முக்கியக் கட்டத்திற்குள் நுழைந்திருக்கும் வன்னிப் போர்

வன்னிப் போர் தொடர்பான எதிர்வு கூறல்கள் , ஊகங்கள், அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் எல்லாம் மிகஉச்ச நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை ஊடகங்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் ஊடகங்களிலும் மனங்களிலும் கூட இத்தகைய நிலையே இன்னும் உள்ளது. தவிர படைத்துறை இதழ்களிலும் சர்வதேச படைத்துறை ஆர்வலர்கள் வன்னிப் போர் (விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசுபோர்) குறித்து எழுதிவருகின்றனர்.

ஆக, வன்னிப்போர் இன்று முக்கியமானதொரு விவகாரமாகியிருக்கிறது. அதிலும், குறிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தப் போர் ஒரு தீவிரமான பாத்திரத்தை வகிக்கவும் போகிறது. எனவே தான் இதற்கு இந்தளவு முதன்மை எனலாம்.

எனவே, இப்போது வன்னிப் போரில் நிலமை என்ன என்ற கேள்வி பலருடைய மனதிலும் இருந்திருக்கிறது. இந்தக் கேள்வி வன்னித் தமிழர்களின் மனதில் மட்டுமல்ல சிங்கள மக்களின் மனதிலும் இது உண்டு. அவர்களும் தங்கள் எதிர்காலத்தை இந்தப் போரிலேயே முதலிட்டி ருக்கின்றார்கள். இந்தப் போரை முன்வைத்தே சிறிலங்காவின் அரசியற் பொளாதார இயக்கமே இயங்குகின்றது. வன்னியின் மேற்கில் மன்னார், பூநகரி வீதியை முழுமையாகத் தமது பிடிக்குள் கொண்டு வருவதாக படையினர் கடுமையாக முயற்சிக்கின்றனர். விடுதலைப் புலிகள் இதனை முறியடிக்கும் வகையில் மிகக் கடுமையான எதிர்ப்போரை செய்து வருகின்றனர்.

இதன்படி இப்போது யுத்தகளம் மிகவும் சூடான நிலையிலேயே உள்ளது. பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி, துணுக்காய் -ஆலங்குளம், வன்னேரிக்குளம், நாச்சிக்குடா ஆகிய களமுனைகளில் கடந்த 20 நாட்களுக்குள் படையினர் அதிகளவு இழப்புக்களையும், சேதங்களையும் சந்தித்துள்ளனர் என்ற போதும் நடவடிக்கையும் தீவிரம் குறையவில்லை.

பொதுவாகவே வன்னிப்போர் இந்தமாதிரி தீவிரமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கின்றது. இதன் காரணமாக அதிக அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் அது சந்தித்தும் இருக்கின்றது.

சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியின் போதான ஜெயசிக்குறு நடவடிக்கை இதற்குச் சிறந்த உதாரணம். அதற்கு முன்னர் பண்டாரவன்னியனின் கால கட்டத்தில் 1800களில் பிரித்தானியப் படைகளுக்கும் வன்னிப் படைகளுக்கும் இடையில் இவ்வாறு நீண்ட போர் நடந்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னர் ஒல்லாந்தப்படைகள், போர்த்துக்கேயப் படைகள் என்பனவும் வன்னிப்படைகளிடம் இவ்வாறு நீண்ட முடிவற்ற போரை செய்திருக்கின்றன. இடையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த 1987 – 1990 வரையான காலப் பகுதியிலும் வன்னியிலேயே கனதியான நீண்ட போர் நடந்திருக்கிறது. இந்தியப் படைகள் வன்னியின் ஆழத்தில் மணலாற்றுக் காட்டுப் பகுதியில் மிகத் தீவிரமான யுத்தத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த யுத்தமும் இப்போதுள்ள நிலையை ஒத்ததாகவே ஏறக்குறையதாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் நிலை தொடர்பாக இந்தியப்படைகள் பெரும் பரப்புரையை மேற்கொண்டதைப் போலவே இப்போது புலிகள் தொடர்பாக சிறிலங்காப் படையினரின் பரப்புரை இருக்கிறது.

