புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டு விமானிகள் என்று கூறி சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள்

வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி எறிகனை மற்றும் விமான தாக்குதல் முறையிலான மரபு வழி தாக்குதல் நடத்திய நாளில் இருந்து இதுவரை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அது பற்றிய உண்மைகளை மூடிமறைத்து வருகின்றன.

விடுதலைப் புலிகளுடைய மரபுவழி தாக்குல் பாணியிலான முறைமைகளையும், குறிப்பாக புதிய தொழில்நுட்பமுறையிலான மிகவும் நுண்ணிய ஆய்வு ரீதியான தாக்குதல் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆங்கில் ஊடகங்கள் தயங்குகின்றன.

புலிகள் நடத்திய முன்னைய தாக்குதல்களும் ஆய்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் கள நிலைமைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருத்தமான உத்திகள் அவ்வப்போது பயன்படுத்தியதாகத்தான் இருந்தது.

ஆனால் வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீதான புலிகளின் தாக்குதல் உத்தி என்பதை புலிகளினுடைய அதிஉச்சமான வினைத்திறனாக ஏற்றுக்கொண்டால் அல்லது வெளிப்படுத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய பொருளாதார தடைகள், உணவு நெருக்கடிகள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அது ஒட்டுமொத்த தமிழர்களுடைய வளர்ச்சியாகி விடும் என்ற கருதுநிலை ஆங்கில ஊடகங்களுக்கும் சிங்கள சமூகத்திற்கும் வந்து விட்டதுபோல் தெரிகின்றது.

விசேடமாக அதுவும் இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர்களும் அதன் கட்டுப்பாட்டு அறைகளும் புலிகளின் தாக்குதல் திறனால் சேதமடைந்துவிட்டன ஒரு தடவையேனும் புலிகளின் விமானத்தை சிறிலங்கா படைகளினால் சுட்டுவீழ்த்த முடியாது போய்விட்டதே என்பதை ஏற்பதற்கு ஆங்கில ஊடகங்களுக்கு கடினமாகவுள்ளது.

மகிந்த அரசு என்பதை விட சிங்கள தேசத்திற்கு தமிழர் தேசத்தால் ஏற்பட்ட ஒரு மோசமான தோல்வியாக இதனை பார்க்கின்றனர்.

இதன் வெளிப்பாடாகவே 12.09.08 அன்று ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான புலிகளின் தாக்குதல் பற்றிய கட்டுரை ஒன்றை நோக்க வேண்டியுள்ளது.

புலிகளின் விமானத்தை செலுத்தியவர்கள் வெளிநாட்டு விமானிகளா? என்ற கேள்வியுடன் எழுதப்பட்ட அந்த கட்டுரையின் உள்நோக்கம் சிங்கள மக்களை ஆறுதல்படுத்துவதற்காக என்பது தெளிவாகின்றது. (அதாவது வெளிநாட்டு விமானிகள் இல்லையானால் புலிகளால் இந்த தாக்குதலை திறமையாக செய்திருக்க முடியாது என்று கூறி ஆறுதல் படுத்துகின்றனர். அதேவேளை, வெளிநாட்டு படைகள் உதவி புரிவதாக கூறி சிங்கள மக்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கி தமிழர்களுக்கு எதிராக உசார்படுத்துகின்றனர் என்றும் கருதலாம்)

மேலும் இதனை இரண்டு வகையாக பார்க்க முடியும் ஒன்று புலிகள் வெளிநாட்டு விமானிகளை பயன்படுத்துகின்றார்கள் என்று கூறுவதன் மூலமாக புலிகளில் அதாவது தமிழர்களில் விமானங்களை செலுத்தக்கூடிய அளவு திறமையானவர்கள் இல்லை என்பதில் சிங்களவர்களை மகிழ்விப்பது. இரண்டாவது அவ்வாறு கூறுவதன் மூலம் இந்தியாவை உசுப்பி புலிகளுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது. அல்லது மேலும் உதவிகளை பெறுவது. (ஆனால் இந்திய புலனாய்வாளர்களுக்கு உண்மை தெரியும்)

சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு ஏற்பட்ட தாங்கிக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்படுதான் புலிகள் வெளிநாட்டு விமானிகளை பயன்படுதினார்களா என்ற கேள்வியுடன் கூடிய அந்த செய்தி விமர்சனம் கோடி காட்டுகின்றது.

