உரத்த குரலும் உதிரத் துடிப்பும்!

ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று.

அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை.

ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார்.

சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்)

அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது.

நியாயப்படி - ஏன் சட்டப்படியும்கூட இந்திய அரசு அதனை எதிர்த்துக் குரல் கொடுத் திருக்க வேண்டாமா? கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பினை - 1988-ஆம் ஆண்டு முடிவுக்கும் எடுக்க வேண்டும் என்று ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கூறுகிறதே - அதன்படி இலங்கை அரசு ஏன் நடக்கவில்லை என்று இந்திய அரசு கேட்கத் தவறியது ஏன்?

இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை விசாரணை நடத்த ஒரு நாட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரமும் உண்டா? அது சர்வதேச சட்டத்தின் கீழ் அல்லவா வர வேண்டும்!

இதுபற்றி யெல்லாம் இந்திய அரசோ, அதற்கு ஆலோசனை கூறும் ஆசாமிகளோ சிந்திக்காதது ஏன்? சிந்திக்க மனம் இல்லாமல் போன மர்மம் தான் என்ன? வடக்கு - கிழக்கு இணைப்பு செல்லாது என்ற தீர்ப்பைப் பெற்றதுடன், கிழக்கு மாகாணத்துக்குத் தனியே தேர்தல் நடத்தி (2.5.2008) விடுதலைப்புலிகளுக்குத் துரோகம் செய்த கருணா குழுவிலிருந்து பிள்ளையான் என்ற ஒருவரை - பிடித்து வைத்த கொழுக்கட்டையாக முதல் அமைச்சராகவும் ஆக்கி, இலங்கையில் பட்டொளி வீசிப் பறக்கும் பரந்த ஜனநாயகத்தைப் பாரீர்! என்று உலகத்தை ஏமாற்றிட மிளகாய்ப் பொடி தூவுகிறார் அதிபர் ராஜபச்சே!

தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தில் 1948-இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சிங்களர்களின் சதவிகிதம் வெறும் எட்டே! இப்பொழுது அது 30 சதவீதமாக பெருகியது எப்படி? இலங்கை அரசின் திட்டமிட்ட ஏற்பாடு அல்லவா!

இப்படிப்பட்ட ஜனநாயக நாட்டின் குடியரசு தின விழாவில் பங்கேற்கத்தான் இந்தியப் பிரதமர் செல்வதாக இருந்தார்.

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் (31.12.2007) வீண் போகவில்லை.

என்றாலும், இந்தியாவின் கரிசனம் எப்பொழுதுமே இலங்கை அரசின் பக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.

செக் குடியரசு நாட்டிலிருந்து 10 ஆயிரம் ஏவுகணை களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கியது இலங்கை அரசு. ஈரான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து இராணுவத்தினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் நாட்டுக்காரர்கள் இலங்கையின் போர் விமானங்களை இயக்குகிறார்களாம்.

சீனாவிடமிருந்து ரேடார்களையும், பிற கருவிகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவும் தன் பங்குக்கு இலங்கைக்கு போர் ஆயுதங்களை வழங்கத் தயாராகிறது!

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர்மேனன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜயசிங் ஆகியோர் கொழும் புக்குச் சென்றனர்.

சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கக் கூடாது; மாறாக இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டும் என்று சொன்னதாகச் செய்திகள் வெளிவந்தன.

அதற்கு முன்பே இரு ரேடார் கருவிகளையும், தற்காப்பு ஆயுதங்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியது.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டதும் உண்டு.

டேராடூன், புனே, தேவவாலி, அகமத் நகர், ஜபல்பூர், வதோதரா, மவ் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ள தாகச் செய்திகள் வெளி வந்தன.

தமிழ்நாட்டிலும் அத்தகு பயிற்சி அளிக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தபோது, வெடித்த எதிர்ப்புக் குரலால் அது தவிர்க்கப்பட்டதும் உண்டு.

தீவிரவாதிகளை எப்படி எதிர்ப்பது, காட்டுப் பகுதிக்குள் சண்டை போடுவது எப்படி? என்பதற்கெல்லாம் மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் பயிற்சி யாம்.

