அரசாங்கத்தின் பிரசாரப் போருக்கு புலிகள் கொடுத்த பதிலடி

வடமத்திய மாகாணசபை மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் ஆரம்பமாகிய போது அரசாங்கம் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது இராணுவத்தினர் துணுக்காய்ப் பிரதேசத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பதே அந்த தகவலாகும். எந்த நோக்கத்தோடு அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததோ அதற்கான பலன்களையும் அரசாங்கம் அறுவடை செய்திருந்தது.

போரின் மனப்பான்மையுடன் வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டும் என்பது தற்போது அரசாங்கத்துக்கு இன்றியமையாததாகி விட்டது. தேர்தலின் போது தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் படை அதிகாரிகளை முன்னிறுத்தி இருந்தன.

இந்த நிலையில் யாழ்குடநாட்டில் உள்ள படையினருக்கு மன்னாரில் இருந்து ஏ32 நெடுஞ்சாலை ஊடாக ஒரு விநியோகப் பாதையை திறப்பதற்காக படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையின் இலக்கை படையினர் தற்போது கிளிநொச்சியை நோக்கி நகர்த்தியுள்ளனர்.

படையினரின் இந்த நோக்கத்திற்கு பின்னால் பாரிய இராணுவ அனுகூலம் ஒன்று உள்ளது. அதாவது எதிர்வரும் பருவமழை காலத்திற்கு முன்னர் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றினால் கிளிநொச்சியில் இருந்து ஆனையிறவின் ஊடாக தமது விநியோகத்தை சீர்செய்து கொள்ள முடியும் என்பது அவர்களின் உத்தி.

இராணுவம் கிளிநொச்சியை அடைந்தால் கிளிநொச்சிக்கும் முகமாலைக்கும் இடையில் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்பதும், அதன் பின்னர் கிளாலி முகமாலை, நாகர்கோவில், அச்சில் கவசப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் இலகுவாகலாம் என்பதும் படைத்தரப்பின் உத்திகள்.

ஆனால், கிளிநொச்சியை நோக்கி மேற்கொள்ளப்படும் நகர்வுகள் இலகுவானதாக இருக்கப்போவதில்லை. ‘வெற்றி நிச்சயம்’ படை நடவடிக்கையின் போதும் படையினரின் இலக்கான 74 கி.மீ தூரத்தில் ஏறத்தாழ 50 கி.மீ தூரத்தை 8 மாதங்களில் கடந்த படையினர் பின்னர் ஒரு வருடத்திற்கு மேலாக 24 கி.மீ தூரத்தை கடக்க முடியாது போனதும் நாம் அறிந்தவையே.

படையினரும், அரசாங்கமும் கிளிநொச்சி நோக்கி தமது அனைத்து வளங்களையும் செறிவாக்கி வருகையில் வான்புலிகள் ஏழாவது தடவையாக இலங்கையின் மிக முக்கிய கேந்திர மையத்தை தாக்கி உள்ளார்கள். இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படைகளின் தென்கிழக்கு ஆசியா கட்டளை பீடமாக விளங்கியதும் (அடூடூடிஞுஞீ குணிதtட உச்ண்t அண்டிச் இணிட்ட்ச்ணஞீ அகுஉஅஇ) தற்போது யாழ்குடாவில் உள்ள படையினருக்கான பிரதான விநியோக மையமாக விளங்குவதுமான திருமலை துறைமுகத்தை வான்புலிகளின் இரு வான் கலங்கள் தாக்கிவிட்டு சென்றமை படைத்தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் மற்றுமொரு விமான ஓடுபாதையை அமைத்து வருவதாக இலங்கை புலனாய்வு வட்டாரங்கள் கடந்த 15 ஆம் திகதி தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளில்லாத உளவுவிமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு இந்த தகவலை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

