இந்தியா-சீனா சடுகுடு ஆட்டம்

இரு இராட்சத நாடுகளும் தமது அசுர பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆடுகளமாகச் சிறிலங்கா மாறிவருகிறது. அதற்கான அறிகுறிகள் நன்கு தெரிகின்றன. இதைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதற்குச் சிறிலங்கா கடும் முயற்சி எடுத்து வருகிறது.

பூகோள ரீதியாக இந்தத் தீவு தனது ஆதிக்க வலயத்திற்குட்பட்டதென்று இந்தியா கணக்குப் போடுகிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்வதற்குச் சீனா தயாரில்லை.

2007 ஆம் ஆண்டில் சீனா 37.6 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ ஆயுத தளவாடங்களையும் வெடிபொருட்களையும் வழங்குவதற்குமாக ஒரு ஒப்பந்தத்தைச் சிறிலங்காவுடன் செய்துகொண்டது. இதன் அடிப்படையில் ஜியன் 7 போர் விமானங்கள், ஜேவை 11 3டீ வான்காப்பு ராடர்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள், வு-56 ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள், ஆர்பீஜீகள், ஏவுகணைகள் என்பன சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சீனாவின் பொருளாதார உதவிகளும் சிறிலங்காவுக்குக் கிடைக்கின்றன. சென்ற வருடம் இது ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

யப்பானிலும் பார்க்கக் கூடுதலான நிதி உதவியைச் சீனா வழங்குவதாகவும் அது ஒரு பில்லியன் டொலரைத் தாண்டும் என்றும் படைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழும்பின் தலைநகர் எல்லைக்குள் புதிய கட்டடத் தொகுதிகளைக் கட்டிக்கொடுக்கும் தனது பழைய நடவடிக்கையைச் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.

முன்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபம், உச்ச நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் என்பனவற்றைச் சீனா வழங்கியிருக்கிறது.

இப்போது நாடக மற்றும் நாட்டிய கலாமன்றக் கட்டடங்களை எழுப்புவதற்குச் சீனா நன்கொடை நிதியையும் ஆலோசனை மற்றும் கட்டடப்பணி உதவியையும் வழங்கி வருகிறது.

புத்தளம் மாவட்டத்தில் நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையத்தை நுரைச்சோலையில் கட்டும் பணியில் சீனா முனைப்பாக ஈடுபடுகிறது.

மன்னார் வளைகுடாவில் பயன்தரு பகுதியாகக் கருதப்பட்ட கடற்பகுதியைச் சீனாவுக்குத் தருவதாகச் சிறிலங்கா அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இதைத் தடுப்பதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இரு மலையாளிகளும் ஒரு இந்திக்காரனும் அடங்கிய உயர்மட்டக்குழு புதுடில்லியில் இருந்து கொழும்பு வந்து எண்ணை, எரிவாயு ஒப்பந்தமொன்றைத் தமது நாட்டிற்குச் சார்பாகப் பெற்றுச் சீனாவைப் புறந்தள்ளியுள்ளனர்.

வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு மாறாக மன்னாரில் எண்ணை, எரிவாயு தோண்டுவதற்குத் தம்மை சிறிலங்கா ஏமாற்றி விட்டதாகச் சீனா சீற்றம் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

சீனா தனது உதவிகளைக் குறைக்கப் போவதாகவும் பத்திரிகைச் செய்திகள் குறிப்பிட்டன. நெடுநாள் இலக்கை நோக்கி நகரும் நாடுகள் மன்னார் வளைகுடா ஏமாற்றம் போன்ற சிறிய சச்சரவுகளால் திசைதிரும்பப் போவதில்லை. அதிருப்தியைத் தெரிவிக்கக் கூடும் ஆனால் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது தான் யதார்த்தம்.

கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு போட்டியில் இந்தியாவைச் சீனா தூக்கி அடித்திருக்கிறது. அது எங்கே என்றால், இன்னுமொரு அயல் நாடான மியன்மாரில். மியன்மாரின் எண்ணை மற்றும் எரிவாயுத் துறையில் இந்தியா பெருமளவு பணத்தை முதலீடு செய்திருக்கிறது.

மேலும் கூடிய முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் தயாராகி உள்ளன. இதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருக்கிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

மியன்மாரின் கடலோரத்தில் பெருமளவு எண்ணையும் எரிவாயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னாரைப் போல் என்று வையுங்களேன். இந்த எண்ணை எரிவாயு வலயத்தை ஏ1, ஏ2 என்று இரு தொகுதிகளாகப் பிரித்த மியன்மார் அரசு தோண்டும் உரிமையை 2007 இல் பகிரங்க ஏலத்தில் விட்டது.

தாய்லாந்து, இந்தியா, சீனா ஆகியன தமது கூறு விலையைத் தெரிவித்தன. மிகக் கூடுதலான தொகையைத் தாய்லாந்தும் அடுத்த தொகையை இந்தியாவும் மிகக்குறைந்த தொகையை சீனாவும் தரமுன்வந்தன. ஆனால் இந்த ஏலத்தில் குறைந்த தொகையைக் கூறிய சீனாதான் வெற்றி பெற்றது.

சனவரி 2007 இல் மியன்மாருக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்டபோது அதை முடக்குவதற்குச் சீனா உதவியது. இதற்கு நன்றிக்கடனாக மேற்கூறிய சலுகை அடிப்படையிலான வழங்கல் மேற்கொள்ளப்பட்டது.

மியன்மார் சீனாவின் ஆதிக்க வலயத்திற்குள் அமையும் நாடு. அதற்குள் இந்தியா சிறிது சிறிதாக நுழைவுகளை மேற்கொள்கிறது. சில இராணுவத் தளவாடங்களை மியன்மாருக்கு இந்தியா விற்பனை செய்கிறது. ஆனால் சீனாவின் இடத்தைப் பிடிக்க இந்தியாவால் ஒருபோதும் முடியாது.

ஏனென்றால் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவக் கட்ட மைப்பிற்குள் மியன்மார் ஒரு விடுபடமுடியாத அங்கமாக கடந்த 40 வருடங்களுக்கு மேலாக, அதாவது இராணுவ ஆட்சி தொடங்கிய காலந்தொட்டு நிலவுகிறது.

சிறிலங்காவில் சீனாவின் நகர்வுகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்தியாவால் முடியுமா? மியன்மாரில் இந்தியாவைச் சீனா ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் நகரவிடாமல் தடுக்க முடியுமானால் அதே பாணியில் சிறிலங்காவில் சீனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்தியத் தரப்பினர் நம்புகிறார்கள்.

சீனா செய்வது போல் இராசதந்திர அனுசரணை வழங்குகிறார்கள், ஆயுதங்கள் விற்கிறார்கள், நன்கொடையாகப் பணம் கொடுக்கிறார்கள், சீனா பாதுகாப்புச் சபையில் இருப்பதால் சீன அனுசரணை பெறுமதியுள்ளதாக இருக்கிறது.

அண்மையில் நடந்த மனித உரிமைக் கவுன்சிலில் சிறிலங்காவின் வெற்றிக்காகக் கடும் பாடுபட்டது. சிறிலங்கா அடைந்த தோல்வி இந்தியாவின் தோல்வியாகக் கருதப்படுகிறது.

சிறிலங்காப் பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் இந்தியா சிறந்த வெற்றி பெற்றுள்ளது. தனது முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சிறிலங்காவில் முதலீடு செய்யும்படி இந்திய வர்த்தக அமைச்சு ஊக்குவிப்பு வழங்குகிறது.