இலங்கை பல நாடுகளி லிருந்தும் ஆயுதங்களை வாங்குவது எதற்காக?

இந்தியா இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் எதற்காக?

இலங்கைக்கு எந்த நாட் டின் மூலம் ஆபத்து? சீனா படையெடுக்கத் துடிக்கிறதா? பாகிஸ்தான் பாய்ந்திட திட்டமிட்டுள்ளதா?

இந்தியாதான் இலங்கை மீது படை எடுக்கப் போகிறதா? அதெல்லாம் ஒன் றும் கிடையாது என்பது அறியாப்பிள்ளையும் அறிந்த செய்தியாகும். இவ்வளவு ஆயுதக் குவிப்புகளும், பயிற்சிகளும் எதற்காக?

இலங்கைத் தீவில் உள்ள அந்த மண்ணுக்கே உரிய தமிழர்களை முற்றாகக் கொன்று ஒழித்து, புதைகுழிக்குள் தள்ளி இலங்கை என்றால் சிங்கள நாடே! சிங் களவர்கள் மட்டும்தான் இங்கே வாழ வேண்டும் என்கிற வெறித்தனத்துக்கு முடி சூட்டத்தானே இந்த மூர்க்கத் தனம்?

இலங்கை அரசு அப்படி யென்ன இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டிக் கிழித்து விட்டது?

இந்தியா - சீனா யுத்தத்தின் போதோ, இந்தியா பாகிஸ் தான் போரின் போதோ இந்தியாவின் பக்கம் நின்றதா என்ன?

1965-இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போதுகூட காட்டுநாயகா விமானத் தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள நடை பாவாடை விரிக்க வில்லையா?

இந்தியாவே என்ன சொல்லுகிறாய்? சீனாவுக்கோ பாகிஸ்தானுக்கோ, ஏன் அமெரிக்காவுக்கோ இராணுவத் தளம் அமைக்க இடம் கொடுத்து விடுவேன் - ஜாக்கி ரதை என்ற இலங்கையின் மிரட்டலுக்கு தமிழர்களைப் பலி கொடுக்க இந்தியா சித்தமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தப் படக்கூடியதல்ல!

ஈழத்தில் வாழும் தமிழர்களுக்குத்தான் இந்தக் கொடூரம் என்றால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் சிங்களக் கடற்படை வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்களை அயிரை மீனாகக் கருதி குழம்பு வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவை - தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமலேயே கூட தூக்கிக் கொடுத்து விட்டது. அதன் பலன் தமிழக மீனவர்கள் தங்களுக்குரிய கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.

தமிழகத்தின் அனுமதியில்லாமல் தூக்கிக் கொடுக்கப்பட்ட பகுதியில் -தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையைக்கூட, ஒரு சுண்டைக்காய் அரசிடமிருந்து பெற்றுத் தர முடியவில்லை இந்தியாவால்.


உலகில் பத்துக் கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தாலும் - சொந்தத்துக்கென்று ஒரு நாடு இல்லாத நிலையில் இதனையெல்லாம் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த நாதியில்லாமல் போய்விட்டது என்பதுதானே உண்மை!

எனவே, தோழர்களே எழுங்கள்! எழுச்சியின் ரத்தத் துடிப்பு தெறிக்கட்டும்!

தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உணர்வை இந்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் - இலங்கை பாசிஸ்டு அரசு புரிந்து கொள்ளட்டும்.

நம்மை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு யார் உள்ளனர்?

உரிமைப் பதாகையைத் தூக்கிப் பிடித்து, உயிர் வலியாய் ஆவேசக் குரல் எழுப்புவீர்! எழுப்புவீர்!!

ஆகஸ்ட் 4 - நம் வரலாற்றில் முக்கிய நாளாகத் திகழட்டும்! உரத்த குரல் நம் உதிரத் தின் ஆவேசத்தை உணர்த் தட்டும்! உணர்த்தட்டும்!

தமிழர் தலைவரின் அழைப்பை ஏற்பீர்!

ஆவேசக் கனலாய் வெடித்தெழுவீர்!!

மின்சாரம்
விடுதலை - ஆவணி 3, 2008


Comments