சிங்களச் சிறைச்சாலைப் படுகொலைகள்

தமிழ் இலக்கியத்திலே நனவிடை தோய்தல் என்றால் பழையதை நினைவுகூரல் என்று பொருள். நாம் கட்டாயமாக முன்பு நடந்தவற்றை, நாம் கடந்து வந்தவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அது எமது போராட்டத்தை வலுப்படுத்தும். சிங்களப் பேரினவாதிகள் செய்த தமிழினப் படுகொலைகளை எண்ணித் துவண்டு போகாமல் எமது போராட்ட வலுவை உயர்த்த வேண்டும்.

அன்றைய தமிழ்மக்கள் சேவல் கூவ எழுந்தார்கள். இன்றைய தமிழ்மக்கள் செல் கூவ எழும்புகிறார்கள். எமது வாழ்வின் தன்மை மாறிவிட்டது. அதற்காக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. பழையது எமக்குப் புத்துணர்ச்சி ஊட்டும், தொடர்ந்து போராடும் வலுவைத்தரும்.

சென்ற மாதம் கறுப்பு ஜுலைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருட நிறைவை மனமுருக மெய்யுருக நினைவு கூர்ந்தோம். சிங்களவர்கள் இந்த இனப்படுகொலை நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் பார்க்கிறார்கள். முன்யோசனை இல்லாமல் இதைச் செய்தோமே இதனால் எமக்குக் காட்டுமிராண்டிகள் என்று பெயர் கிடைத்ததே என்று கவலைப்படுகிறார்கள்.

ஆனால் கொல்லப்பட்ட 3000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்காக வருந்தியதாகவோ பகிரங்கமாக அனுதாபம் தெரிவித்ததாகவோ வரலாறு இல்லை. தமது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டதே என்று கலங்குபவர்கள் படுகொலைகளை நிறுத்திவிட்டார்களா? இல்லவே இல்லை. சிங்களவன் மாறமாட்டான். அவனுடைய கொலை உணர்வு அவனோடு கூடப்பிறந்தது. ஒரு படித்த சிங்களவனின் மேல் தோலைச் சுரண்டிப் பாருங்கள். அவன் உடலில் ஒரு கொலைப் பாதகன் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணம் வேண்டுமா? பண்டாரநாயக்கா போல் படித்த மனிதன் யார் இருக்கிறான்? 1956, 1958 ஆம் ஆண்டுப் படுகொலைகளை முன்னின்று நடத்தியவரும் அவர்தான். இலங்கைத்தீவின் படுகொலை வரலாற்றைத் தொடக்கிய பிரதமர் பண்டாவை எம்மால் மறக்க இயலாது. சிறிலங்காவின் வன்முறை வரலாற்றில் அவர் ஒரு பிதாமகராவார்.

சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை என்று பொதுவாக நம்பப்படுகிறது. உடைத்துக்கொண்டு வெளியே போவதும், வெளியில் இருந்து உள்ளுக்குச்செல்வதும் கடினம் என்று சொல்லப்படுகிறது.

சிறைச்சாலை அதிகாரிகள் தவிர்ந்த பிறிதொருவர் அங்கு போவதற்கும் வருவதற்கும் இயலாத விதத்தில் சிறைச்சாலைகள் கட்டப்படுகின்றன. தடுப்புச் சுவர்கள், அகழிகள், இரும்புக்கதவுகள், இரட்டைப் பூட்டுக்கள் என்பன ஒரு சிறைச்சாலையின் பாதுகாப்பு ஒழுங்கில் அடங்குகின்றன. கைதிகள் தத்தம் அறைகளுக்குள் தள்ளப்பட்டு அறைக்கதவு பூட்டப்பட்டால் அவர்களால் அறையைவிட்டு வெளியே வரமுடியாது.

ஆயுதம் தாங்கிய சிறைக்காவலர்கள் இரவு-பகலாகக் காவல் கடமையில் ஈடுபடுகிறார்கள். அவர்களையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொலிஸ் அல்லது இராணுவத்தை அழைக்கும் மேலதிக வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பு ஒழுங்குகள் அனைத்தும் வீணாகி விடும். அறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மூலம் சிறைக் காவலர்கள் தமது ஊதியத்திற்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுகிறார்கள்.

