தமிழர் போராட்டமும் பின்தளங்களின் பங்கும்

கடந்த வாரம் நான் எழுதிய புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த கட்டுரை தொடர்பில் பல்வேறு புலம்பெயர் வாசகர்களும் தத்தமது நிலைப்பாட்டிற்கு எற்ப பலவாறான அபிப்பிராயங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் கருத்துக்களிலிருந்து ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அதாவது, புலம்பெயர் தமிழ்த் தேசிய அக்கறையாளர்கள் பலரும் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றனர் என்ற செய்திதான் அது.

சிலர் முற்றிலும் மாறான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். முரண்படுவதும் ஆரோக்கியமான ஒன்று என்று கருதும் நான் அவ்வாறான கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.

இன்றைய நிலையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், அதற்கு இரண்டு பின்தளங்கள் உண்டு.

ஒன்று, தமிழகம் மற்றையது, புலம்பெயர் தேசம். அதனை ஒரு வசதிக்காக மேற்குத் தளம் என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு தெற்காசிய நிலையில் பேணுவதில் அதற்கு முக்கிய பங்குண்டு.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நிதானமாக நடந்து கொள்வதன் பின்னணியில் தமிழகமே இருக்கின்றது.

அதாவது, இந்தியாவை ஒரு சமநிலை நோக்கி தள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட பின்தளம் என்ற வகையிலேயே தமிழகம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அடுத்து, முக்கியத்துவம் பெறுவது ஈழத் தமிழர்கள் பரவலாக புலம்பெயர்ந்து வாழும் மேற்கின் தேசங்களாகும்.

இந்தியாவை சமநிலைப்படுத்தக்கூடிய ஆற்றல் எவ்வாறு தமிழகத்திற்கு இருக்கின்றதோ அதே போன்றதொரு ஆற்றல் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு.

ஆனால், கட்டுரையில் குறிப்பிடுவது போன்று இது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அது கடுமையான உழைப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் மூலமே சாத்தியப்படக்கூடிய ஒன்றாகும்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழகமே ஆரம்பத்தில் பிரதான போராட்ட பின்தளமாக விளங்கியது. இந்த பின்தளத்தை ஊக்குவித்ததில் இந்திய மத்திய அரசிற்கும் கணிசமான பங்குண்டு.

ஏலவே, ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் இருந்த வரலாற்று ரீதியான தொடர்புகள் இந்த பின்தள தொழிற்பாட்டிற்கு ஏதுவாக இருந்தது. இந்த பின்தளத்தை அடிப்படையாகக்கொண்டே இந்தியா தனது இலங்கை அரசியலில் தனக்குள்ள ஈடுபாட்டை நியாயப்படுத்தியது.

ஆனால், இந்தியா 1989 இன் இறுதியில் விடுதலைப் புலிகளை இந்தியாவில் செயற்படமுடியாத இயக்கமாக தடை செய்ததைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் பின்தளம் மேற்கு நோக்கி நகர்ந்தது.

அன்றிலிருந்து தமிழர் விடுதலை நோக்கிய நகர்வுகளின் பிரதான பின்தளமாக ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த மேற்கு தேசங்களே தொழிற்பட்டு வருகின்றன.

போராட்டத்தின் பின்தளம் மேற்கு நோக்கி நகர்ந்த பின்னரே விடுதலைப் புலிகள் பலம் பொருந்திய மரபுவழி இராணுவமாக உருப்பெற்றதாக பலரும் கணிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளை இந்தியா ஓரு எதிர் நிலைப்பாட்டில் அணுகினாலும் ஈழத்தமிழர் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கரிசனையை அதனால் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அது, அதனால் முடியாத விடயமும் கூட.

எனவேதான், இந்திய மத்திய அரசு தமிழக அரசியல் தலைவர்களின் விடயத்திற்கு செவிசாய்ப்பது போன்று காட்டிக்கொண்டே தனது காய்களை நகர்த்திவருகின்றது.


இந்திய மத்திய அரசை பொறுத்தவரையில் அதனிடம் தமிழகத்தில் மாறிமாறி ஆட்சியமைக்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சியினரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டின் எல்லை குறித்த தெளிவான கணிப்புண்டு.

குறிப்பாக இந்திய கொள்கை வகுப்பை நெறிப்படுத்தும் தமிழக பார்ப்பனிய சக்திகளுக்கு இதில் அதிகமான அறிவுண்டு.

