ஆண் என்றால் அடிமை....பெண் என்றால் பலாத்காரம்!

"சொத்து சுகங்களை இழந்து உயிர் பிழைத்தால் போதுமென்று இந்தியா வந்தால் இங்கேயும் நிம்மதி இல்லை. பேசாமல் முகாம்களை மூடிவிட்டு எல்லோரையும் சிறையில் போடுங்கள்!''


அகதிகளாக வந்திருக்கும் ஈழத் தமிழர்களின் ரத்தக்கண்ணீர்தான் இந்தக் குமுறல். செங்கற்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 65 அகதிகள் கையெழுத் திட்டு, நமக்கு அனுப்பிய கடிதத்தில் வரிக்கு வரி வேதனை ரேகைகள்தான்!

''எமக்கு உணவுப்பொருட்கள் வாங்கித் தரவென்று இரண்டு தலையாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். காலை உணவை மாலை ஐந்து மணிக்குப் போடும் இவர்களும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். நாங்கள் பட்டினி யால்

செத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் இதய நோயாளிகள், சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். வழக்குகளில் ஜாமீன் பெற்றவர்களையும் இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களை உரிய நேரத்தில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாததால், சம்பந்தப்பட்ட நீதிபதி எங்களை சிறையில் அடைக் கிறார். எம்முடைய பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறோம்'' என்று கண்ணீர்விட்டது அந்தக் கடிதம்.


செங்கற்பட்டு சிறப்புமுகாம் (தடுப்புக் காவல்) என்பது ஏறக்குறைய சிறை என்பதால் நம்மை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பல்வேறு ஈழத்தமிழர்களின் வழக்குகளில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் சந்திரசேகரனைச் சந்தித்தோம்.

''முகாம்களில் திறந்தவெளி முகாம், சிறப்பு முகாம் என்று இரண்டுவகை உண்டு. இரண்டுமே அறிவிக்கப்படாத சிறைகள்தான். செங்கல்பட்டிலும் வேலூரிலும் இருப்பது சிறப்பு முகாம்கள். வழக்குகளில் சம்பந்தப்பட்டஇலங்கைத் தமிழர்கள், ஜாமீனில் வெளிவந்ததும் இந்தச் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

இதற்காக அயல் நாட்டினர் சட்டம் பிரிவு(3)-ஐ பயன்படுத்துகிறார்கள்.காரணம், இலங்கை அகதிகள் என்றாலே எதிரிகள் மாதிரி பாவிப்பது க்யூ பிராஞ்ச் அதிகாரிகளின் கொள்கை. சந்தேகத்தின்பேரிலும், தீவிரவாதிகள் என்ற பேரிலும் பலர் இப்படி அடைக்கப்பட்டுள்ளனர்.

1995-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள ஆப்கன் அகதிகள் 2,24,000. வங்கதேச அகதிகள் 5,35,000. திபெத் அகதிகள் 10,80,000. மலையகத் தமிழர்கள் ஐந்தரை லட்சம் பேர் உட்பட ஈழத் தமிழர்களையும் சேர்த்து 7,35,000 இலங்கை அகதிகள் உள்ளனர்.

இங்கே இலங்கைத் தமிழனைத் தவிர வேறு யார்மீதும் அயல்நாட்டினர் சட்டம் பாய்வதில்லை'' என்றார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்.

''தமிழ், தமிழ் என்று முழங்கக்கூடிய தமிழக முதல்வர் கருணாநிதிதான் 90-களில் இந்தச் சிறப்பு முகாமை அமைத்தவர்.

1991-ம் ஆண்டு சிங்கள ராணுவத்தால் அடிபட்டு, நூற்றுக்கணக்கான பேர் தமிழகம் வந்தனர். அவர்களை தி.மு.க. அரசு என்ன செய்தது?

தலையில் குண்டு பாய்ந்து கை-கால்கள் இயங்காத அஜந்தன்,

இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, இரண்டு கண்களும் பறிபோன ஹிட்லர்,

இடுப்புக்குக் கீழே செயலற்றுப்போன கௌதமி,

கலாராம், குமார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை ஈவிரக்கமின்றி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது.

இன்றும் அது குறையவில்லை. பசி, பட்டினியோடு தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை அகதிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த பிறகே சாப்பிட வேண்டியிருக்கிறது.

இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, விபசார புரோக்கர் களிடம் விற்கப்படுகிறார்கள்.

சிறுவர்கள் கொத்தடிமை வேலைகளுக்காக விற்கப்படுகிறார்கள். தட்டிக்கேட்டாலோ, எதிர்த்தாலோ விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கூறி சிறையில் அடைக்கப்படுவதால், யாரும் வாய் திறப்பதில்லை.