நல்ல வசதியுள்ள கைதிகள் சொகுசான படுக்கைகள், கையடக்கத் தொலைபேசிகள், விசேட உணவுகள் போன்றவற்றைக் காவலர்கள் ஊடாகப் பெற்று விடுகிறார்கள். சிலர் இரகசியமாக இரவோடு இரவாக வீட்டுக்குப் போய் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கண்டி போகம்பறை சிறைச்சாலையில் ஜெனரல் ரத்வத்தை ஒரு படுகொலைக் குற்றச்சாட்டில் தனது சற்புத்திரர்களோடு அடைக்கப்பட்டிருந்தபோது, சிறிலங்காவின் அப்போதைய சனாதிபதி சந்திரிகா அவர்களுடைய வாய்க்கு ருசியான உணவைத் தானே எடுத்துச் சென்று வழங்கியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நானும் நீயும் ஒன்றுபட்டால் சிறைச்சாலை என்ன செய்யுமடி கண்ணே என்ற நாட்டார் பாடல் வரி இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

கறுப்பு ஜுலை நிகழ்வுகள் பற்றி 1984 இற்கும் 2001 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பாரிய ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இவை நாட்டில் நடந்த பரவலான படுகொலைகள், தீ வைப்புக்கள், சூறையாடல்கள், கற்பழிப்புக்கள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைக்கு ஒரு சில வரிகளே இந்த நூல்கள் ஒதுக்கியுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் கொழும்பில் இருந்தவாறு ஒரு தான்தோன்றி அமைப்பை நடத்திவரும். ராஜன் கூல் எழுதிய நூலில் மாத்திரம் வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் பற்றிய சில விரிவான தகவல்களைக் காணமுடிகிறது. இந்த ஆங்கில நூலின் தலைப்பு ~அதிகார மமதை, போலி நம்பிக்கைகள், சீர்கேடு மற்றும் படுகொலை (வுhந யுசசழபயnஉந ழக Pழறநச: ஆலவாளஇ னுநஉயனநnஉந யுனெ ஆரசஉநச சுயதயn ர்ழழடந 2001)

சிறிலங்காவின் முன்னணிச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலைக் கட்டட ஒழுங்கிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் சிறந்து விளங்குகிறது. நான்கு முனைகள் கொண்ட சிலுவை வடிவத்தில் சிறைக்கட்டடத்தின் அடித்தளம் கட்டப்பட்டிருக்கிறது. நான்கு நீளமான கட்டடங்களும் சந்திக்கும் நடுப்பகுதியில் விசாலமான அறை காணப்படுகின்றது. இந்த அறைக்குள் கைதிகள் பிரவேசிக்க முடியாதவாறு சிலுவையின் நான்கு பக்க உட்புற வாயில்களும் கனமான இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கதவுகளின் திறப்புக்களைக் கையாளும் உரிமை சிறைக்காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிலுவையின் நான்கு பாகங்களில் அடைக்கப்பட்டவர்கள் ~லொபி| (டுழடிடில) எனப்படும் நடு அறைக்கு வரமுடியாது. கதவுகள் திறக்கப்பட்டால் அவர்கள் இங்கு வரமுடியும். அல்லது இங்கிருந்து அவர்கள் பகுதிக்கு யாரேனும் செல்ல முடியும்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாடிக் கட்டடங்களும் உண்டு. ஏறத்தாழ வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைத்திருக்க முடியும். வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்திற்குள் வயது குறைந்த கைதிகளை அடைத்து வைக்கும் கட்டடங்களும் உண்டு. இந்தச் சிறைச்சாலையில் பெண் கைதிகளை அடைத்து வைக்கும் பிரத்தியேக பகுதிகளும் உள்ளன.

சிலுவை வடிவிலான இந்தச் சிறைச்சாலையின் தரைப்பகுதியிலுள்ள நான்கு அலகுகளும் ஏ3, பீ3, சீ3, டீ3 என்று ஆங்கிலத்தில் அடையாளமிடப்பட்டிருக்கின்றன. ~படுகொலை களுக்குள் படுகொலைகள்| என்று ஆய்வுகள் வர்ணிக்கும் வெலிக்கடைப் படுகொலைகள் நடந்த ஜுலை 25 ஆம் நாள் பின்வரும் ஒழுங்கில் தமிழ்க்கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். 28 கைதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பீ3, சீ3, டீ3 இல் அடைக்கப்பட்டிருந்தனர்.