வன்னிப்போர் தொடர்பாக அதை நடத்திய தரப்புக்கள் எல்லாமே இவ்வாறு ஒரு பரப்புரையை மேற்கொண்டேயுள்ளன. ஆனால், உண்மை நிலை இந்தப் பரப்புரைக்கு எதிர்மாறாகவே இருந்துள்ளது. இல்லையென்றால் வன்னிராச்சியம் 1800ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்திருக்க முடியாதே. கொழும்பு, யாழ்ப்பாண ராச்சியங்கள் எல்லாம் வீழ்ந்த பின்னரும் வன்னிராச்சியம் தாக்குப் பிடித்திருக்கிறது. வன்னியின் புவியியல் அமைவு பெரும்பாலும் எதிரிகளுக்கு சவாலானதே. இப்போது வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையை தொடரும் சிறிலங்காப் படையினர் ஒப்பீட்டளவில் தமக்கு சாதகமான வகையிலான புவியியற் பரப்பினூடாகவே நகர்வுகளை மேற்கொள்கின்றனர்.

வன்னி கிழக்கையும் விட வன்னி மேற்குக் காடுகள் குறைந்த பிரதேசம். அதுமட்டுமல்ல பெருமளவு பகுதி வெட்டவெளியானது மரபுவழிப் படையணி நடவடிக்கைக்கு வெட்ட வெளிப் பிரதேசம் வாய்ப்பானது. இதனையே சிறிலங்கா இராணுவத்தினர் தேர்வு செய்துள்ளனர். ஆனால், வன்னி மேற்கின் வழிகளில் பெரும்பாலானவை மாரிகாலத்தில் சதுர்ப்பு நிலமாகிவிடும். இது படையினருக்கு அபாயமாகவும் அமைந்து விடலாம்.

வன்னிக் கிழக்கு பெருங்காட்டை உடையது. மணலாற்றுக் காடு, நெடுங்கேணிக்காடு, இரணைமடுக்காடு என அடர்வனப் பிரதேசத்தையும் பெரும் ஆறுகளையும் கொண்டது. இது படையினருக்கு சவால்கள் நிறைந்தது என்பதால் தான் இந்தியப் படைகளும், ஜெயசிக்குறு படைகளும் புலிகளிடம் இந்தப் பகுதியில் கடுமையான இழப்புக்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால், வன்னி மேற்கில் அவ்வாறு எந்தப்பெரிய சம்பவங்களும் நடந்ததாக இல்லை.

பிரித்தானியப் படைகளுடன் பண்டாரவன்னியன் மோதியது கூட வன்னிக் கிழக்கில் தான். அதாவது வன்னிக் கிழக்கு எதிரிகளிடம் இருந்து வீழ்ந்து விடாது. இதன் அர்த்தம் வன்னிமேற்கில் எதிரிகள் வெற்றியடையலாம் என்றல்ல.

இப்போதுள்ள நிலையின் படியும் புவியியல் அமைவின் படியும் வன்னியின் இரண்டு பிரதான வீதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வருவதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் விரும்புகின்றனர்.

முதல் நடவடிக்கையில் ஏ 32 என்ற மன்னார் பூநகரி வீதியை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வருதல். இரண்டாம் கட்டமாகவும் இதன் தொடர்ச்சியாகவும் ஏ 9 வீதி என்ற யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையைப் பிடிப்பது.

இதற்கமைய வவுனிக்குளம், துணுக்காய் , வன்னேரி என்று படையினர் பக்கவாட்டாக நகர்ந்து நிலை கொண்டுள்ளனர். உண்மையில் சிறிலங்கா இராணுவத்தின் வளம் மற்றும் தகுதி நிலையில் இந்தத் திட்டமும் விருப்பமும் அதிக பட்சமானது என்று எச்சரிக்கும் படைத்துறை ஆய்வாளர்களும் உள்ளனர்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக எழுதப்பட்டு வரும் ஆய்வுக் கட்டுரைகளில் படையினர் ஒரு அபாய பொறிக்குள் இருப்பதாகச் சுட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் அதிகம். அதேவேளை புலிகள் தந்திரோபாயப் போர் முறையை பலப்படுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், படையினர் மெது மெதுவாக நகர்ந்து முதலில் பூநகரியைச் சேர்ந்து விட்டால் பின்னர் யாழ்ப்பானத்திலுள்ள நாற்பதினாயிரம் படையினரில் இருபதினாயிரம் படையினரை இயங்கு நிலைக்கு கொண்டு வரலாம் என்று கருதுகின்ற அரசாங்கம் அப்படி இயங்கு நிலைக்கு கொண்டு வரப்படும் படையினரைக் கொண்டே ஏ-9 வீதியை தமது பிடிக்குட்படுத்தலாம். என்பதுமே இந்தத் திட்டமாகும். இதனை பருவகால மழைக்கு முதல் எப்படியாவது சாதித்துவிட வேண்டும். என்பதும் படைத்தரப்பின் அவசர நிலைப்பாடாகும்.

