வான்புலிகளின் தாக்குதலும் வன்னிநோக்கிய படை நகர்வும்

இந்த வருடம், எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றம் ஐந்து தடவைகள் அதிகரித்துள்ளது.வான்புலிகளின் தாக்குதலும் இதுவரை ஐந்து தடவைகளுக்கு மேல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை வரை பல தாக்குதல்களை எதுவித இழப்புமின்றி வான்புலிகள் நடத்தியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் வான் படை இன்று எங்கும் சென்று, எதையும் தாக்கும் வல்லமை பெற்றிருப்பதாக கொழும்பு படைத்துறை ஆய்வாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

புலிகளின் விமானங்களை இலக்குவைத்து இருளை ஊடறுத்துச் சென்ற குண்டுகள், புவியீர்ப்பு விதிக்கமைய குடிமக்களின் வீட்டுக் கூரைகளின் மீது மழை போல் தரையிறங்கி, சேதாரங்களையும் விளைவித்துள்ளன.

இரவு 9.05 அளவில் நிகழ்த்தப்பட்ட இவ் வான் தாக்குதலில் திஸ்ஸ கடற்படைத்தளமும், துறைமுகத்தின் ஒரு பகுதியும் சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உட்துறைமுகத்தோடு அண்டியவாறு மலைக் குன்றில் அமைந்திருக்கும் இலங்கை கிழக்குக் கடற்படைத்தளத்தில் ஏற்பட்ட வெடியோசையை அடுத்து, பாரிய தீப்பிழம்பு தென்பட்டதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 10 நிமிடம் வரை தொடர்ச்சியான வேட்டொலிகள் நகரின் நாலா புறத்திலிருந்தும் கிளம்பி, தொலைபேசித் தொடர்புகளையும் நிறுத்தியது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை விரட்டிச் சென்ற அதிவேக கிபீர் மிகையொலி விமானங்கள் இரணை மடுவில் குண்டு வீச்சினை நிகழ்த்தி தளம் திரும்பியதாக அரசாங்கச் செய்திகள் கூறின.

மறுபடியும் நள்ளிரவு 12.15 மணியளவில் முதல் தாக்குதல் கொடுத்த அதிர்வினை வெளித்தள்ளி பாரிய வெடியோசையொன்று மக்களால் உணரப்பட்டது.

இரண்டாவது தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாவென்பதைவிட கடற்படைத் தளம், சீனன்குடா வான்படைத்தளத்திலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடாத்தப்பட்டும் 9.00 மணிக்கு தாக்குதல் தொடுத்த வான்புலி வானூர்தியை சுட்டு வீழ்த்த முடியாமல் போன விவகாரமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய ராடர்களின் செயற்திறன் குறைவென்பதால் சீனாவிலிருந்து அண்மையில் முப்பரிமாண ராடர்களை அரசாங்கம் வரவøழத்தது.

அத்தோடு ஓமந்தை, அநுராதபுரம், திருமலையில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறைகளை பெரும் பொருட் செலவில் நிறுவி, விடுதலைப் புலிகளின் முழுமையான மரபுவழி பøடக்கட்டமைப்பின் உச்ச வடிவமான வான் புலிகளின் செயற்பாடுகளை முடக்கி விட்டதாகவும் அண்மைய நேர்காணலொன்றில் இலங்கை விமானப் படைத்தளபதி தெரிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக படைத்தரப்பு உயர்நிலை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் விடுத்த சுயபெருமித வெளிப்பாடுகள் ஓர் இரவுத் தாக்குதலில் வீரியத்துள் கரைந்து போயுள்ளன.

சமர் வழங்கிய தற்காலிக வெற்றிகளை, ஒரு வித உளவியல் போரிற்கு பயன்படுத்தி அரசியல் ரீதியாக சிங்கள மக்களையும், இராணுவ ஆளணிச் சேர்ப்பிற்கு கிராமத்து சிங்கள இளைஞர்களையும் அணிதிரட்ட அரசாங்கம் வகுத்த திட்டத்தில் வான் புலிகளின் தாக்குதல் சிதைவினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் மனதை வென்றெடுக்காவிட்டால், போரில் பெறும் தற்காலிக வெற்றிகளும் அர்த்தமற்றுப் போய்விடுமென இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

அதாவது விடுதலைப் புலிகள், படை வலுவில் பலமிழந்து வருகிறார்களென உளவு ஸ்தாபனம் “றோ’ கொடுத்த திரிவுபடுத்தப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே நாராயணனின் விதந்துரைப்பு அமைந்திருந்தது.