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோருடன் இன்னும் மூவர் தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இவர்கள் பீ3 அலகிலுள்ள அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்வதற்கு முன் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 தமிழ் இளைஞர்கள் டீ3 அலகிலுள்ள அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பயங்கரக் குற்றவாளிகள் (னுயபெநசழரள ஊசiஅiயெடள) என்ற தரப்படுத்தலுடன் பல சிங்களக் கைதிகள் ஏ3 அலகில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதே நாளில் வெலிக்கடைச் சிறைச்சாலை மேல் மாடி அறைகளில் 800 வரையான சாதாரணக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைச்சாலை வளாகத்தினுள் கட்டப்பட்டிருந்த குறைந்த வயதுக் கைதிகளுக்கான கட்டடத்தில் 75 வயதினரான மருத்துவர் எஸ்.ஏ.தர்மலிங்கம், காந்தீயம் தொண்டர் அமைப்பின் செயலாளர் டாக்டர் எஸ்.இராஜசுந்தரம், ஜெயகுலராஜா, அருட்தந்தையர்கள் சிங்கராயர், சின்னராசா, கிறிஸ்தவ மதகுரு ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் எம்.நித்தியானந்தன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், காந்தீயம் தொண்டர் அமைப்பின் தலைவர் கட்டடக் கலைஞர் அருளானந்தம் டேவிட் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஜுலை 25 ஆம் நாள் மதியம் இரண்டு மணியளவில் 400 சிங்களக் கைதிகள் மேல்மாடியில் இருந்து வெளியே வந்து பீ3, டீ3 அலகுகளுக்குள் புகுந்தனர். சிறைக்காவலர்களின் ஒத்துழைப்புடன் இது நடந்தேறியது. மேல்மாடிக் கதவுகளையும் பீ3, டீ3 அலகுகளின் கதவுகளையும் சிறைக்காவலர்கள் திறந்துவிட்டனர்.

சனாதிபதி ஜெயவர்த்தனாவின் தேர்தல் தொகுதியான களனியில் சனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான றொஜர் ஜெயசேகரா என்ற சிறைக்காவலர் பிற காவலர்களான சமித்தா றத்கம மற்றும் பாலித்த ஆகியோரை இணைத்து திறந்துவிடும் பணியைச் செய்தார்.

சீ3 அலகிற்குப் பொறுப்பான காவலர் இப்பகுதியைத் திறந்துவிட மறுத்துவிட்டார். அவர் திறப்புக்களை மறைத்து வைத்தபின் இரு கைகளையும் விரித்தபடி நின்றதாகவும் எனது பொறுப்பில் உள்ளவர்களைக் கொல்லமுன் என்னைக் கொல்லுங்கள், என்று தாக்க வந்த வர்களுக்குக் கூறியதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவருடைய பெயரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். சீ3 இல் டக்கிளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், பரந்தன் இராஜன், பனாகொடை மகேஸ்வரன் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஏ3 இல் அடைக்கப்பட்டிருந்த பயங்கரக் குற்றவாளிகள் 25 ஆம் நாளன்று அடைக்கப்பட்டிருந்தனர். அன்று அவர்கள் திறந்துவிடப்படவில்லை. பீ3, டீ3 அலகுகளுக்குள் புகுந்த 400 சிங்களக் கைதிகளும் அங்கிருந்த 35 தமிழ்க் கைதிகளை மிகக் கொடிய முறையில் படுகொலை செய்தனர்.

இந்த 400 பேரில் 25 பேரும் சில சிறைக்காவலரும் படுகொலைகளில் முக்கிய பங்கேற்றதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குட்டிமணியின் படுகொலை மிகவும் கொடிய முறையில் நடத்தப்பட்டது. அவருடைய இரு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் போடப்பட்டன. 35 கைதிகளின் உடல்களும் லொபி அறைக்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் அடித்து நொருக்கப்பட்டன.

சில காலமாகத் தற்காலிகப் பொறுப்பதிகாரியாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பணியாற்றிய பறங்கி சி.ரி.ஜான்ஸ் (யுஉவiபெ ஊழஅஅளைளழைநெச ஊ.வு.துயளெண) நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனற்றதாகின. அவர் பொறல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று உதவி கேட்டார். தம்மிடம் ஆட்பற்றாக்குறை இருப்பதாகக் கூறித் தட்டிக்கழித்து விட்டனர்.