இராணுவ நடவடிக்கை என்பது புவியல் அமைவு, ,பருவகாலம் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டது. இதனைப் பொருட்படுத்தாத பெரும் போர் நடவடிக்கைகள் மிகப் பெரிய தோல்விகளில் முடிவற்றுள்ளன. இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. ஹட்லரின் நாசகாரப் படைகள் ரஷ்சியாவில் தோற்றது. இதற்குச் சிறந்த உதாரணம். இப்போது பலவகையிலும் படையினர் தம்மைச் சுற்றிய அபாயகரமான சூழ்நிலையிலேயே உள்ளனர்.

இதுவரையான இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தினர் முழங்காவில் வரையான பகுதிகளை எட்டியுள்ளது உண்மை என்ற போதும் இவர்களுக்கான வளங்கள் மையம் என்பது இன்னும் வவுனியா, மன்னார் பகுதிகளிலேயே இருக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

இங்கிருந்து விரைவாக தொடர் விநியோகங்களை செய்யக் கூடிய நிலமையும் படைத்தரப்புக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பிரதேசங்களின் நில அமைப்பு, வீதிகள், அவை இதுவரையிலும் இருந்த நிலமை படையினர் இந்தப் பிரதேசங்களில் முன்னேறிய வேகம் என எல்லாவற்றையும் வைத்துப்பார்த்தால் விநியோக மாற்றம் இன்னும் சீர்செய்யப்பட்டதாக இருக்காது என்றே படுகிறது. ஆனால், இதற்கிடையில் மக்கள் மீது படையினர் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். இதுவரையும் படை நடவடிக்கைக்கு அண்மித்த பிரதேசங்களை விட்டு மக்கள் முன்கூட்டியே வெளியேறிய படியால் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது.

ஆனால், மக்கள் யுத்தமுனைக்கு அப்பால் தங்கியிருந்த இடம் பெயர்ந்தோர் குடியிருப்பு மீது எந்தக்காரணமும் இன்றி படையினர் ஆட்டிலறி எறிகணை வீச்சை நடாத்தியுள்ளனர். கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து போர் பலியாகியுள்ளனர்.

இதுதொடருமா? என்பதே மக்கள் மனதில் உள்ள கேள்வி இடம்பெயர்ந்து வீடு, வாசல் சொத்து, உடமை, ஊர் என சகலதையும் விட்டு வந்த மக்கள் இப்போது உயிரையும் விடவேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

படையினர் மக்கள் மீது ஒரு உளவியற்போரையும் வன்னியில் சமநேரத்தில் மேற்கொள்ளுகின்றனர். இதுகுறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். என புலிகள் மக்களிடம் கேட்டுள்ளனர். மக்களின் உளவியற் பலம் சிதைக்கப்படாமல் இருக்கும் போது அதுவே போராட்டத்தின் முக்கியமான வலுவாகவும் போராடும் தரத்தின் உளப்பலமாகவும் இருக்கிறது.

உண்மையில் படைத்தரப்பின் முயற்சியும் அரசாங்கத்தின் கனவும் எப்படி அமையப் போகிறது என்பதை இன்னும் சில வாரங்களில் சகலரும் அறியலாம். எல்லாம் கனிந்து வருகின்ற ஒரு நிலையே இன்று களயதார்த்தமாக இருக்கிறது என்று அவதானி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறதையும் இங்கு கவனிக்கலாம்.

மிகவும் களைப்படைந்திருக்கும் படையினரை இன்னும் எவ்வளவு தூரம் விரட்டுவது என்பதே இன்றுள்ள பிரதான கேள்வி. அதுவும் யுத்தத்தினவு அடக்காத அரசாங்கம் இருக்கும் வரையில் படையினர் ஓய்ந்திருக்க முடியாது.

புலிகள் ஒரு நடவடிக்ககையை மேற்கொண்டால் தமக்கு சற்று ஓய்வு கிட்டும். என்று சில சிரேஸ்ட படை அதிகாரிகள் கூறியதாக கொழும்புத் தகவல்கள் சொல்கின்றன. வன்னி யுத்தத்தில் மகிந்த அரசு தோல்வியைத் தழுவ வேண்டும் என்று ரணிலின் கட்சியும் விரும்புகின்றது.

ஆக, வன்னியின் யுத்தம் இப்போது எல்லோருடைய கவனத்திலும் ஆழமான கவனத்தைப் பெற்றுள்ளது. அதுவே எல்லேருக்குமான எதிர்காலமாகவும் உள்ளது.

- மனோகரன்-


நன்றி: ஈழமுரசு

Comments