இந்தியாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட அநியாயம் நடக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்கள் நல்ல வசதி படைத்தவர்களாக வாழ்ந்துவரும் நிலையில் தாய்த் தமிழ்நாட்டைத் தேடி வந்தவர்கள் பட்டினிகிடக்கிறார்கள்.

ஜெர்மனி, கனடா, நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மூன்று வருஷங்களுக்குப் பிறகு குடியுரிமையே தந்து விடுகிறார்கள். மாநகராட்சி உறுப்பினர்களாகக்கூட சில வேற்று நாடுகளில் ஈழத்தமிழர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஆனால், இங்கே டிரைவிங் லைசென்ஸை ரத்துசெய்து வண்டி ஓட்டிப் பிழைத்தவர்களின்வயிற்றில் அடிக்கிறார்கள். ராமேஸ்வரம் மீனவர்களின் உயிரைப் பற்றியே கவலைப்படாத தமிழக அரசுக்கு, இலங்கைத் தமிழன் எப்படிப் போனால் என்ன?'' என்று கேள்வியெழுப்பிய நெடுமாறன்,

''இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பதுதான் ஆள்பவர்களின் முக்கியப் பிரச்னை. அதற்குக் காரணம் வேண்டு மென்பதால், அப்பாவி அகதிகளைப் பிடித்து ஒன்றரை கிலோ நைட்ரேட் வைத்திருந்ததாகச் சொல்லி பொய் வழக்குப் போடுகிறார்கள். ஒன்றரைகிலோ நைட்ரேட்டை வைத்து வெண்டைக்காய் விவசாயம்தான் பார்க்கமுடியும்.

ஏற்கெனவே நான் உண்ணாவிரதம் இருந்தபோதுபிரச்னையை முடித்துத் தருவதாக உறுதிமொழி கொடுத்தார் கருணாநிதி.

இப்பொழுது அகதிகள் கோரிக்கை நிறைவேற்றப் படும் என அதிகாரிகள் உறுதி மொழி கொடுத்துள்ளனராம். கருணாநிதியின் உறுதிமொழி எப்படி நிறைவேற்றப் பட வில்லையோ அதேபோல இதுவும் நிறைவேறப் போவதில்லை.

மத்திய அரசை திருப்திப்படுத்தி தன் குடும்பத்தை முன்னேற்றுவதுதான் முதல்வருக்கு முக்கியமாக இருக்கிறது.

'முகாமில் இருக்கும் அகதி கள் தவிர மற்றவர்கள் அங்கங்கே இருக்கும் போலீஸ் நிலையங்களில் தங்களைப் பதிவுசெய்ய வேண்டும்' என்றொரு விளம்பரத்தை 90-களில் கருணாநிதி வெளியிட்டார்.

அகதிகள் யாராவது டெல்லியில் இருக்கிறார்களா என்ன? ஆனால், டெல்லியில் வெளியாகும் இந்தி, ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்திலும் இந்த விளம்பரம் வெளியாகியது. என்ன காரணம்?

'மத்திய அரசின் ஊதுகுழலாக நானிருக்கிறேன்' என்பதைக் காட்டத்தானே! மொத்தத்தில், சிறப்பு முகாம் என்பதே சட்டத்துக்கு விரோதமானது. எந்த நீதிமன்றமும் அதற்கு உத்தரவு போடவில்லை. அது க்யூ பிராஞ்சின் சித்ரவதைக்கூடம்தான்.

இதற்கு ஒரே தீர்வு ஐ.நா-வின் அகதிகள் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடுவதுதான்.

உலகம் முழுவதும் உள்ள அகதிகள் பராமரிப்புப் பணியை ஐ.நா. சிறப்பாக செய்து வருகிறது. ஈழத்தமிழர்களின் துயரம் உலகத்தின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தியா, இன்றுவரை அதில் கையெழுத்திட மறுத்துவருகிறது.

'முகாம்வாசிகள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவதாய்'ச் சொல்கிறீர்கள். சிறப்பு முகாமுக்கு தமிழக அரசால் சோறுபோடமுடியவில்லை என்றால் எங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கச் சொல்லுங்கள். நாங்கள் உணவளிக்கிறோம்'' என்று ஆக்ரோஷம் காட்டினார் நெடுமாறன்.

இதுகுறித்து விவரமறிய சிறப்புமுகாம் பொறுப்பாளரான செங்கற் பட்டு தாசில்தாரை பலமுறை தொடர்புகொண்டும் உரிய பதில் நமக்குக் கிடைக்கவில்லை.

நன்றி: ஜூனியர் விகடன், August 27, 2008




Comments