அடுத்ததாகக் கொழும்பு கிரகொரித் தெருவில் வாழ்ந்த உதவிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.சுந்தரலிங்கம் வீட்டுக்குச் சென்றார். தான் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்குச் செல்வதாகவும் தன்னால் ஒன்றும் உதவ முடியாதென்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். பொலிஸ்; மா அதிபராகப் பதவி வகித்த ருத்திரா இராஜசிங்கம் என்ற தமிழரும் அதே பதிலைச் சொல்லித் தனது கையறு நிலையை வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்த ஆட்டிலறிப் பிரிவின் லெப். ஹத்துறுசிங்கவை ஜான்ஸ் தொடர்பு கொண்டார். அவர் ஏழு வீரர்களுடன் வந்தார். ஆனால் அவரால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் பொறல்ல பொலிஸ் நிலையத்தில் இருந்து சில பொலிசார் வந்தனர். அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஓய்வாக நின்றனர். உள்ளுக்கு இராணுவத்தினர் நிற்பதால் எம்மால் உள்ளுக்கு வர முடியாது என்று கூறினர். 35 தமிழர்களின் உடல்களும் ஒரு சுமை உந்தில் ஏற்றப்பட்டன. அப்படி ஏற்றப்பட்ட உடல்களையும் சிங்களக் கைதிகள் தாக்கினார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, எம்.பி.யின். மகள் சூரியா விக்கிரமசிங்க என்ற சமூக சேவகி எழுதியுள்ளார்.

உடல்கள் ஏற்றப்பட்ட சுமை உந்து சிறைச்சாலை வளாகத்தைவிட்டு வெளியே செல்வதற்கு லெப். ஹத்துறசிங்க அனுமதி மறுத்தார். மேலிடத்து உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

ஜான்ஸ் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரத்துங்கவைத் தொடர்பு கொண்டு வெளியேகொண்டு செல்ல அனுமதி கேட்டார். வீரத்துங்க கட்டளை பிறப்பித்தபின் சுமை உந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்டது.

சிறைச்சாலை வெளிவாயிலில் சிறைச்சாலை மருத்துவர் பேரின்பநாயகம் அதில் ஏற்றப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகச் சான்றிதழ் வழங்கினார்;. அதன் பின் அது வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்டது.

கறுப்பு ஜுலைப் படுகொலைகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஜெயவர்த்தனா அரசு ஒரு அதி விசேட வர்த்தமானி அறிக்கையை வெளியிட்டது. உதவிப்பொலிஸ் அத்தியட்சகரோ (யுளளளைவயவெ ளுரிநசiவெநனெயவெ ழக pழடiஉந) அல்லது அவரில் கூடிய பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரியோ பாதுகாப்புச் செயலரின் அனுமதியுடன் உடல்களைப் பொறுப்பேற்று அடக்கம் செய்யலாம் என்றும் நீதிமன்ற விசாரணை தேவை இல்லை என்றும் 18 ஜுலை 1983 வர்த்தமானி அறிக்கை கூறுகின்றது. இதன் பிரகாரம் உடல்கள் உறவினரிடம் கொடுக்கப்படவில்லை. கனத்தையில் ஒரு பாரிய குழி வெட்டப்பட்டு அதில் போட்டு அவை எரியூட்டப்பட்டன.

சிறைச்சாலைப் படுகொலைகள் அவ்வளவோடு நிற்கவில்லை. ஜுலை 27 ஆம் நாள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டாவது படுகொலைகள் நடந்தன. இப்படி நடக்கும் என்று பறங்கி ஜான்சுக்கு சில கைதிகளின் இரகசியத் தகவல் மூலம் தெரியும். அவர் இதைத் தடுப்பதற்கு முயற்சி எடுத்தார்.

சிங்கள அதிகாரிகள் அவருடன் ஒத்துழைக்கவில்லை. தமிழ் அதிகாரிகள் தமது பாதுகாப்பு பற்றிக் கூடுதல் கவனம் எடுத்தனர். ஜுலை 26 ஆம் நாள் சீ3 அலகில் உள்ள தமிழ்க் கைதிகளை மகசீன் சிறைச்சாலை போன்ற பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்றும்படி பனாகொடை மகேஸ்வரன், டக்கிளஸ் தேவானந்தா, பரந்தன் இராஜன் ஆகியோர் நீதி அமைச்சிற்கு மனுச்செய்தனர்.

