சார்க் நாடுகளும் இணக்கம் காணாத விடயங்களும்!

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பான பிரதேசம் என்று எதுவுமே இல்லாது போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. அங்கு தமிழ்மக்கள் வாழ்கிறார்கள் தானே அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லைத்தானே எனத் தம்மை நியாயப்படுத்த இனவாதத் தலைவர்கள் இடையிடையே கூறிக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் எல்லோரையும் வெளியேற்றிவிட வேண்டும் என்பது தான் இனவாதிகளின் எண்ணம்.

அதற்கான சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு விளைவாக இன்று தமக்குப் பாதுகாப்பு இல்லை என்று முக்கியஸ்தர்கள் புலம்புவதும் அதற்காக உயர் நீதிமன்றம் வரை செல்வதும் இன்று சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதற்கு முன்னாள் சனாதிபதி சந்திரிகாவோ அல்லது படைத்தளபதி ஜானக பெரேராவோ விதிவிலக்கானவர்கள் அல்ல.

சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்குதல் என்பது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகி உயர்நீதிமன்றம் வரை செல்லும் விவகாரமாகியுள்ளது. இங்கு ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் என்ற வேறுபாடு மட்டுமல்லாது படை உயர் அதிகாரிகளும் கூட பெரும் பிரயத்தனத்தின் மத்தியிலேயே இதனைப் பெறவேண்டியவர்களாக உள்ளனர்.

அது மட்டுமல்லாது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்கின்றது என்று கூறுவது கூட சரியான கூற்றாகி விடமுடியாது. உண்மையில் இதனை ஒரு பேரம் பேசும் விடயமாக அல்லது பழிவாங்குவதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.

சிறிலங்காவின் தலைநகர் உள்ளிட்ட எந்தவொரு பகுதியும் எவருக்கும் பாதுகாப்பானதாக இல்லை என்பது இன்று வெளிப்படையான ஒரு விடயமாகும்.

அரசின் அரவணைப்பைத் தேடிக்கொண்டுவிட்டு ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரும் தற்போதைய தேசிய விடுதலை முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கட்சியிலிருந்து வெளியேறியபோது உடனடியாகவே தனது பாதுகாப்பிற்காகத் தலைமறைவாக வேண்டியேற்பட்டது. இவ்வாறு தான் ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற ஏனையோர் கூட நடந்து கொண்டனர்.

அவர்களின் வாகனத்தைக் கடத்திச் சென்றதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது எதனைக் காட்டுகிறது என்றால் அரசு ஆதரவு பெற்றிருந்த ஒரு குழுவினை ஜே.வி.பி.யினரால் கூட அச்சுறுத்த முடிந்திருக்கிறது என்பதனையேயாகும்.

இதேவேளை இன்று தமிழ்மக்கள் மட்டுமல்ல வர்த்தகர்கள், பிரமுகர்கள் கூட அடிக்கடி காணாமல் போகின்றனர், பலர் பணம் பறிப்புடன் விடுவிக்கப்படுகின்றனர். சிலர் காணாமலும் போகின்றனர். இந்த விடயம் இன்று சிறிலங்கா குறித்து அனைத்துலக ரீதியில் அவதானிக்கப்படும் விடயமாகிவிட்டது. தமிழ்மக்களை மட்டுமல்ல ஏனையோரையும் கூடக் கடத்தும் சம்பவங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் உச்சக் கெடுபிடிக்குள் சர்வசாதாரணமாக நடக்கிறதென்றால் இதன் சூத்திரதாரிகள் யார் என்பதை எவரும் கூறத் தேவையில்லை.

வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பைத் தேடிக் கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு பணயம் வைக்கப்படுகின்றனர். வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்றால் மகிந்தவின் இந்த ஆட்சியை சனநாயக ஆட்சி என எவ்வாறு கூறமுடியும்?

எனவே இந்த ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையானது. சிறிலங்காவின் சனாதிபதி அவரது சகோதரர்கள், உறவினர்கள் அவர்களின் பதவிநிலை எதுவுமே கவனிக்கப்படாது போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மகிந்த ஆட்சியிலுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கும் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்தவர்களுக்கும் தடையின்றி போதியளவு பாதுகாப்பு வழங்கப்படும் அதேவேளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தப்படாது விடப்படும்போது அவர்களுக்கு அச்ச நிலை அதிகரிக்கின்றது.

இதேவேளை எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிறிய கட்சிகளை ஆளும் கட்சிக்குள் உள்வாங்கிக்கொள்ள மகிந்த ஆட்சி பிரயோகிக்கின்ற ஆயுதமும் இந்தப் பாதுகாப்பு விவகாரமாகவே உள்ளது.

உதாரணமாக முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் இணைய தயக்கம் காட்டியபோது அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை குறைத்ததும் ஒன்றாகும். முன்னர் இவ்வாறு அவருக்கு நெருக்கடி வழங்கப்பட்டு அவர் ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து வெளியேறியபோது நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டது.