வான் புலிகளின் புதிய தாக்குதலை அடுத்து, செய்மதிப்படங்களை வழங்கிய “றோ’ வின் நம்பகத் தன்மை குறித்தும், நாராயணன் நிச்சயம் கேள்வி எழுப்புவார்.

டிக்சிற்றின் “சுருட்டு அணையும் முன், புலிகள் நசுக்கப்படுவார்கள்’ என்கிற சவடாலின் பின்புலத்தில் “றோ’வின் அறிக்கையொன்றும் இருந்திருக்க வேண்டும்.


இத்தாக்குதலானது இலங்கை அரசைப் பார்க்கிலும், இந்தியாவிற்கே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளித்திருக்கும்.

ஆனாலும் விடுதலைப் புலிகளின் பிராந்திய சர்வதேச பார்வை கொண்ட நுண்ணரசியலை இந்தியாவும் புரிந்து கொள்ளவில்லை. சிங்கள தேசமும் உணர்ந்து கொள்ளவில்லை.

உணர் திறன் மிக்க, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதியுயர் பாதுகாப்பு வலயமான திருமலைக் கடற்படைத்தளம் மீது விமானத் தாக்குதலை நடாத்திய விடுதலைப் புலிகள், தற்போதைய போர்ப் பிரதேசத்தின் பின்தளமாக விளங்கும் தள்ளாடி படைத்தளத்தின் மீது இவ்வகையான தாக்குதலை ஏன் நடாத்தவில்லையென்கிற சந்தேகம் இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தள்ளாடி, திருமலையைப் பொறுத்த வரை, மிகவும் சிக்கலான தாக்குதல் மையம் திருமலைதான்.இருப்பினும் யாழ். குடா இராணுவத்திற்கான வழங்கல் பாதையின் தொடக்கப் புள்ளியõக அமைந்திருக்கும் திருமலைத் துறைமுகமும், அதனைப் பாதுகாக்கும் திஸ்ஸ கடற்படைத் தளமும் போரியல் உத்தியின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. 45 ஆயிரம் குடாநாட்டு இராணுவத்திற்குமான பாதுகாப்பான வழங்கல் பாதையொன்றினை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்குண்டு.

மன்னார், படை நகர்வின் நோக்கமும் அதுவேதான். அடம்பனிலிருந்து நேர் வடக்காக பூநகரி நோக்கிய நகர்வை மட்டுமே இராணுவம் மேற்கொண்டிருந்தால், ஓர் ஒடுங்கிய பகுதிக்குள் படையினர் அகப்படும் நிலை ஏற்படலாம்.

ஆகவே ஒடுங்கிய துண்டுப் பகுதியைப் பாதுகாக்க, துணுக்காய் வரை அகலக்கால் பரப்பி, பாதுகாப்பு வியூகம் அமைத்துள்ளது இராணுவம்.

செவ்வாய் இரவு நடைபெற்ற வான்புலிகளின் தாக்குதல் குடாநாட்டு வழங்கல் பாதைக்கு மாற்றீடாக, பூநகரிப் பாதைத் தெரிவினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை இராணுவத்திற்கு ஏற்படுத்தப்போகிறது.

அதாவது விமானத் தாக்குதல் நடைபெற்ற அன்று, பூநகரி மீதான இலங்கை வான் படையின் குண்டுத் தாக்குதல் வழமைக்கு மாறாக அதிகரித்துச் செல்வதனைக் காணலாம்.

அதேவேளை தொடர்ந்தும் நாச்சிக்குடா பகுதிகளிலும் கிபீர் மற்றும் ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகள் மூலம் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

ஆகவே, திருமலைத் தாக்குதலின் எதிர்வினைச் செயற்பாடாக பூநகரி நோக்கிய இராணுவ நகர்வு விரைவுபடுத்தப்படப் போகிறது.

கிளிநொச்சி, மாங்குளத்தைக் கைப்பற்றும் நகர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டு, பூநகரிக்கு முன்னுரிமை வழங்கும் உத்தியினை படைத்தலைமை பிரயோகிக்கலாம்.

இறுக்கமடையும் விடுதலைப் புலிகளின் தற்காப்பு எதிர்த் தாக்குதல்கள், முன்னரைவிட அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

விசேட படையணிகளும், நவீன போராயுதங்களும் களமிறங்கும் காலத்தில், சிங்களத்தின் உளவியல் சமர் உத்தியில் பாரிய மாற்றமேற்படலாம்.

போர்ப் பிரசாரங்கள் மூலம் சிங்களம் வடிவமைத்த இனவாத மேலாண்மைக் கட்டுமானத்தில் வெடிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

- இதயச்சந்திரன்-


Comments