அமெரிக்காவில் மகிந்தவின் வருகையினை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்டனப் பேரணி


ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.

கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் நகரங்களில் இருந்து மட்டும் அறுநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேருந்துகளிலும் வானூர்தியிலும் தமது சொந்த வாகனத்திலும் சென்று கண்டனப் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் பங்கேற்பதற்கான வாகன ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக திமிரோடு பேசியும் தமிழ் மண்ணை வல்வளைப்புச் செய்தும் வானில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் எறிகணைத் தாக்குதல் நடத்தியும் 225,000 அதிகமான மக்களை ஏதிலிகளாக்கியும் ஒரு முழு அளவிலான இனப்படுகொலையை நடத்தி வரும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தோலுரித்து உலகுக்குக் காட்ட இக்கண்டனப் பேரணி உதவியுள்ளது.

கண்டனப் பேரணியில்

எங்கள் தலைவர் பிரபாகரன் (Our Leader Prabhakaran)

எங்கள் தாகம் தமிழீழம் (We Want Thamizh Eezham Now)

எங்களுக்கு வேண்டும் சுதந்திரம் (We Want Freedom)

ராஜபக்ச இனப்படுகொலையாளன் (Rajapakse Mass Killer)


என ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் ஆவேசமான முழக்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில் மோதி வானை நோக்கி எதிரொலித்தன.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஏராளமான முழக்க அட்டைகளையும் பதாதைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் தாங்கியிருந்தனர்.

கண்டனப் பேரணி நிகழ்வினை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்தன.

கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன், வழக்கறிஞர் நாதன் சிறீதரன், திருமதி உசா சிறீஸ்கந்தராஜா, திருமதி வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர் வி.உருத்திரகுமார் பேசும் போது,

"தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய ஆயுதப் புரட்சி ஒன்றை மேற்கொண்டு சிங்கள மக்களைப் படுகொலை செய்தபோது சிறிலங்கா அரசு அங்குள்ள ஊர்கள் மீது குண்டு வீசவில்லை, எறிகணைத் தாக்குதலை நடத்தவில்லை, சிங்கள மக்கள் சுற்றி வளைக்கப்படவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டில்களில் பூட்டி வைக்கப்படவில்லை.

ஆனால் தமிழர்கள் மீது இன்றைய சிறிலங்கா அரசு காட்டுமிராண்டித்தனமான- கண்மூடித்தனமான வான்-தரை வழியாகத் தாக்குதல்களை நடத்தித் தமிழ் மக்களைக் கொல்கினன்றது.

வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது 6 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசி விட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. எனவே, தமிழ் மக்கள் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும் வாழ உலக நாடுகள் தமிழ் மக்களின் தன்னனாட்சி உரிமையை அங்கீகரிக்க இப்போதாவது முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர் நாதன் சிறீதரன் பேசும் போது,

"குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்து வாழமுடியாவிட்டால் ஒத்து வாழும்படி முதலில் அறிவுரை செய்கின்றோம் அதற்குப்பின்னரும் அவர்கள் ஒத்துப் போகவில்லை என்றால் மணமுறிவுதான் சரியான வழி என அவர்களைப் பிரிந்து வாழ விட்டுவிடுகிறோம்.

அதேபோல் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே நாட்டில் ஒத்துவாழ முடியாத நிலை இருக்கிறது. எனவே நாட்டைப் பிரித்து தமிழர்களின் நிலப்பரப்பை தமிழர்களிடமே கொடுத்துவிடுவதுதான் இனச் சிக்கலுக்கு சரியான தீர்வாக இருக்கும்" என வலியுறுத்திக்கூறினார்.

மருத்துவர் எலின் சண்டரும் உரையாற்றினார். மிகச் சொற்பமான சிங்களவர்கள் கண்டனப் பேரணிக்கு எதிராகக் கூடி நின்று கூச்சலிட்டனர். இவர்களில் பெளத்த பிக்குகள் சிலரும் காணப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

நியூயோர்க் காவல்துறை கண்டனப் பேரணி நடத்துவதற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

ஏராளமான பிறமொழிச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் கண்டனப் பேரணியில் காணப்பட்டார்கள். பலரை நேர்காணல் செய்தனர்.

இதே பூங்காவில் சீனாவுக்கு எதிராகத் திரண்டிருந்த திபெத்தியர்களும் ஈரானிய ஆட்சித்தலைவருக்கு எதிராகத் திரண்டிருந்த யூதர்களும் தமிழர்களின் கண்டனப் பேரணிக்குத் தங்களின் ஆதரவைக் தெரிவித்தனர்.

ஈரானிய - சிறிலங்கா ஆட்சித்தலைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருக்கும் படத்தை அங்கு வந்திருந்த தமிழர்கள் பேரணியில் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் பேரணி பெருவெற்றி என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்புப் தெரிவித்தது. வேறு இனத்தவர்கள் நடத்திய பேரணிகளை விட தமிழர்கள் நடத்திய பேரணி அளவிலும் உணர்விலும் மேலோங்கி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

எலியாஸ் ஜெயராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு காலமறிந்து கண்டனப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்தார்.















Comments