நாட்டைக் காக்க...

நெருநல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமை படைத்திவ்வுலகு|

இது வள்ளுவன் வகுத்த நெறிமுறையன்று நடைமுறை. மனித வாழ்க்கை அவ்வளவுதான். இவ்வளவுதான் என்றுள்ள வாழ்க்கையை, எவ்வளவு! என வியக்க வைக்கும் செய்கைகளால் நிரப்ப வேண்டியது எமது கடமை. இதன்பாற் கடமை மட்டுமல்ல, எமது நிரந்தரமான சுபிட்சமான வாழ்வும் தங்கியுள்ளது.

நான் வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை ஒருபோதும் வெற்றி கண்ட தில்லை. ~ஊர் ஓடினால் ஒத்தோடு, ஒருவன் ஓடினால் கேட்டோடு| என்பர், ஊரே ஓடிக்கொண்டிருந்தால் கேள்வியில்லை. நாமும் ஓடலாம். ஆனால் ஒருவன் மட்டும் ஓடினால் ஏன் ஓடுகிறாய்? என்று கேட்டு, அது சரியான காரணம் எனக்கண்டால் நீயும் சேர்ந்து கொள்ளலாம்.

புல்லுருவிகளையும் வதந்தி பரப்புவோரையும் இனங்கண்டு ஒதுக்கிவிட்டு, தேசத்தின் பணியை எமதாக்கித் தொடர்வதையே சரித்திரமாக மாற்றி நாட்டைக் காப்போம்.

காலம் எப்படியோ நகரத்தான் செய்கிறது. அது எவ்வளவுதான் அளவுகளால் குறிப்பிடப்பட்டாலும், அதற்கென ஒரு வலிமையான குறியீட்டுப் பெயர் ஒன்றுண்டு.

'காலச் சக்கரம் காலச்சக்கரம் வேகமாய்ச் சுழன்றோடுதே தர்மம் வாடுதே" என்றொரு பழைய பாடல் ஒன்றுண்டு. பட்டினத்தார் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ~காலத்தச்சன்| என்றார்.

கட்டியணைத்திடும் பெண்டிரும் மக்களும், காலதச்சன் வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டிமுழக்கி அழுவார்; மயானம் குறுகி அப்பால் எட்டி அடிவைப்பரோ..?

என்று புலம்பி தன் இல்லத்தைத் துறந்து பொது வாழ்க்கையை மேற்கொண்டார்.

இது எல்லோருக்கும் பொதுவான நெறிதான். மானிட வாழ்க்கையே தற்காலிகமானதுதான். எனினும் வாழும் காலத்தில் அவர்கள் செய்த மகத்தான செயல்களால், இறந்த பின்னும் பெயர் நிலைத்து இன்னும் வாழ்பவர்களாக உள்ளோர் இருக்கின்றனர். குறளால் வள்ளுவர், கவியால் பாரதி, தானத்தால் சடையப்பர், பாரி, காப்பியத்தால் கம்பன், வீரத்தால் இராவணன், பண்டார வன்னியன், கட்டப்பொம்மன், தேசப்பற்றுக்கு வ.உ.சி.காந்தி, நேதாஜி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சாதிக்க வேண்டும் என்ற மனம் எல்லோருக்கும் உண்டு. ஆனால், சாதனைக்கான காலம் எல்லோருக்கும், எப்போதும் வாய்ப்பதில்லை. அது அருமையாகவே அமைகிறது.

விடுதலை வேண்டி நிற்கும் எல்லா நாடுகளும் போராடுவதில்லை. அடிமையாய் அடங்கிக் கிடந்தாலும் அது பற்றி அலட்டிக்கொள்ளாமல் பதவிகளிலும் பட்டங்களிலும் மகிழ்ந்து முதுகு சொறிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகள் உண்டு. இவற்றின் தலைவர்கள் எனக்கூறிக் கொள்வோர் தம்மை வளர்த்துக்கொள்ள மக்களைப் பலிக்கடாக்களாக்கி வைத்திருப்பர். உதாரணமாக இந்தியாவின் ஒருமைப்பாட்டுக் கோட்பாடு என்பது போலியானது எனக்கண்டும் இரண்டொரு மாநிலங்கள் தவிர ஏனையவை அடங்கிப் போயிருக்கின்றன.

