12 ஆண்டுகளும் ஐனாதிபதிப் பதவியைத் தொடர மகிந்த போடும் தந்திரம் - கலியுகன்

சிறிலங்கா அரசியல் சட்டவிதிகளின் படி ஒருவர் இருதடவை ஐனாதிபதிப் பதவியில் இருக்க முடியும். ஒரு தடவையின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். எனில் இருதடவையும் ஒருவர் ஐனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் 12ஆண்டுகள் ஐனாதிபதியாக இருக்க முடியும்.

இந்த அரசியல் சாசனத்தை முன்னாள் ஐனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவே உருவாக்கியிருந்தார். அவர் 12 ஆண்டுகளும் ஐனாதிபதியாக இருந்தார். ஐனாதிபதிப் பதவிக்கான அரசியல் சட்ட விதிகளில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி இரண்டாவது தடவை போட்டியிடுவதன் காலத்தை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். அவ்வாறான சந்தர்ப்பத்திற்காகவே தற்போதைய ஐனாதிபதி மகிந்தராஐபக்ச காத்திருக்கின்றார் என்ற செய்திகள் கடந்த வருடம் ஊடகங்களில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டன.

மகிந்த ராஐபக்ச தான் போரில் வெற்றி பெற்றுவிட்ட நவீன கால துட்டகைமுனு என எண்ணுகிறார். விடுதலைப் புலிகளுடனான போரில் தமது படையினர் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர் என்ற தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்திருப்பதால் அதனை சிங்கள மக்கள் நம்புகின்றனர் என்பது போல அண்மையில் நடந்து முடிந்த இருமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன. இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் இது பிரதிபலித்தன.

வடக்கே ஐந்து முனைகளில் பேரை நடத்திவரும் அரசுப் படைகள் விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மையப்பகுதிகளுக்குள் சென்றுவிடுமென்று ஐனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை வீரப்பிரதாபம் காட்டி வருகின்றனர்.

படையினருக்கு ஏற்பட்ட தற்காலிக வெற்றிகள் சிலவற்றை வைத்துக் கொண்டும் மகிந்த தப்புக் கணக்குப் போடுகின்றார். இதற்குப் பின்னால் நிகழப்போகும் படைத்தரப்பு அழிவுகளை அவர் எண்ணிப்பார்க்கவில்லை என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கள போரினவாத அரசியல் தலைவர்களின் கடந்த 60ஆண்டு கால ஆட்சி தமிழ் மக்களிற்கு எதிரான செயற்பாடுகளைக் கொண்டிருந்தது. டி.எஸ் சேனநாயக்கா தொடக்கம் சந்திரிக்கா வரைக்கும் அதுவே நடந்துள்ளது. இப்போது மகிந்த ராஐபக்சவின் காலம். அவரும் தனது நிலையில் புதிய நற்சிந்தனை இல்லாது தமக்கு முன் ஆட்சி செய்த தலைவர்களின் வழியில் நின்று செயற்படுகிறார். எனவே சிறிலங்காவில் புதிய மாற்றங்களுக்கான வாய்ப்பில்லை. மாற்றம் இல்லையென்றால் போர் தொடரவே போகிறது. போர் தொடர்ந்தால் தான் தமது அரசியலில் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே அரசப்படைகள் வீழ்ச்சியடையும் வரை போர் தொடரவே போகிறது. அதுவே யதார்த்த நிலை.

போரில் படையினர் அழிவைச் சந்திப்பார்களானால் மகிந்தவின் அரசியல் இருப்புக் கேள்விக் குறியாகிவிடும். எனவே, தனக்கு வாய்ப்பான காலமாக கருதப்படும் போது முன்கூட்டியே ஐனாதிபதி தேர்தலை நடாத்தி இரண்டாவது ஐனாதிபதி காலத்தையும் வெற்றி கொண்டு தொடர்ந்து 12 ஆண்டு காலத்தையும் பூர்த்தி செய்ய மகிந்த போடும் தந்திரம் பலிக்குமா என்ற கேள்வியே கொழும்பில் எழுந்துள்ளன.

