புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள்

புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிறிலங்கா இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த வேண்டுகோளை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திலிருந்து விடுக்கின்றோம்.

இத்தீவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்ற போதும், அதனை முன்வந்து சொல்லவும் முடியாத அளவுக்கு அந்த இராணுவம் தமிழ் மக்களின் கழுத்தை திருகிய வண்ணம் உள்ளது.

பாதிக்கப்பட்ட பின், வெளிநாடுகளில் பாதுகாப்பை தேடிக்கொண்டவர்களாலேயே பூட்டபட்ட தமிழ் மக்களின் துயரத்தை வெளிக்கொண்டுவர முடியும்.

உங்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் பாதிப்புக்கள் எக்காலத்தில் ஏற்பட்டதாயினும் அதனை ஆவணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆயினும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் உங்களுக்கோ உங்களின் உறவுகளுக்கோ ஏற்பட்ட பாதிப்புக்களை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் ஆவணப்படுத்த விரும்புகின்றது.

நீங்கள் விரும்பினால் நீங்கள் தரும் விபரங்களின் இரகசியத்தன்மை பேணப்படும்.

அதேநேரம், நீங்கள் விரும்பினால், ஐ.நா. அமைப்புக்களின் முன் உங்கள் அனுபவங்களை எடுத்துச்சொல்லவதற்கும் நாம் ஒழுங்குபடுத்திக் கொடுப்போம்.

முதற்கட்டமாக பின்வரும் மின்னஞ்சல் ஊடாக வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்கின்றோம்.

nesohr.victims@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் முன்வந்து உங்களுக்கோ உங்கள் உறவுகளுக்கோ ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எம்மிடம் தொடர்பு கொள்ளும்போது அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கான உங்கள் பணியாகவும் இருக்கும் என்பதையும் இங்கு கூறவிரும்புகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



Comments