புதிய விமான ஓடுபாதை தொடர்பாக அரசாங்கம் தனது கவனத்தை குவித்து வருகையில் விடுதலைப்புலிகள் மிகவும் பாதுகாப்பு மிக்கதும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான தளப்பகுதியை தாக்கியுள்ளமை அரசாங்கத்தின் பிரசார போருக்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வான்புலிகள் மணலாறு களமுனையில் உள்ள படையினரின் தளத்தை தாக்கிய போது விடுதலைப் புலிகள் திருமலை துறைமுகத்தை தாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கப்போவதில்லை என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டிருந்தது. வடபோர்முனை இராணுவத்தின் விநியோக உயிர்நாடியான இந்தத் தளத்தின் மீதான அச்சுறுத்தல் படை நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்கு என்ன என்பது தொடர்பாக பல தரப்பட்ட ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருமலையில் இருந்து காங்கேசன்துறைக்கு படையினரை ஏற்றிச் செல்லும் ஜெற்லைனர் (ஒஞுt ஃடிணஞுணூ) எனப்படும் பாரிய துருப்புக்காவி கப்பலே வான்புலிகளின் பிரதான இலக்கு எனவும் எனினும் அது தவறிவிட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 3,000 படையினரை ஏற்றிச் செல்லும் இந்த கப்பலில் மூன்று உயர் அதிகாரிகள், 7 அதிகாரிகள், 113 கடற்படை சிப்பாய்கள் என 123 பேர் பணியாற்றுவதுண்டு. திருமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பாலமாக செயற்படுவதில் இந்த கப்பலின் பங்களிப்பு காத்திரமானது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் அன்று காங்கேசன்துறையில் இருந்து திருமலைக்கு சென்று கொண்டிருந்த இந்த கப்பலை கடற்புலிகள் புல்மோட்டை கடற்பரப்பில் முற்றுகையிட்டிருந்தனர். எனினும் அது அதிஷ்டவசமாக தப்பிவிட்டது. அதன் பின்னர் இந்த பாரிய துருப்புக்காவி கப்பலின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் பேணப்பட்டு வருகின்றது.

இந்தக் கப்பலானது யாழ் நோக்கி தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு 12 மணிநேரங்களுக்கு முன்னர் திருமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுவதுண்டு. கப்பலில் ஏற்றப்படும் படையினரின் எண்ணிக்கைகள் வெளியில் தெரியாது இருப்பதற்காக இரவோடு இரவாகவே படையினர் அதில் ஏற்றப்படுவதுடன், படையினர் ஏற்றப்படும் போது தேவையற்ற வெளிச்சங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிடும்.

யாழ் நோக்கி நகர்த்தப்படும் துருப்புக்கள் சீனன்குடா இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்ட பின்னர் சிறிய கப்பல்களில் திருமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதில் ஏற்றப்படுவார்கள். இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் படையினரை ஏற்றும் நடவடிக்கைகள் நள்ளிரவு 12 மணிக்கு நிறைவுபெற்றதும் கப்பல் வழமையாக அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு புறப்படுவதுண்டு. அதற்கு பாதுகாப்பாக ஒரு டசின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகளும் ஒரு சில பீரங்கிப் படகுகளும் வழித்துணை வழங்கும்.

