விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம்! பலவீனத்தின் வெளிப்பாடா? இராசதந்திர நகர்வா?

புலிகளின் இவ் அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை கடந்த வாரம்(01.08.08) தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறி லங்கா தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை ஒட்டி பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடாத்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் (?) அத் தகவலை ஊதிப் பெருப்பித்து ~விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்| என்ற தனது பொய்ப் பிரசாரத்தை வலுப்படுத்த சிங்கள தேசம் முயற்சித்த வேளையில் அதைத் தவிடுபொடி ஆக்குவதைப் போன்று விடுதலைப் புலிகளின் அறிவிப்பு வெளிவந்திருக்கின்றது.டூ

சிறிலங்கா மட்டுமன்றி இந்தியாவும் கூட விடுதலைப் புலிகளின் அறிவிப்பால் அதிர்ந்து போயிருக்கின்றது. பாரதப் பிரதமர் வருகை தரும்போது அவரது பாதுகாப்புக்கென கறுப்புப் பூனைக் கமாண்டோக்கள்;, இது தவிர சிறப்புப் பயிற்சி பெற்ற போர்வீரர்கள், யுத்தக் கப்பல்கள், போர் விமானங்கள் என சிறிலங்காவில் குவித்து விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து மன்மோகன் சிங்கைப் பாதுகாக்க (?) முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை, ஒரு துப்பாக்கி வேட்டோசை கூட இன்றி இந்த முனைப்புக்கெதிரான மிகப்பெரிய தாக்குதலை ஒரு அறிக்கை ஊடாக விடுதலைப் புலிகள் நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்| என்ற கருத்தை மீண்டுமொருமுறை வலுப்படுத்தி விட சிறிலங்கா மட்டுமல்ல இந்தியாவும் கூடத்தான் முயற்சித்தது. இல்லாவிட்டால் இந்த மாநாட்டைச் சாக்காக வைத்துக் கொண்டு இத்தகையதொரு இராணுவப் பிரசன்னத்தை சிறி லங்காவில் மேற்கொள்ள முயற்சித்திருக்காது.

(இந்தியாவுக்கு உண்மையிலேயே தாக்குதல் அச்சம் இருந்திருந்தால் அவர்கள் பெப்ரவரி மாதத்தில் செய்ததைப் போன்று ஏதாவது காரணத்தைக் கூறி பிரதமரின் பயணத்தை இரத்துச் செய்திருப்பார்கள். அல்லது ஏதாவது வழிமுறைகளுக்கு ஊடாக விடுதலைப் புலிகளை அணுகி பாதுகாப்பை உறுதிப் படுத்தியிருப்பார்கள்) இந்தியாவுக்கு எதிராக சிறி லங்காவில் உருவாகி வரும் அபிப்பிராயத்தை மாற்றும் அதேவேளை சிறி லங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஏக காலத்தில் ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்தது இந்தியா.

ஆனால், இவை அனைத்தையும் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள். இதுதவிர வேறு இலாபமும் விடுதலைப் புலிகளுக்கு உள்ளது. மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடாத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பை உலகநாடுகள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு சிறி லங்காவே தனது கைக்கூலிக்களைக் கொண்டு ஒரு ~புலிப் பாணித்| தாக்குதலை நடாத்தி விட்டால் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் சர்வதேச அரங்கில் சம்பாதித்துள்ள நற்பெயரைக் களங்கப்படுத்துவதுடன் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டுப் போயுள்ள தனது பெயரையும் காப்பாற்றிக் கொள்வதற்கு சிங்கள தேசம் உத்தேசித்திருந்தால் அந்தக் கனவு கூட புலிகளின் அறிவிப்பால் சிதைந்து போயுள்ளது.