இதேவேளை முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புத் தொடர்பில் அவர் பதவி விலகிய காலம் முதல் சர்ச்சை நிலவியது. அவர் பதவியில் இருந்தவேளை அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அளவிற்கு தொடர்ந்தும் அவர் தனது பாதுகாப்பை நிர்ணயித்துக் கொண்டார். ஆனால் மகிந்த அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரது வாகனத் தொடரணியிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, அதிகாரிகளின் எண்ணிக்கை என்பனவற்றைக் குறைத்தபோது அவர் அச்சமுற்றார்.

பின்னர் அவர் இதற்காக நீதிமன்றம் செல்லவேண்டி ஏற்பட்டபோது இவருக்கு அமைச்சர் ஒருவருக்கு வழங்கும் பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உண்மையில் சனாதிபதி சந்திரிகா சனாதிபதி மகிந்த ராஜபக்சவை விமர்சித்து வந்ததன் காரணமாகவே அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானார். இந்தவகையில் இப்போது சேர்ந்து கொண்டவர் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி ஜானக பெரேரா ஆவர்.

இவர் 33 வருடங்கள் இராணுவ சேவையில் இருந்தவர் 2002 ஆம் ஆண்டு இராணுவத் தலைமை அதிகாரியாக விருந்து இராணுவத் தளபதி பதவி கிடைக்காத நிலையில் தூதரக அதிகாரியாக வெளிநாடுகளில் (அவுஸ்திரேலியா, இந்தோனேசியா) பணிபுரிந்தவர்.

இவர் ஐ.தே.க.வைச் சேர்ந்தவர் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடத்தை இழந்ததும் ஓரம் கட்டப்பட்டவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டவர் இவர் இராணுவத் தளபதி பதவியைப் பெறமுடியாமைக்கு இவர் ஐ.தே.க. ஆதரவாளர் என்பதும் முக்கியமானதாகும்.

இவர் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கையில் பல படுகொலைகளுக்குக் காரணமானவர். 1989-91 காலப்பகுதியில் ஜே.வி.பி.யை அடக்குவதற்காக சிங்கள இளைஞர்களை வகைதொகையின்றிக் கொன்றொழித்தவர். மனிதப் புதைகுழிகளுக்கு காரணமாயிருந்தவர்.

இதேபோல சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் செம்மணிப் புதைகுழிக்கும் ஏனைய பல கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர். இவை காரணமாக வெளிநாடுகள் இவரைத் தூதுவராக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டின. இப்போது இவர் அரசியலில் குதித்து சிறிலங்காவிற்கு வந்துள்ளார் அதுவும் ஐ.தே.க. சார்பில் மாகாண சபைக்குப் போட்டியிடுகின்றமையானதே இவரது பாதுகாப்புக் குறித்த அச்சம் ஏற்படக் காரணமாகும்.

அவர் தனது பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சத்தை வெளிப்படுத்தி தேர்தல் ஆணையாளரிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் கோரிக்கை பலமுறை முன்வைத்தும் பாதுகாப்புக் கிட்டாத நிலையில் உயர் நீதிமன்றத்துக்கு சென்றே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவர் ஐ.தே.க.வில் இணைந்து கொள்ளாது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டிருந்தால் நிலைமை வேறானதாக இருந்திருக்கும்.

இப்பொழுது சார்க் மாநாட்டிற்கு பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில், அடுத்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் ஜானக பெரேராவுக்கு பாதுகாப்பு வழங்க மகிந்த அரசாங்கம் பின்னடித்து அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள விடாது தடுப்பதற்காகவே. ஆனால் நீதிமன்றம் எட்டுப்பேரினது பாதுகாப்பை இவருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் மகிந்த அரசாங்கம் அனைவருக்கும் துன்பத்தை விளைவிப்பதாக இருப்பதை மட்டுமல்ல அதியுயர் பதவியில் இருந்தவர்கள் இருப்பவர்களுக்குக் கூட அச்சம் விளைவிப்பதாக இருக்கின்றது.

இந்த ஆட்சியில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் ஆட்சியாளர்களால் பலமுறைகளிலும் பறிக்கப்படுகின்ற நிலையில் மனோவியல் ரீதியிலும் உயர் பதவியிலுள்ளோர் கூட அச்சுறுத்தப்படுகின்றனர்.

அதேவேளை இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்டு ஆட்சியாளர்களின் பதவிகளை நிலைநிறுத்த முற்படுபவர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அவ்வாறு ஏற்படும் போது இவர்களும் ஆட்சியாளர்களால் எவ்வாறு தூக்கி வீசப்படுவார்கள், எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதற்கு ஜானக பெரேரா நல்ல உதாரணம்.

-கெல்மன்-

நன்றி: வெள்ளிநாதம் (01.08.08)

Comments