ஆட்கள் காணாமல் போதலில் இலங்கையே முன்னணி நிலை

ஆட்கள் பலவந்தமாகக் கடத்திக் காணாமற் போகச் செய்யப்படும் கொடூரம் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பீன்ஸ், சூடான், தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே பலவந்தமாகக் காணாமற் போகச் செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இருபத்தியைந்தாவது வருடமாக "சர்வதேச காணாமற் போனோர்' தினம் கடந்த சனியன்று அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு "பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாகக் காணாமற் போகச் செய்யப்படுவோர் தொடர்பான ஐ.நா.அமைப்பு' வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேசமயம், இலங்கையில் பலவந்தமாக ஆட்கள் கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்படுவது அதிகரித்திருக்கின்றமை இலங்கையின் பொலிஸ் திணைக்களப் புள்ளிவிவரங்களில் இருந்தும் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது.

2006 இல் நாட்டில் 1,190 பேர் கடத்தப்பட்டிருந்தனர்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1,229 ஆக உயர்ந்தது.

இப்போது, இந்த வருடத்தின் முதல் எட்டுமாத காலத்திலேயே இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

ஆட்கள் பலவந்தமாகக் கடத்தப்படுவதும், காணாமற் போகச் செய்யப்படுவதும் யாழ். குடாநாட்டில்தான் மிகமிக அதிகம்.

2007 இல் மட்டும் அங்கு 118 பேர் கடத்தப்பட்டமை பற்றிய முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்துக்குச் செய்யப்பட்டிருக்கின்றன.

இது தவிர, பொலிஸுக்கு முறைப்பாடு செய்யப்படாத பல சம்பவங்களும் அங்கு அநேகம் உள்ளன.

வெளியிடங்களுக்கான தரைவழிப்பாதை எல்லாம் துண்டிக்கப்பட்டு முப்படை மற்றும் பொலிஸாரின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் யாழ். குடாநாடு ஒருவகையில் திறந்தவெளிச் சிறைச்சாலை. பொலிஸாரும் முப்படையினரும் என சுமார் ஐம்பதாயிரம் பாதுகாப்புத் துருப்புகள் சிறிய குடாநாட்டுப் பிரதேசம் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகள், தடை நிலைகள், காவலரண்கள். போதாக்குறைக்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் திடீர் சோதனைகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் என ஏகப் பாதுகாப்புக் கெடுபிடி.

இவற்றுக்கு மத்தியில்தான் அங்கு சர்வ சாதாரணமாக ஆட்கள் கடத்தப்படுதலும், காணாமற் போதலுமாக அரச அராஜகம் பயங்கரவாதம் அரங்கேறுகின்றது.

இவ்வளவு கெடுபிடிக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும், இரும்புப்பிடிக்குள்ளும் தான் வைத்திருக்கும் யாழ். குடாநாட்டில், மர்மமான முறையில் அவ்வப்போது இடம்பெறும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கும் தனக்கும் தொடர்பு ஏதுமில்லை என்று கூறி படைத்தரப்பு இவ்விடயத்தில் தனது கையை விரித்து சுலபமாகத் தப்பிவிட முடியாது; பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது.

அரச உயர்பீடம் மற்றும் பாதுகாப்புத் தலைமை ஆகியவற்றின் ஆசி, மறைமுக அங்கீகாரம், மௌனமான இணக்கம் ஆகியவற்றுடன் அரங்கேற்றப்படுபவையே இந்தக் கொடூரங்களும், கோரங்களும் என்பதும் இன்று சர்வதேசம் அறிந்த பரம இரகசியமாகும்.

பல்வேறு தேசங்களிலும் இத்தகைய இரும்புத் திரைகளுக்குப் பின்னால் நின்றபடி அதிகாரத்தின் அரூபக் கரங்கள் புரியும் "திருவிளையாடல்கள்' எல்லாம் இப்போது பகிரங்கமாகி வருகின்றமை இன்று கண்கூடாகின்றது.
இத்தகைய அரச பயங்கரவாதங்களுக்குப் பொறுப்பான அரசுத் தலைவர்களும், படை அதிகாரிகளும், காலம் கடந்தும் கூட, சர்வதேச சட்டங்களின் பிடியினின்றும் தப்பிவிட முடியாது என்ற யதார்த்தம் இப்போது செயலுருவில் மெய்மைப்படுத்தப்பட்டு வருகின்றமையையும் காண்கின்றோம்.

"புலிப் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை' என்ற பெயரால் அரங்கேற்றப்படும் இந்த அராஜகத்தின் விளைவாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் முன்னால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

சட்டரீதியான இறைமையுள்ள அரசு என்று தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொள்ளும் கொழும்பு ஆட்சிப்பீடம், இத்தகைய கொடூர மனித உரிமை மீறல்களுக்கு அனுமதித்து, இடமளித்து ஒரு வகையில் அதற்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்கி வருவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கி நிற்கின்றது.

ஜனநாயக ரீதியில் தெரிவான அரசின் பெயரால் அரங்கேறும் இந்த அராஜகங்கள், சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியையே தட்டும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளன.

இவற்றின் விளைவுகள் கொழும்பு ஆட்சிப் பீடத்துக்கு சர்வதேச ரீதியில் ஆப்பாக இறங்கும் காலம் தூரத்தில் இல்லை என்பதும் தெளிவு.


Comments