இவை தவிர, அண்மைக்கால நகர்வுகளை நோக்கும் போது ஈழ மக்களின் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா மீண்டும் ஒரு சுற்று வரவிரும்புவது போலத் தெரிகின்றது. அது உண்மையானால், அதற்குத் தடையாக இருப்பது. நோர்வேயின் மத்தியஸ்தம். எனவே அது அகற்றப்பட வேண்டும். தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் வைத்து, ~தெற்காசியப் பிராந்தியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்| என்ற அறிவிப்பொன்றை பொதுவில் வெளியிட்டு விட்டு விடுதலைப் புலிகளுக்கும் சிறி லங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு தானே மத்தியஸ்தம் வகித்து அரைகுறைத் தீர்வொன்றைத் திணித்துவிடும் இந்தியாவின் மத்தியஸ்த முயற்சியும் கூட விடுதலைப் புலிகளின் காய் நகர்த்தலால் அடிபட்டுப் போயுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மூன்றாந் தரப்பு மத்தியஸ்தத்தை வரவேற்கும் அவர்கள் முறையான காரணம் எதுவும் இன்றி நோர்வேயை மத்தியஸ்த முயற்சியில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார்கள். இதனை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள் இத்தகைய சூழ்நிலையிலேயே விடுதலைப் புலிகளின் தற்போதைய 10 நாள் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிங்களம் உடனடியாக நிராகரிக்கும் என்ற விடயம் எதிர்பார்க்கப் பட்டதே. ஏனெனில், ~விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்| என சிங்களம் முன் வைத்துள்ள பரப்பரையை அவர்களே நம்பி இன்று வன்னியைச் சூழ அகலக் கால் பரப்பிக் கொண்டிருக்கின்றன சிங்கள ஆயுதப் படைகள்.

விடுதலைப் புலிகளின் சிறந்த படையணிகள் இன்னமும் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை| என சிறிலங்கா இராணுவத் தலைமையே பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில் வன்னியின் வாசற்படியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவர்கள் மௌனம் காப்பாதற்குப் பெறுமதியான காரணம் இருந்ததாக வேண்டும்.

அது என்னவாக இருக்கலாம் என்பதை ஊகித்துப் புரிந்து கொள்பவர்கள் விடுதலைப் புலிகளை, அதன் தலைமையின் சிந்தனைப் போக்கைப் புரிந்து கொண்டவர்கள் ஆவார்கள்.

அதேநேரம் போர் அரங்கில் விடுதலைப் புலிகள் விடுத்து வைத்தள்ள வலைக்குள் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ள சிங்கள அரசு போர் நிறுத்த அறிவிப்பு என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் விரித்து வைத்தள்ள இராசதந்திர வலைக்குள் - அதனை நிராகரித்ததன் மூலம் - வசமாக சிக்கிக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்புக்கும் சிங்களதேசத்தின் நிராகரிப்புக்கும் சர்வதேச ஊடகங்கள் வழங்கும் முக்கியத்துவத்தைக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு விடுதலைப் போராட்டமானது யுத்தகளத்தில் தீரத்துடன் போராடி நிலப்பிரதேசங்களை மீட்டெடுத்து வெற்றிக் கொடி நாட்டுவதோடு முடிவுக்கு வந்துவிடுகின்ற காலம் மலையேறி விட்டது. உலகமயமாதல் சூழலில், பூகோளமே ஒரு கிராமமாகச் சுருங்கி, பனிப்போர் முடிவுக்கு வந்து, ஒருவழிப் பாதையில் உலகம் நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில் இராசதந்திர யுத்தம் இன்றியமையாததாகின்றது.

கரந்தடிப் போர்முறையில் உலகிற்கு பல முன்னுதாரணங்களைத் தந்துள்ள விடுதலைப் புலிகள், தாம் போர்க்களத்தில் மட்டுமல்ல இராசதந்திரக் களத்திலும் கூடச் சளைத்தவர்கள் இல்லை என்பதை போர் நிறுத்த அறிவிப்புக்கூடாக நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

சரியான தருணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை சிங்களம் ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் ஓங்கப் போவது விடுதலைப் புலிகளின் கரங்களே ஏனெனில், இந்த அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல.

மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே!


Comments