சென்னை வர்த்தகச் சங்கத் தலைவர் அண்மையில் கொழும்பில் முதலீடுகள் பற்றிக் குறிப்பிடுகையில் நீண்டதூர வருவாய் தரக்கூடிய சிறந்த முதலீட்டு மையமாக அது விளங்குகிறது என்றார். கொழும்பில் நிலவும் அசாதாரண சூழல் பற்றி அவர் கவலைப்படவில்லை.

இந்திய நிறுவனத்தின் காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை முதலீட்டிற்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் அதனுடைய பாதுகாப்பிற்குக் காங்கேசன்துறைக் கடலோரம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

படிப்படியாகத் திருக்கோணமலை மாவட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இந்தியா யாழ். குடாவிலும் கால் பதித்துள்ளது எனலாம்.

இப்போது சிறிலங்காவில் நிலவும் இந்திய-சீன சடுகுடு ஆட்டத்தில் மிக முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவை மனப்பூர்வமாக நம்புவதுமில்லை. நேசிப்பதுவுமில்லை.

இந்தியாவைச் சிறிலங்கா பயன்படுத்துகிறது என்ற உண்மையை இந்திய ஆளும் வர்க்கம் நன்கு அறியும். சிங்களவர்களுடைய அன்பும் அபிமானமும் சீனாவுக்குத் தான் சொந்தம். சீனாவை சிறிலங்காவில் இருந்து அகற்றுவது இயலாத காரியம் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கணக்கில் எடுத்தாக வேண்டும். மியன்மாரில் வேர் ஊன்றியதைப் போல் சிறிலங்காவிலும் சீனா நன்றாகக் கால்பதித்துவிட்டது.

சீனா பற்றிய கவலைகள் இந்தியாவைத் தொற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேச விவகாரம் முடிந்துவிட்டது என்று பார்த்தால் அது மீண்டும் தலைதூக்கியதோடு இந்தியாவை மிரட்டவும் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரதேசம் எனக்குச் சொந்தம் என்று சீனா குரல் கொடுத்திருப்பதோடு சீக்கிம் மாநிலத்தில் ஒரு பகுதியும் தனக்குச் சொந்தம் என்று கோரத் தொடங்கியுள்ளது. வடக்கில் தொல்லை என்றால் சிறிலங்காவின் தெற்கு எல்லையிலும் சீனா தலையிடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.

தலைநகர் கொழும்பில் இருந்து 230 கி.மீ.தொலைவிலுள்ள அம்பாந்தோட்டைக் கடற்கரையில் ஒரு பில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்ட பல வசதிகள் நிறைந்த துறைமுகத்தைச் சீனா நிர்மாணிக்கிறது. இதற்கு 85 வீதமான நிதியைச் சீன அரசு வழங்குகிறது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி 15 வருட காலம் நீடிக்கும். அது நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.

ஒரு தொழில் பேட்டை, 1000 மீற்றர் நீளமான இறங்குதுறை, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயுவில் இயங்கும் மின் நிலையம், எரிபொருள் களஞ்சியப்படுத்தும் பாரிய தாங்கிகள், கப்பல் போன்ற கடற்கலங்கள் கட்டும், திருத்தும் தொழிற்பேட்டைகளும் இதில் அடங்கும்.

காலப்போக்கில் வருடமொன்றுக்கு 20 மில்லியன் எண்ணிக்கையிலான கொள்கலன்களை ஏற்றி இறக்கும் வசதிகளும் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் என்பது திட்டம். நீங்கள் திருக்கோணமலையில் இருங்கள், நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று இந்தியாவைப் பார்த்துச் சீனா சொல்வது போல் இருக்கிறது அல்லவா?

அம்பாந்தோட்டையில் சீனப் பிரசன்னம் இந்தியத் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழ் நாட்டிலுள்ள கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையங்கள் சீனாவின் வீச்சு எல்லைக்குள் வருவதோடு கேரளத்திலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் சீனக் கண்காணிப்புக்குள் நிச்சயம் வரலாம் என்று ஆயு;வுகள் தெரிவிக்கின்றன.

