்படியாக பல கொமாண்டோ தாக்குதல் முறியடிப்புகளை புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

பூனைத்தொடுவாயில் கடற்புலிகளின் ராடர் தளத்தை அழிக்கவென பல நூற்றுக்கணக்கில் கடல்வழியாக வந்திறங்கிய கொமாண்டோக்கள் புலிகளின் பதிலடியால் தரை வழியாக வெற்றிலைக்கேணிக்கு தப்பியோடி சென்ற சம்பவம், இராணுவ புலனாய்வு உறுப்பினர் ஒருவரை மீட்பதற்கென சிலாவத்துறையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான கொமாண்டோ தாக்குதல் என பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மொத்தத்தில் படையினரின் எந்த பருப்பும் இதுவரை வேகவில்லை என்பதுதான் களம் அறிந்த உண்மை.

இப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொமாண்டோ முறியடிப்பு தாக்குதல்களை நடத்திய புலிகளுக்கு எதிராக தற்போதைய இராணுவம் தானும் தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில், மன்னாரிலும் மணலாற்றிலும் கொமாண்டோ வகை தாக்குதல்களை நடத்தி அழகு பார்க்க முயற்சிக்கிறது.

ஆளணி இழப்பை குறைத்து எதிரிக்கு இழப்புக்களை அதிகம் ஏற்படுத்தும் வகையில் கொமாண்டோ வகை தாக்குதலை முயற்சிப்பது பாராட்டப்படவேண்டிய விடயம்தான்.

ஆனால், 21 கொமாண்டோக்களை அனுராதபுரம் விமானப்படைத்தளத்துக்குள் அனுப்பி அங்கு நின்ற சகல சகடைகளையும் சங்காரம் செய்யுமளவுக்கு தேர்ச்சி பெற்ற கொமாண்டோ அணியை கொண்டுள்ள புலிகளுடன் சிறிலங்கா இராணுவம் தனது திறமையை உரசி பார்ப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

-ப.தெய்வீகன்-

சுடர் ஒளி (18.07.08)

Comments