உளவியல் போரும்,பிரசாரப் போரும்,அரசுக்கு வெற்றியைத் தேடித் தருமா?

வன்னிப் படைகளின் தலைமையகம், வவுனியா விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதான புலிகளின் வான் தாக்குதல்களை அடுத்து இலங்கை விமானப்படை தனது இயலாமையை வன்னியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது காட்டி வருகிறது.

ஐ.நாவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வன்னியை விட்டு அரசாங்கம் கட்டாயமாக வெளியேற்றிய பின்னர் மோசமான விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானத் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் “விடுதலைப் புலிகளின் பௌதிக ரீதியான படைவளங்களை அழிப்பதே” என்று அரசாங்கமும் படைத்தரப்பும் சொல்லிக் கொள்கின்ற போதும் அது பொய்யானது.

செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் தீவிரமாக்கப் பட்டுள்ள விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் வன்னிப் பகுதியில் இருந்து மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இடம்பெயர வைப்பதேயாகும். மக்களைப் புலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலமே படையினரால் இந்தப் போரில் வெற்றியீட்ட முடியும் என்பது படைத் தலைமைக்கு நன்கு தெரியும்.

இதன் காரணமாகவே வன்னிப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கின்ற சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வவுனியாவுக்குள் வரவழைக்கின்ற திட்டத்துடன் மூர்க்கத் தனமான விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளில் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்தான் தொண்டர் நிறுவனங்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இப்போது மக்களின் மீதான நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன.

இந்த விமானத் தாக்குதல்கள் குறித்து தென்னிலங்கையில்;, புலிகளைத் தாம் நொண்டியாக்கி விட்டதாக பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அண்மைக் காலமாக படைத்தரப்பு எதிர்கொண்டுவரும் பாரிய இழப்புகளை மறைப்பதற்கும், படையினர் மத்தியில் புலிகளின் உக்கிரமான பதிலடிகளால் ஏற்பட்டிருக்கின்ற மனச்சோர்வை நீக்குவதற்கும் அரசாங்கத்துக்கு இத்தகைய பிரசாரங்கள் தேவைப் படுகின்றன.

கடந்த வாரம் கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதியான வட்டக்கச்சியில் விமானப்படையின் கிபிர், மிக்-27 போர் விமானங்கள் அடுத்தடுத்து குண்டுகளைக் கொட்டி விட்டுச் சென்றன. அந்தத் தாக்குதலின் பின்னர் விமானப்படையும் பாதுகாப்பு அமைச்சும் வெளியிட்ட தகவலில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப் பட்டதாகவும், குறித்த இலக்கு முற்றாக அழிக்கப் பட்டதை விமானிகள் உறுதி செய்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மறைவிடம் தாக்கப்பட்டபோது புலிகளின் தலைவர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இட்டுக்கட்டி கதைகளைப் புனையத் தொடங்கின. இதேபோன்று புலிகளின் தலைவரின் மறைவிடம் என்று எத்தனை தடவைகள் தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன?

விமானப் படையின் மோசமான வான் தாக்குதல்களாலும் தமது ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்களாலும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் முக்கிய தலைவர்களும் பதுங்குகுழிகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதாக கடந்த வருடம் இதே விமானப் படையும் பாதுகாப்பு அமைச்சும் தான் தகவல் வெளியிட்டிருந்தன. புதுக்குடியிருப்புப் பகுதியில் தான் அவர்கள் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

அப்போதிருந்ததை விட இப்போது விமானத் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளன. கிளிநொச்சி நகருக்கு நெருக்கமாக இராணுவத்தினரின் அச்சுறுத்தலும் இருக்கின்ற நிலையிலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் வட்டக்கச்சியில் உள்ள மறைவிடத்துக்கு வந்திருப்பாரா?

புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை விட்டு வெளியே நடமாடித் திரிய முடியாத வகையில் அவர்கள் முடங்கிப் போயிருப்பதாக முன்னர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த தகவல் உண்மையானால், புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து எதற்காக வட்டக்கச்சியில் வான் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்?

சரியான புலனாய்வுத் தகவலின் பேரில் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்றால் அவர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிய முடியாமல் முடங்கிக் கிடப்பதாக முன்னர் கூறியது பொய்யாகி விடும்.

பாதுகாப்புத் தரப்பு இப்படி முன்னுக்குப்பின் முரணான தகவல்களையும் பொய், புரளிகளையும் அவிழ்த்து விட்டு வன்னியில் புலிகள் அழிவின் விளிம்புக்கு வந்து விட்டதாக நம்பவைக்க அரசு பெரும் முயற்சி செய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் மறைவிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகவும், அவர் இப்போது உயிருடன் இல்லை என்றும் கூட படைத்தரப்பு தகவல் வெளியிட்டு வந்தது. ஆனால் பின்னர் அவையெல்லாம் வெறும் பொய்யே என்பது நிரூபணமாகி இருந்தது. இதன் பின்னர் இத்தகைய பொய்கள் அடங்கிய அறிக்கைளை வெளியிடுவதைப் படைத்தரப்பு குறைத்திருந்தது.