நீதி அமைச்சு அதிகாரிகள் அவர்களை வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்திலுள்ள வயது குறைந்த கைதிகளை அடைத்து வைக்கும் கட்டடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டனர். இதன் பிரகாரம் சீ3 இல் அடைக்கப்பட்டிருந்த 28 தமிழ்க் கைதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜுலை 27 ஆம் நாள் மாலை சனாதிபதி ஜெயவர்த்தனா தலைமையில் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரசன்னமாயிருந்த ஜான்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு கைதிகளின் பாதுகாப்பிற்கு வேண்டிய ஒழுங்கைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழ்க் கைதிகளை உடனடியாக விமானம் மூலம் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு அனுப்பும்படி சனாதிபதி கூறினார். ஆனால் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பங்குபற்றிய அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலியும் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த யோசனைக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொண்டு போவதைச் சிங்களக் கைதிகள் விரும்பமாட்டார்கள் என்று அவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர். இராஜன் கூல் எழுதிய புத்தகத்தில் ரணில் விக்கிரமசிங்க பற்றிய முக்கிய செய்தி இருக்கிறது. 1983 ஜுலைக் கலவரத்தை முன்னின்று நடத்திய ஜெயவர்த்தனா அரசின் அமைச்சர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் முக்கிய பங்களிப்புச் செய்தார் என்பது தான் அந்தச் செய்தி.

மனமுடைந்து போய் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெலிக்கடைச் சிறைச்சாலைக்குத் திரும்பிய ஜான்சுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சிங்களக் கைதிகள் இளம் குற்றவாளிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த 17 தமிழ்க் கைதிகளைக் கொன்றுவிட்டனர்.

இம்முறை பயங்கரக் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏ3 அலகுக் கதவுகளும் திறந்துவிடப்பட்டன. சிறிலங்கா வரலாற்றில் முதலாவது சர்வதேச விமானக் கடத்தலை செய்த சிங்களவன் சேபால எக்கநாயக்காவும் ஏ3 இல் அடைக்கப்பட்டிருந்தான்.

இவன் ஒரு தமிழ்க் கைதியின் தலையை வெட்டிக்கையில் ஏந்தியபடி தன்னை எப்பிடி வேலை என்று சிங்களத்தில் கேட்டதாக அங்கு சென்ற மேஜர் பீறிஸ் என்ற இராணுவத்தான் கூறுகின்றான். டாக்டர் ராஜசுந்தரம் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்.

26 ஆம் நாள் நடந்த விசாரணையில் சாட்சி சொன்ன இராஜேந்திரம் என்ற இளைஞன் 27 ஆம் நாட் படுகொலைகளில் ஒரு சிறைக் காவலரால் அடித்துக் கொல்லப்பட்டான். 25 மற்றும் 27 நாட்களில் நடந்த வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் உயிரிழந்த

தமிழ்க் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 53.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளைச் சிங்கள அரசும் சிங்களப் புத்திஜீவிகளும் சிறைச்சாலைக் கலவரம் Pசளைழn சுழைவள என்று ஒதுக்கிவிட்டனர். விவகாரம் அப்படியே மூடிமறைக்கப்பட்டுவிட்டது.

சிறைச்சாலைப் படுகொலைகள் நின்றுவிட்டனவா? இல்லவே இல்லை. 25 ஒக்டோபர் 2000 ஆம் நாள் பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் என்று அழைக்கப்பட்ட சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களில் 27 பேர் இதே மாதிரிப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சிங்களக் காவல்துறையினர் பங்களிப்புச் செய்தனர்.

அரசின் நீண்டகரம் இந்தப் படுகொலையிலும் காணப்படுகிறது. சர்வதேச அழுத்தங்களால் நீதிமன்ற விசாரணை என்ற நாடகம் 2005 ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. குற்றவா ளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சிங்களக் கொலைக் காரர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எண்ணுக்கணக்கற்ற தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சிறைச்சாலைகளிலும் இரகசியத் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு சொல்லொணாத் துன்பம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தலைவிதி எப்படியோ தெரியவில்லை.

- அன்பரசு -

நன்றி: வெள்ளிநாதம் (29.08.08)

Comments