வன்னி நெருக்கடியும் சர்வதேச அக்கறையும்

வன்னிப் பிராந்தியத்தை மையப்படுத்தித் தொடரும் படை நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அதேவேளையில், தொடரும் யுத்தமும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவருவதில் காணப்படும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியிருக்கின்றது. இந்த நிலைமையில் ஐ.நா.மற்றும் ஏனைய உதவி அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையானது ஓரளவுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. அதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்வதற்காக உதவி வழங்கும் நாடுகள் தங்களுடைய உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா.மற்றும் ஏனைய உதவி அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்த நிலைமைகள் காரணமாக வன்னிப் பகுதியில் உருவாகியுள்ள மனிதப் பேரவலம் தொடர்பான தகவல்களை சர்வதேச சமூகம் கூர்மையாக அவதானிக்கின்றது என்பதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றது என்பதையும் உறுதிப்படுத்துவதாகவே இந்தச் செய்திகள் அமைந்திருக்கின்றன. இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியாத நிலையிலுள்ள சர்வதேச சமூகம், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிய வேண்டும் என முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்!

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட தொகையையும் அதிகரிக்க ஐ.நா.சபை தீர்மானித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வருட ஆரம்பத்தில் 145 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பணிகளுக்குத் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டிந்த போதிலும், தற்போது அத்தொகை 190 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனே தெரிவித்திருக்கின்றார். வன்னியில் அகதிகளின் எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக அதிகரித்திருப்பதை ஐ.நா.சபை கணக்கில் எடுத்திருப்பதைத்தான் இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.

வன்னியில் கடந்த ஒன்றரை வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்வதேச சமூகம் அதனையிட்டு கரிசனை கொள்ள வேண்டியது அவசியமானதாகும். மக்கள் இடம்பெயரும் வேகத்துக்கேற்ப அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வன்னிக்கு வெளியேயிருந்து கிடைக்கும் உதவிகளுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக அரசாங்க அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் தெரிவித்திருப்பது அங்குள்ள நிலைமைகளின் தீவிரத்தன்மையைப் புலப்படுத்துகின்றது.

அரச அதிகாரிகள் மற்றும் தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. தற்போதைய நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் அதிகமாகவிருப்பதாலும் கிடைக்கும் உதவிகள் மிகவும் போதாதிருப்பதாலும் அடுத்ததாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதில் மக்களின் உடனடித் தேவைகள் பலவும் அடையாளம் காணப்பட்டன.

தேவைகள் அடையாளங்காணப்பட்ட போதிலும் அவற்றை வழங்க முடியாத நிலைமை இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரிய இடப்பெயர்வு காரணமாக உருவாகியுள்ள நிலைமைகளைக் கையாளக்கூடிய இயலுமையை வன்னியில் செயற்படும் தொண்டர் அமைப்புகள் கொண்டிருக்கவில்லை.

தொண்டர் அமைப்புக்கள் இவ்வாறான கையாலாகாத நிலைமையில் இருப்பதற்கு அரசாங்கத்தின் அணுகுமுறைகளே காரணம்.

பல தொண்டர் அமைப்புகள் "புலிகள்' என முத்திரை குத்தப்பட்டதால் அவற்றின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் சில தொண்டர் அமைப்புகளின் செயற்பாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமது செயற்றிட்டங்கள், நிவாரணப் பணிகள் என்பவற்றுக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்வதுகூட கட்டுப்படுத்தப்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான் இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் தொண்டர் நிறுவனங்களோ அரசாங்கத் திணைக்களங்களோ இல்லை. மழை காலம் ஆரம்பமாக முன்னர் இடம்பெயர்ந்த மக்களுடைய இருப்பிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசர தேவை உள்ளது. இதனை முழுமையாகச் செய்துகொடுக்கும் நிலையில் வன்னியில் செயற்படும் தொண்டர் நிறுவனங்கள் இல்லை.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உதவுவதில் கடந்த காலங்களில் பாரபட்சமாகவே செயற்பட்டு வந்த அரசாங்கம், இந்தச் சந்தர்ப்பத்தில் கூட அரசியல், இராணுவ நலன்களின் அடிப்படையிலேயே காய்களை நகர்த்துகின்றது. இடம்பெயர்ந்தவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது. இந்தப் பின்னணியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

இந்த நிலையில்தான் சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்வதற்காக உதவி வழங்கும் நாடுகள் தங்களுடைய உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா.மற்றும் உதவி அமைப்புகள் கோரிக்கை விடுத்திருப்பது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியாகவுள்ளபோதிலும், இவ்விடயத்தில் பல கேள்விகள் எழுவதும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. சர்வதேச சமூகத்தின் உதவி அதிகரித்தாலும் கூட அவை, பாதிக்கப்பட்ட மக்களை எந்தளவுக்குச் சென்றடையும் என்பதும் கேள்விக்குறிதான். இவை உரிய முறையில் உரிய நேரத்தில் சென்றடைவதை அரசு அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.

பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ள ஐ.நா.சபையும் ஏனைய உதவி அமைப்புகளும், நிவாரணங்கள் உடனடியாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய நடவடிக்கைளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அறிக்கைகளை வெளியிடுவதோ கோரிக்கைகளை முன்வைப்பதோ மட்டும் வன்னியில் வாடும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் உரிய காலத்தில் சென்றடைவதைஅரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையிலான அழுத்தங்களைக் கொடுப்பதும் சர்வதேச சமூகத்தின் முன்பாகவுள்ள முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்!


Comments