எனவே, இன்றைய சூழலில் மேற்படி இரண்டு பின்தளங்களை பயன்படுத்துவது குறித்து தமிழ்த் தேசிய சக்திகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

மிகத்துல்லியமாக கணிப்பிடுவதானால் இந்தியாவை சமநிலைப்படுத்தக்கூடிய, அதன் ஈழத்தமிழர் விரோத நிலைப்பாடுகளை பின்தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் தமிழகத்திற்குத்தான் உண்டு.

இலங்கை அரசியலில் தலையீடு செய்துவரும் மேற்கு அரசுகளை சமநிலைப்படுத்தக்கூடிய ஆற்றல் மேற்கின் பின்தளத்திற்கு உண்டு.

ஒன்று, இன்னொரு தேசத்தின் குடிமக்களைக் கொண்ட பின்தளமாக இருக்க, மற்றையது நமது மக்களைக்கொண்ட பின்தளமாக இருக்கின்றது.

ஆனால், இந்த இரண்டு பின்தளங்களாலும் குறிப்பிட்ட அரசுகளை நியாயத்தின் பக்கம் நகர்த்த முடியாது சமநிலைப்படுத்த மட்டுமே இயலக்கூடியதாக இருக்கும்.

பல்வேறு அனுபவங்களுக்குப் பின்னரும், நமது பல்வேறு வேண்டுகோள்கள் மற்றும் விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கு பின்னரும் இன்றும் இந்தியா சிங்களத்திற்கு முண்டு கொடுக்கத் தயங்கவில்லை. இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளப்போவது என்ன?.

எப்போதுமே ஒரு அரசு இன்னொரு அரசுடன் சுமூக நிலையையே பேணிக்கொள்ள விரும்பும், நிச்சயம் அவ்வாறே நல்லுறவை பேணியும் கொள்ளும். இது அரசு இன்னொரு அரசுடன் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார உறவின் வழி புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

அதேபோன்றுதான் மேற்கு அரசுகளும் என்னதான் சிறிலங்கா அரசு குறித்து விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வந்தாலும், அவைகள் ஒருபோதும் சிறிலங்கா அரசுடன் கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார தொடர்புகளை முழுமையாக துண்டித்துக் கொள்ளப்போவதில்லை.

இந்தியா தனது நலனில் நின்றே சிறிலங்காவை கையாண்டு வருகின்றது. அதேபோன்று மேற்கு அரசுகளும் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜரோப்பிய சக்திகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களில் நின்றே சிறிலங்காவை கையாண்டு வருகின்றது. இது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாகும்.

ஆகவே, போராட்டத்தின் பிள்தளங்களின் பங்களிப்பு குறித்து பேசும்போதெல்லாம் நாம் இந்த அடிப்படை விடயத்தை கருத்தில் கொள்ளாமல் எந்த விவாதத்தையும் செய்ய முடியாது.

குறிப்பாக மேற்படி இரண்டு பின்தளங்களும் ஒரு நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தலாம்.

தமிழக மீனவர்கள் விடயத்தில் இந்திய மத்திய அரசின் அசட்டையான போக்கை கண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கலாம்.

இந்திய அரசின் ஈழத்தமிழர் விரோத நிலைப்பாட்டை கண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கின் பின்தளத்தில் எதிரொலிக்கலாம். இவைகள் குறிப்பிட்ட அரசின் நிலைப்பாடுகளை சமநிலைப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும்.

குறிப்பாக, இந்தியாவை சமநிலைப்படுத்துவதில் புலம்பெயர் தளத்திற்கும் முக்கிய பங்குண்டு.

உலகளவில் இந்தியா நன்மதிப்பைக்கோரும் ஒரு தேசம் என்ற வகையில் தனது நன்மதிப்பை பாதிக்கும் விடயங்களில் அது கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது.

எனவே, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இரண்டு பிரதான பின்தளங்களும், அரசுகளை சமநிலைப்படுத்தல் என்ற விடயத்தில் ஒரேயளவு முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கொண்டவையாகும்.

விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகளில் இந்த இரண்டு தளங்களும் அதிகம் இயங்க வேண்டிய தேவையிருக்கின்றது.

-தாரகா-


Comments