ஆனால், மீண்டும் இப்போது அந்த உளவியல் யுத்தம் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. புலிகளின் தலைவர்கள் கூடும் இடம், முக்கிய தலைவரின் மறைவிடம், புலனாய்வுப் பிரிவு பயிற்சி முகாம், கரும்புலிகளின் தளம், ஆயுதக் களஞ்சியம், கணினிக் கட்டுப்பாட்டு மையம் போன்றவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இவற்றில் புலிகளுக்கு அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படும் கதைகள் எல்லாமே இந்த உளவியல் போரின் அங்கம் தான்.

வன்னியில் புலிகளின் தளங்கள் எனக் கருதப்படும் இடங்களும் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற போதும் பெரும்பாலானவை இலக்குத் தவறியவையாகவே இருந்துள்ளன. பொதுமக்களின் வாழ்விடங்களே அதிகளவில் சேதமடைந்திருக்கின்றன. அல்லது பயிர்கள் அழிந்திருக்கின்றன.

அண்மையில் திருகோணமலைக் கடற்படைத் தளம் மீது புலிகள் நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, “புலிகள் ஆறே ஆறு வான் தாக்குதல்களைத் தான் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆறாயிரம் தாக்குதல்கள் நடத்தி யிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆறாயிரம் வான் தாக்குதல்கள் என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல.

ஒவ்வாரு தாக்குதலின் போதும் குறைந்தது 1000 கிலோ எடையுள்ள குண்டுகளாவது வீசப்படுகின்றன. இத்தனைக்கும் புலிகள் தாக்குப் பிடிக்கிறார்கள். விமானப் படையின் இலக்குகள் சரியானதாக அமைந்திருந்தால் இந்த ஆறாயிரம் வான் தாக்குதல்களின் பின்னர் புலிகளுக்கு எந்தவொரு பௌதிக வளங்களும் இல்லாமல் போயிருந்திருக்க வேண்டும்.

புலிகளின் பௌதீக வளங்களின் ஒரு பகுதியைக் கூட அழிப்பதில் வெற்றி பெறாத விமானப் படையைத் தான் இலங்கை அரசாங்கம் முழுமையாக நம்பியிருக்கிறது. இந்த நிலையில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் றொஷான் குணதிலக செப்ரெம்பர் 19 ஆம் திகதி “ஐலன்ட்” நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் அவர், “புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப் படுவதாகவும், மிக விரைவிலேயே அவரை இல்லாமற் செய்து விடுவோம்” என்றும் தெரிவித்திருக்கிறார். இதேபோன்ற கருத்தை விமானப் படைத் தளபதி சில மாதங்களுக்கு முன்னரும் கூட வெளி யிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “புலிகளின் தலைவர் பிரபாகரன் இலகு ரக விமானம் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும,; ஆனால் அவரையும் அவரது தளபதிகளையும் தப்பிச் செல்ல படையினர் விடமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் இலகு ரக விமானத்தின் ஆகக் கூடிய பறக்கும் தூரம் எவ்வளவு? அந்தத் தூரத்துக்குள் உள்ள எந்த நாட்டிலாவது தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் புலிகளுக்கு இருக்கிறதா? இப்படியான தப்பிச் செல்லும் முயற்சிகள் வெற்றி தரக் கூடியதா என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாத ஒருவர் தான் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் கதையை நம்ப முடியும்.

புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டதாக பிரசாரம் செய்து தமிழ் மக்களைச் சோர்வுறச் செய்வதும் சிங்கள மக்களை சோர்வடையாமல் யுத்தத்தில் நம்பிக்கை கொள்ள வைப்பதும் தான் படைத் தரப்பினதும் அரசாங்கத்தினதும் நோக்கங்களாக உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் புலிகள் மணலாறு பகுதி மீது நடத்திய வான் தாக்குதலின் பின்னர் பல மாதங்களாக அவர்கள் தாக்குதலில் ஈடுபடாதிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான் புலிகளின் விமானங்களால் இனிமேல் மேலெழ முடியாதென்று விமானப் படைத் தளபதி உரிமை கோரியிருந்தார்.

ஆனால், அவரது இந்த உரிமை கோரல் வெளியான சில நாட்களுக்குள் புலிகள் திருகோணமலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி அந்த உரிமை கோரலின் உண்மைத் தன்மை மீது கேள்வி எழுப்ப வைத்தனர்.