முதலாவது ஐனாதிபதி பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர் அடுத்த ஐனாதிபதி தேர்தலை நடாத்தி முதல் ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாவது ஐனாதிபதி பதவிக் காலத்துக்கான சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டால் மொத்தமாக 12 ஆண்டுகளையும் ஒருவர் பூர்த்தி செய்யலாம். அதனையே அரசியல் சாசன விதிகள் கூறுகின்றன. இந்த விதிகள் சரியானவையா அல்லது தவறானவையா என்பது ஒருபுறமிருக்க, இந்த விதிகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மகிந்த ராஐபக்ச தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மகிந்த ஐனாதிபதி பதவியேற்று மூன்று ஆண்டுகளாக இன்னமும் மூன்று மாதங்களுக்குக் குறைவான நாட்கள் இருக்கையில் அடுத்த ஐனாதிபதியாக ஆசைப்படும் மகிந்தவின் அதிகார ஆசை எவ்வளவு மூர்க்கத் தனமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள .அவ்வளவு தூரம் சொல்லத் தேவையில்லை.

எதிர்வரும் நவம்பருடன் மூன்றாண்டு கால மகிந்தவின் ஆட்சி தமிழ் மக்களுக்கு எவ்வளவு கொடூரம் நிறைந்ததாக அமைந்தது என எண்ணிப் பார்ப்பது சாலச்சிறந்தது.

அமைதிவழிக் கதவுகளை அடைத்து விட்டு, யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 சாலையையும் அடைத்து விட்டு, வன்னியை ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போல் நடாத்துகின்ற ஐனாதிபதி திரும்பவும் ஐனாதிபதியாக சிங்கள மக்கள் ஆதரித்தாலும் வியப்பில்லை.

மகிந்தவின் ஆட்சியில் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் படுகொலை செய்யப்பட்டும் மேலும் ஆறாயிரம் போர் வரை காணாமற் போயுள்ளனர். இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரசின் உதவியோடு படைத்தரப்பு ஈடுபடுகிறது இது மகிந்தவின் சொற்படியே நடக்கிறது.

மகிந்த ராஐபக்சவை வழிநடத்திச் செல்லும் மகிந்தவின் சகோதரர்களே இப்போது சகல அதிகாரமும் படைத்தவர்களாக இருப்பதாக சிங்கள ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் மகிந்தவின் தந்திரம் எடுபடுமா? மகிந்தவின் தந்திரங்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் புலிகளாகவே உள்ளனர். என்பதால் புலிகளின் பதிலடி தொடங்குமா?

புலிகளின் நடவடிக்கையைப் பொறுத்தே மகிந்தவின் எதிர்காலம் இருக்கிறது. என்று கூறும் அரசியல் ஆய்வாளர்களின் கூற்றும் கவனத்தில் கொள்ளக் கூடியதே.

ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் வெற்றி பற்றி திருப்திப் பட்டுக் கொண்டாலும் அவ்வாறான வெற்றிகளைத் தொடர்ந்து பெற முடியுமா? அதுவரை புலிகள் கை ஓங்காமல் இருக்குமா?

போரில் படைத்தரப்பு வெற்றிகள் குறித்து போகொல்லாகம, கெஹலியறம்புக்வெல, சரத்பொன்சேகா, கோத்தபாய போன்றோர். கூறும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக மகிந்தவிடம் காணப்படும் பதட்டம் யாவும் கொழும்பில் நிலவும் குழப்பமான அரசியலைத் தொட்டுக் காட்டுகிறது.

மகிந்த ராஐபக்ச ஐனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தி தனது பன்னிரண்டு ஆண்டு காலப்பதவியை உறுதிப்படுத்திய பின்னரே நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்துச் சிந்திக்கும் நிலையில் உள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஐனாதிபதியின் பதவிக்காலம் நான்காண்டுகள் முடிய 2009 நவம்பர் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு இன்னமும் பதினைந்து மாதங்கள் தேவை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2010 ஏப்ரல் அளவில் நடக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் உற்று நோக்கும் போது மிக அண்மித்து ஐனாதிபதித் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களோ நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இதுபோன்ற புரளிகளைக் கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேட ஆளும் தரப்பு முயல்கிறது அல்லது தந்திரமான வழிமுறைகளைத் தேடுகிறது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறக் கூடிய ஒரு தேர்தலாக இருக்குமானால் அது மாகாணசபைத் தேர்தல்களாக மட்டுமே இருக்கும். அதுகூட சர்சைக்குரியதே. ஏனெனில், குறித்த மாகாணசபைகளில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புண்டு. எனவே, அத்தேர்தல்கள் தள்ளி வைக்கப்படக் கூடும். மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், தென்மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றில் எதிரணியினர் வெற்றி பெறக்கூடும் என்பதால் அரசு யோசிக்கும்.