இந்தக் கப்பல் பயணத்திற்கு முன்னர் படைத்தரப்பு புலனாய்வுத் தகவல்கள் மற்றும் களநிலைமைகளை கருத்தில் எடுப்பதுடன், மிகவும் இரகசியமாகவே பயணத்தை மேற்கொள்வதுண்டு. கப்பல் பருத்தித்துறையை அடையும் போது வடபிராந்திய கடற்படை தளத்தின் டோரா பீரங்கி படகுகளும் கிழக்கு பிராந்திய டோரா பீரங்கி படகு தொகுதியில் இணைந்து கொள்வதுடன், இரு எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் பாதுகாப்பு வழங்குவதுண்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் வான்புலிகள் திருமலை துறைமுகத்தில் குண்டுவீச்சை நிகழ்த்திய போது ஜெற்லைனர் துருப்புக்காவிக் கப்பல் படையினரை ஏற்றிகொண்டு இருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. அதிகாலை 2 மணியளவில் புறப்படவிருந்த அந்த கப்பலில் தாக்குதல் நடைபெற்ற சமயம் 1,000 படையினர் வரையில் ஏற்றப்பட்டிருந்ததாகவும் எனினும் விடுதலைப்புலிகள் இரவில் இலக்கை தவறவிட்டுவிட்டதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. எனினும் கப்பல் பயணம் பிற்போடப்பட்டதால் பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக வேறு சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருமலை துறைமுகத்தை கடற்பகுதியால் அண்மித்த இரு இலகுரக விமானங்கள் தலா 25 கிலோ நிறையுடைய நான்கு குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளன. அவற்றில் இரண்டு கடற்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஒன்று வெடிக்கவில்லை, மற்றைய குண்டு கடலில் வீழ்ந்து வெடித்துள்ளது. தளத்தினுள் வீழ்ந்து வெடித்த குண்டுகளில் ஒன்று கடற்படையினரின் பயிற்சித் தளத்திற்குள்ளும், மற்றையது அதிகாரிகளின் தங்குமிடத்திற்குள்ளும் வீழ்ந்துள்ளன. இந்த தாக்குதலில் 12 கடற்படையினர் காயமடைந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதும், பின்னர் 4 படையினர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் போது 9 படையினர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சில கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் படையினரின் இரு படகுகள் மூழ்கியதாகவும் அவை தமது செய்தியில் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் கடற்படையினரின் தளப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், 4 படையினர் கொல்லப்பட்டும், 34க்கும் அதிகமான படையினர் காயமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். படைத்துறை இழப்புக்கள் ஒருபுறம் இருக்க இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ள உளவியல் மற்றும் பிரசார தாக்கங்கள் அதிகம். அரசாங்கம் கடந்த 18 மாதங்களாக தனது வான்பாதுகாப்பு பொறிமுறைகளை பலப்படுத்தி வருகையில் வான்புலிகள் ஏழாவது தடவையும் தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியது அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் தெற்கில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தலாம்.

வான்புலிகள் துறைமுகத்தை தாக்கிய போது திருமலைத்துறைமுகத்தின் பாதுகாப்பு கடமைகளில் இருந்த படையினர் விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்கள், சாதாரண துப்பாக்கிகள் போன்றவற்றால் வானத்தை நோக்கி சரமாரியாக தாக்குதலை தொடுத்திருந்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில் சீனன்குடாவில் உள்ள படையினரும் இணைந்திருந்தனர். எனினும் வான்புலிகளின் விமானங்கள் இந்த தாக்குதல்களில் இருந்து மிகவும் சாமர்த்தியமாக தளம் திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வன்னியில் உள்ள தமது தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த வான்புலிகளின் தாக்குதல் விமானங்களை இடைமறித்து தாக்குமாறு அனுராதபுரம் மற்றும் மின்னேரியா படைத்தளங்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அனுராதபுரம் மற்றும் வவுனியா பகுதி வான்படை தளங்களில் இருந்து தாக்குதல் உலங்குவானூர்திகள் மேலெழுந்த போதும் அவை வான்புலிகளை இடைமறித்து தாக்க முயற்சிக்கவில்லை. தமது தளங்களை தாக்குதல் அச்சத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் தளங்களிற்கு மோலான வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்தன.