நாங்கள் சிறிலங்கா அரசுக்கு அது கேட்கும் ஆயுதங்களை கேள்வி கேட்காமல் வழங்கியிருந்தால் சீனாவும் பாகிஸ்தானும் மூக்கை நுழைத்திருக்க முடியுமா என்று இந்தியர்கள் கேட்கிறார்கள். இது காலங்கடந்த ஞானம். இப்போது நிலைமை தலைக்கு மேல் போய்விட்டது. இந்தியாவைச் சுற்றிவளைக்கும் வியூகத்தைச் சீனா நடைமுறைப்படுத்துகிறது. இந்த வியூகத்தை எப்படி உடைக்கலாம் என்று இந்தியத் தலைவர்கள் சிந்தனை வயப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் சீனா கால்பதித்த விவகாரம் உயர்மட்ட விவகாரமாக மாறிவிட்டது. சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்குவது தான் ஒரேயொரு வழி என்று கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர் என்று உயர்மட்டத் தொடர்புடைய ~ரைம்ஸ் ஒப் இந்தியா| பத்திரிகை தெரிவிக்கிறது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஒரு இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அதே பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காத் தரைப்படைக்கும், கடற்படைக்கும் தீவிர போர்ப்பயிற்சி வழங்குதல், புலிகளை முறியடிப்பதற்காக முப்படைக்கும் தேவையான ஆயுத தளவாடங்களைத் தங்கு தடையின்றி வழங்குதல் என்பன அந்த இரட்டை அணுகுமுறையின் இரு கூறுகளாகும்.

மியன்மாரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி இப்போது இந்தியா வாய் திறப்பதில்லை. அதே கொள்கையை சிறிலங்கா தொடர்பாகவும் இந்தியா கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தியா, மனித உரிமைக் கவுன்சில் விவாதங்களின் போது சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதில் ஈடுபட்டது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி பூசல்களைத் தனக்குச் சாதகமாகச் சிறிலங்கா பயன்படுத்துகிறதே என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியபோது அது உண்மைதான் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். என்றாலும் சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை என்று அறியப்படுகிறது.

தமிழ் நாட்டில் எதிர்ப்புக் கிளம்பினால் அதைச் சமாளிப்பதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் ஆயுதம் வழங்கல் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், அது ஈழத் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்படவில்லை. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக வழங்கப்படுகிறது என்றார்.

இந்த ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொல்லும்போது இறந்தவர்கள் ஈழத்தமிழர்களல்ல, சீனர்களும் பாகிஸ்தானியர்களும்தான் என்று அவர் சொல்லக்கூடும்.


இதற்கிடையில் இங்கிலாந்தின் படையப் புலனாய்வுச் சஞ்சிகை ஜேன்ஸ் இன்ரலிஜென்ஸ் றிவியூ (Janes Intelligence Review) ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

புலிகள் சீனத் தயாரிப்பு சிறிய ரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மாத்திரமல்ல மோட்டார், ஆட்லறி போன்ற கனரக ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பது செய்தியின் சாராம்சம்.

இவற்றை அவர்கள் சீனர்களிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்திருக்கலாம் அல்லது கறுப்புச் சந்தை மூலம் பெற்றிருக்கலாம் என்ற ஊகத்தையும் அது வெளியிட்டிருக்கிறது.

இந்தச் செய்தியைச் சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சிண்டு முடிவதில் இந்தியா ஈடுபடுகிறது.

ஈழத்தமிழர்களை நசுக்குவதற்கு ஆயுதம் வழங்கினாலென்ன, சிண்டு முடியும் முயற்சியை மேற்கொண்டால் என்ன சீனாவைச் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றும் இந்திய முயற்சி வெற்றி பெறுமா என்பதே கேள்வி.

-அன்பரசு-

வெள்ளிநாதம் (01.08.08)

Comments