தனது உரிமைக்காகப் போராடும் வாய்ப்பு எல்லோருக்கும் இலகுவில் கிடைப்பதில்லை. அந்த வாய்ப்புக் கிடைக்கும் போது, அதை எல்லோரும் பயன்படுத்துவதுமில்லை என்றால் அப்பணிக்கு எல்லோரும் அழைக்கப்படுவதுமில்லை.

மனித வாழ்க்கையில் மானம் உயிரினும் பெரிதாக உரைக்கப்படுவது, தனது நிலை தாழ்ந்தாற்கூட வாழத் தலைப்படாதவன் மனிதன். இந்த அடிப்படைகளின் மீது சிந்தித்தால் இன்றைய தமிழீழத் தமிழர்களுக்கு வாய்த்திருப்பது பொற்காலம் என்று தான் கூறவேண்டும்.

உலகில் வியட்நாம், ரஷ்யா, சீனா, கியூபா போன்று வியத்தகு சாதனைகளைச் சாதித்த மக்கள் சேனைகளின் அந்த வரிசையில் வன்னி மக்களுக்கு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அனலில் காய்ச்சி அடித்தால் இரும்பு கூட ஆயுதமாகி விடுகிறது. வன்னித் தமிழர் கூட தீயினில் கலந்த வாழ்க்கையை அனுபவித்துப் புடம் போடப்பட்டவர்களாக மாறியுள்ளனர்.

எமது வாழ்க்கை அவலம் நிறைந்தது தான், ஆயினும் 'எமக்கு அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடுக்க நாம் தயாராகிவிட்டோம்" என்பது போல மக்கள் எழுச்சி காணப்படுகின்றது.

சாவு வரும் என்பதற்காக, யாரும் ஓய்ந்துபோய் இருப்பதில்லை. சாதனைக்காக உயிரைப் பணயம் வைப்பவர்கள் உண்டு. சாகசங்களில் மகிழ்வூட்டுதல் மட்டுமே உண்டு. சாதனைகள் வீரம் செறிந்தவை. மக்களின் ஆன்மாவைத் திருப்தி செய்பவையாக அமைதல் வேண்டும்.

காலத்தச்சன் வெட்டி முறிப்பது நிச்சயம் எனினும் காலத்தின் கட்டளையை ஏற்றுப்பணி செய்து அதனாற்கிடைக்கும் பேறு, இரந்தும் பெற்றுக்கொள்ளத்தக்கதாகும்.

எதிரி எம்மண்ணிலிருந்து எம்மை வேருடன் கிண்டி எறிந்து கொண்டிருக்கிறான்.

சீரோடு வாழ்ந்து, வேரோடு சாய்ந்த வாழ்க்கை தமிழர்களுக்கென்ன விதியா? பற்றைக் காடுகள் கைவிடப்பட்ட தரிசுகள், வரண்ட கிணறுகள், பாலைவெளிகள், புழுதிமலைகள், தெருக்கரைச் சமையல், மரத்தடித் தூக்கம் என்று எப்படிப் போகிறது வாழ்க்கை.

இந்த வாழ்க்கைக்கும் கூடப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. ஓரிரு எறிகணை வீச்சுக் கண்டு, ஓடிவந்து பாதுகாப்புத் தேடும் மக்கள் நாங்கள். அதே சமயம், அந்த எறிகணை மழைக்குள் அயராது நின்று எதிரியைத் தடுத்து, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் எங்கள் வீரர்களைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்- அவர்கள் நின்று போரிடப் பாதுகாப்பு அகழிகள் வேண்டும். அதையும் அவர்களே வெட்டிக்கொள்ளட்டும் என்று விடுவது பொறுப்பற்றதாகும்.

ஆயுதங்களைக் கைகளில் அவர்கள் வைத்திருக்கும் வரை தான் எமக்குப் பாதுகாப்பு. அதை அவர்கள் கீழே வைத்துவிட்டு அகழி வெட்டினால்... அது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குரியதாக்கிவிடும். ஆக, மக்கள்தான் அந்த மகத்தான பணியைச் செய்யவேண்டும்.

கடமைகளிலிருந்து தவறியவர்கள், பின்னாளில் தனது சந்ததியின் முன் அவமானப்பட நேரும்! நாடென்ன செய்தது நமக்கு என்று கேட்பதைவிட்டு நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் என்று யோசிப்போம்.

- மாயா -

நன்றி: வெள்ளிநாதம் (29.08.08)

Comments