புலிகள் வைத்திருப்பது வெறும் பொம்மை விமானங்கள் தான், அவற்றை வைத்து விளையாட்டுத் தான் காட்ட முடியுமே தவிர, தாக்குதல் நடத்த முடியாதென்று கூறிய அரச தரப்பினரும் உள்ளனர். ஆனால், இன்று அதே விமானங்களால் புலிகள் இலக்குத் தவறாத தாக்குதல்களை நடத்தியுள்ளதால் இவை வெளிநாட்டவர்களால் இயக்கப் பட்டிருக்குமோ என்ற சந்தேகம் படைத் தரப்புக்கு எழுந்திருகிறதாம்.

திருகோணமலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் எழுந்த இந்தச் சந்தேகம் வவுனியா தாக்குதலை அடுத்து தீவிரம் பெற்றிருக்கிறதாம். கடும் இருள், மழை மேகங்கள் சூழ்ந்திருந்த நேரத்தில் புலிகள் இந்த இரு நிலைகள் மீதும் நடத்திய தாக்குதல்கள் குறிதவறாத வகையில் நடத்தப் பட்டிருக்கின்றன.

வவுனியா தாக்குதலின் போது, புலிகளின் விமானங்களை அழிக்க விரைந்த விமானப் படையின் எப்-7 விமானத்தைக் கண்டதும் திடீரென குத்துக்கரணம் அடித்து தாழ்வான உயரத்துக்குச் சென்று விமானப்படையின் ரேடரில் இருந்து மறையச் செய்திருக்கிறார் புலிகளின் விமானி.

புலிகளின் மற்றைய விமானம் விமானப் படையின் விமானங்கள் வருவதைக் கண்டதும் பின்வாங்கிச் செல்வது போன்று முல்லைத்தீவு நோக்கிச் சென்று விட்டு மாமடுப் பக்கமாகத் திரும்பி வந்து விசேட படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நிர்மல் தர்மரட்ணவின் கட்டளை மையத்தின் மீது குண்டுகளை வீசி விட்டுச் சென்றிருக்கிறது.

இந்த இரண்டு சம்பவங்களும் புலிகளின் விமானங்களைச் செலுத்தும் விமானிகள், நிச்சயமாக விமானப் படையின் ஜெட் போர் விமானங்களைச் செலுத்தும் விமானிகளை விட அனுபவம், திறமை வாய்ந்தவர்கள் என்று படைத்தரப்பை நம்பவைக்கின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.


புலிகளிடம் உள்ள விமானங்களின் மூலம் ஒரு போர் விமானத்துக்குரிய பண்புகளை எதிர்பார்க்க முடியாது. எனவே குண்டுகளை துல்லியமாக வீச முடியாதென்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், புலிகள் நடத்தியிருக்கின்ற பெரும்பாலான வான் தாக்குதல்களில் ஏதோ ஒரு வகையில் படையினருக்கு உயிர், உடைமை இழப்புக்களாவது ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்தளவுக்கு விமானப் படையின் அதி நவீன விமானங்களால் சாதிக்க முடியவில்லை. இதனால் தான் புலிகளின் விமானங்களை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கூலி விமானிகள் செலுத்தியிருக்கலாம் என்று படைத்தரப்பு சந்தேகம் எழுப்பும் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது.

அதாவது புலிகளால் திறமையான முறையில் குண்டுகளை வீச முடிந்தது என்பதை ஒப்புக் கொள்ள முடியாமல் அல்லது விரும்பாத நிலையில் தான் சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் இத்தகைய சந்தேகங்களை அரசதரப்பு ஊடகங்களினூடு எழுப்பி வருகிறது.

வெளிநாட்டு விமானிகளைப் புலிகள் பயன்படுத்துவதானால் அவர்களை எப்படி வன்னிக்கு அழைத்து வந்தார்கள் என்ற கேள்வியை பதிலுக்குக் கேட்டால் அரச தரப்பால் திருதிருவென முழிப்பதைவிட வேறு வழியிருக்காது.

புலிகளின் விமானப் படையையும் அவர்களின் விமானிகளின் திறமையையும் குறைத்து மதிப்பிடும் நோக்கில் கருத்து வெளியிட்டு அது தோல்வி கண்ட நிலையில் தான் இத்தகைய பிரசாரத்தை அரசு முன்னெடுத்திருக்கிறது.

அரசாங்கத்தின் பிரசாரப் போருக்கு திருகோணமலையிலும் வவுனியாவிலும் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்ட போதும் தென்னிலங்கை சிங்களவர்களுக்கு போரின் மீது நம்பிக்கை ஊட்டுவதற்கு அதைத் தொடர்வதை விட வேறு வழி அரச தரப்புக்குக் கிடையாது.

போரின் இழப்புகள், அதன் இறுதி நிலவரத்தைப் புரட்டிக் போடும் வகையிலான பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் இத்தகைய பொய்யும் புரட்டுமான பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றியைத் தேடித் தராது என்பதை உணரும் நிலையில் அரசாங்கம் இல்லை.

அங்கதன்


Comments