அவ்வாறெனில் ஏன் ஐனாதிபதி ராஐபக்ச தேர்தல் குறித்துச் சிந்திக்கிறார். என்ற கேள்வி கேட்கப்படுகிறது. தனக்கு வாய்ப்பான காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தினால் வெற்றி வாய்ப்பானதாக இருக்குமென எண்ணி விட்டார். ஆனால், அதற்குரிய காலமே மிக நீளமானதாக இருக்கிறது. ஐனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த காலம் வருவதற்குள்ள 15 மாதம் என்பது மிக நீண்டது. இக்காலத்திற்குள் நிறைய மாற்றங்கள் வர வாய்ப்புண்டு.

இனிவரும் காலங்கள் புலிகளின் வெற்றிக்குரிய காலங்களாக அமையப் போகிறது. அரசுப் படைகள் அகலக்கால் வைத்துள்ளன. இதன் எதிர் விளைவுகளை வன்னிக் களமுனைகளில் அவை சந்தித்தும் வருகின்றன.

கடந்தவாரத்தில் பல முனைகளில் இருந்து அரசுப்படைகள் நூற்றுக் கணக்கில் வெளியேற்றப்பட்டுள்ளன. துணுக்காய், ஆலங்குளத்தில் அரசுப் படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்த போது 20 படையினர் கொல்லப்பட்டு 25 படையினர் காயமடைந்து உள்ளனர். இதேபோன்று வன்னோரிக் குளத்தைக் கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சண்டையில் 20 படையினர் கொல்லப்பட்டும் 60 படையினர் உள்ளனர்.

இது போன்று களமுனைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. படைத்தரப்பிற்கு பல இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, மகிந்தவின் கனவுகள் கலைவதற்கு அடுத்த ஐனாதிபதித் தேர்தல்வரை காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு முன்னதாகவே அனைத்தும் நிகழப்போகிறது. என்பதுவே யதார்த்த நிலை. இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது ஆரசியல் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசை வற்புறுத்தி வந்திருக்கின்றன.

சார்க் உச்சிமாநாட்டிற்கு கொழும்பு வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவிடம் தனிமையில் சந்தித்த போது போரை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் அமைதிப் போச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், மகிந்த ராஐபக்ச பிரதமரின் ஆலோசனையை நிராகரித்து தீவிர போரை நடாத்தி வருகிறார். சார்க் உச்சி மாநாட்டுக்காக விடுதலைப் புலிகள் அறிவித்த போர் நிறுத்தத்தையும் நிராகரித்து விட்டு மகிந்த தீவிரமான போரில் ஈடுபட்டார்.

போர்நிறுத்தக் காலத்தில் புலிகளுக்கு பல சேதங்கள் ஏற்பட்டது. ஆயினும் அவர்கள் அதைக் கடைப்பிடித்தனர். சிறிலங்கா அரசாங்கம் இன்றைய உலக ஒழுங்கிற்கு அமைவாக உலக நீரோட்டத்துடன் செல்லாது தனித்து நின்று போர் புரிகிறது. இதற்கு சில நாடுகள் ஆயுத உதவிகள் செய்கின்றன. இதனால்தான் சிறிலங்காவால் போர் செய்ய முடிகிறது. ஆனால், மகிந்தவின் செயலுக்காகவும், போருக்கு ஆதரவு தருபவர்களுக்காகவும் இந்த உலகு ஒரு நாள் கவலைப்படப் போகிறது.

நன்றி: ஈழமுரசு

Comments