களமுனையில் மிகச் சிறப்பாக செயற்பட்ட போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

களமுனையில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு எதிரியை அழித்த போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் எமது பிரதேசத்துக்குள் தாக்குதல் நடத்த முன்நகர்ந்த சிறிலங்கா படைகளுக்கு எதிராக திட்டமிட்டபடி முறியடிப்புத்தாக்குதல் நடத்தி- எதிரிக்கு அழிவுகளைக்கொடுத்து- எதிரியின் உடலங்களையும் ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றிய வெற்றித்தாக்குதல்களில் முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி சமர் ஆய்வு மையத்தின் மூலம் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இக்காலப்பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டு மிகச் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் ஒன்றில் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி போராளி கலையகன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையை போராளி அன்பு ஆற்றினார். இதனைத் தொடர்ந்து, தலைமையுரை நடைபெற்றது.

தடைகளை உடைத்தும் இடர்களை கடந்தும் சிறப்பாகச்செயற்படும் போராளிகளால்தான் எமது போராட்டத்தின் முக்கிய கட்டங்கள் வெற்றியான வளர்ச்சிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று தலைமையுரையில் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, மாவீரர் நினைவுப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டி சமர் ஆய்வு மையத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் பரிசில்களையும் மிகச்சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிகளின் சிறப்புத் தளபதி கேணல் ஆதவன் வழங்கி கருத்துரையாற்றினார்.

சிறப்புரையை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்த, நன்றியுரையினை போராளி ஈழவன் நிகழ்த்தினார்.

Comments