மின்னேரியா வான்படைத் தளத்தில் இருந்து இரு எஃப்7 தாக்குதல் விமானங்கள் மேலெழுந்த போதும் அவற்றால் வான்புலிகளின் தாக்குதல் விமானங்களை இடைமறித்து தாக்க முடியவில்லை. இரவு 9.12 மணியளவில் வவுனியாவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுர ராடர் திரைகளில் வான்புலிகளின் விமானங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வவுனியா பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் சொற்ப நேரத்தில் வான்புலிகளின் விமானங்கள் ராடர் திரையில் இருந்து மறைந்துவிட்டன. மேலும் வன்னி வான்பரப்பில் அதிகளவான விமானங்களின் பறப்புக்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் திருமலையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் நிறுவப்பட்டிருந்த ராடர்களிலும், கடற்படை கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த ராடர்களிலும் வான்புலிகளின் தாக்குதல் விமானங்கள் அவதானிக்கப்படாதது படைத்தரப்புக்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
தாக்குதல் சேதங்களுக்கு அப்பால் இது படையினரின் உளவுரனில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. விடுதலைப்புலிகளின் விமானங்கள் கடல்மட்டத்துடன் கிழக்குப் பகுதியால் பறந்து வந்து துறைமுகத்தை அண்மித்ததும் மேலெழுந்ததாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலுக்கு கடல் விமானம் போன்ற புதிய தாக்குதல் விமானத்தை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிட்டுள்ளனர். முன்னர் நடைபெற்ற வான் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் ஙூடூடிண143 இலகுரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தியிருந்தனர் என்பது நீங்கள் அறிந்தவையே.

தற்போதைய தாக்குதலை ஆராய்ந்து வரும் வான்படை அதிகாரிகள் முன்னர் வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாகவும் மீண்டும் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் எல்லாத் தாக்குதல்களுக்கும் விடுதலைப்புலிகள் ஒரே வகையான தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி உள்ளனரா? அல்லது வேறு வகையான விமானங்களை பயன்படுத்தி உள்ளனரா? என்ற முடிவுக்கு வர முடியும் என படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வான்புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்திவிட்டு சென்ற பின்னர் விடுதலைப்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவினர் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தில் கடற்படையினர் உட்துறைமுகப்பகுதியில் நீருக்கு அடியிலான டோப்பிடோ வெடிப்பு ஒன்றை நள்ளிரவு 12.00 மணியளவில் மேற்கொண்டிருந்தனர். இந்த வெடிப்பதிர்வை தொடர்ந்து கடற்படைத் தளத்தின் வெளிப்புற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இது மீண்டும் வான்புலிகள் துறைமுகத்திற்குள் நுழைந்து விட்டதான பீதியை அங்கு கிளப்பியிருந்தது.

வான்புலிகளின் விமானங்களுடன் வானில் மோதுவதை தவிர்த்துக் கொண்ட வான்படையினர் அவர்களின் விமானஓடு பாதை அமைந்துள்ள பகுதியாக கருதப்படும் இரணைமடு பகுதி மீது மிகையொலி விமானங்கள் இரண்டு மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கடந்த மே மாதம் திருமலை துறைமுகத்திற்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவை சேர்ந்த கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் கடற்படையின் எம்வி இன்விசிபிள் (ஏ520) என்ற விநியோக கப்பல் மூழ்கடிக்கப்பட்டதும், தற்போது வான்புலிகள் அங்கு தாக்குதல் நடத்தியதும் படையினரின் பெரும் வளங்கள் குவிந்து கிடக்கும் யாழ்குடாநாட்டிற்கான விநியோகங்கள் முடங்கிப்போகலாம் என்ற அச்சங்களை படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது.

படைத்தரப்பிற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் போர் தொடர்பான அரசின் பிரசாரங்களுக்கு திருமலைத் துறைமுகம் மீதான வான்புலிகளின் தாக்குதல் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் உதவியுடன் அரசு தொடர்ச்சியாக தனது வான்பாதுகாப்பு பொறிமுறைகளை பலப்படுத்தி வருகையில் எதிர்வரும் காலங்களில் வான்புலிகள் தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்ப முடியாது என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் வான்புலிகள் கேத்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் சாத்தியங்கள் உள்ளதாக அரசு பெரும் பிரசாரங்கள் மேற்கொண்ட நிலையில் வான்புலிகள் நவீன ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவி அதி உச்ச பாதுகாப்பு கொண்ட தளப்பகுதி மீது தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியது அரசின் பிரசார போருக்கு ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்லாது, படை நடவடிக்கைகளிலும் எதிர்வரும் காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

- அருஷ் -


Comments