பொதுவாக சிங்கள ஊடகங்களின் பண்பு மூடிமறைப்பதுதான் என்று எடுத்துக்கொண்டாலும் டெய்லி மிரர், மோர்ணிங் லீடர் போன்ற ஆங்கில பத்திரிகைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவேனும் புலிகளின் தாக்குதல் தொடர்பில் கணிசமக பெறப்படுகின்ற இராணுவ உள்ளக தகவல்கள் மூலமாக சேத விபரங்களை வெளியிட்டு வந்தார்கள்.

அவ்வாறு வெளியிடப்பட்ட பல தகவல்கள் குறிப்பிடத்தக்க அளவு உண்மையாகவே இருந்தது. அதனால் இராணுவ உயர்பீடத்திற்கும்; அரசாங்கதத்திற்கும் பல சங்கடமான நிலைமைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அதன் காரணமாக குறித்த ஆங்கில பத்தி எழுத்தாளர்கள் சிறிலங்கா பாதுகாப்பு உயர்பீடத்தினால் மறைமுகமானதும் நேரடியானதுமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுமிருந்தனர். ஆனால், வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீது ஆட்லறி எறிகணை மற்றும் விமான தாக்குதல் முறையிலான மரபுவழி தாக்குதல் பற்றி இம்முறை ஆங்கில ஊடகங்கள் தாங்களாகவே சுயதணிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பலாலி விமான தளத்தின் மீது புலிகள் முதன் முதலில் விமான தாக்குதல் நடத்தியபோது சிறிலங்கா படைத்தரப்பு அதனை மறுத்திருந்தது. பின்னர் கொழும்பில் விமான தாக்குதல் நடத்தியபோது சிறியரக விமானம் என்று கூறி ஆறுதல் அடைந்தனா.; சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அவ்வாறுதான் எழுதியிருந்தன.

விமல் வீரவன்ச உட்பட ஜக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட குரும்பட்டி விமானம் என்றும் சிறிய ரக விமானம் என்றுதான் கூறியிருந்தனர்.

சிறிலங்கா பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. உட்பட அரச தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே அதுபற்றிய நீண்ட கருத்து பரிமாறல்களும் வாக்குவாதங்களும் ஏன் கிண்டல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு சிங்களத்தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாமை அல்லது பொறுத்துக்கொள்ள முடியாமை என்ற வாதத்தால் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருந்தனர்.

தற்போது வல்லரசு நாடுகளே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு அல்லது அவர்களை யோசிக்க வைக்கும் அளவிற்கு புலிகளின் விமான தாக்குதல் திறன் வளர்ச்சி கண்டுள்ளது, அல்லது நீட்சியடைந்து வருகின்றது என்பதை அறிந்து வெளிநாட்டு விமானிகள் ஒடுவதாக சிங்கள மக்களுக்கு கதை சொல்கின்றார்கள்.

இப்படி கூறுவதும் அவர்களுக்கு ஆபத்தானதுதான். அப்படியானால் சர்வதேச நாடு ஒன்று புலிகளை அங்கீரிக்கப்போகின்றது என பொருள்கொள்ளலாம். அதுவும் சிங்களத்தரப்புக்கு ஏற்புடையதல்லவே.

ஆகவே யதார்த்தம் ஒன்றை சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விடுதலை இயக்கம் ஒன்று எப்போதும் வெளிநாட்டவர்களை நம்பி போராட்டத்தை ஆரம்பிக்காது. குறிப்பாக விடுதலைப் புலிகளை பொறுத்தவரை தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களையும் ஆளணிகளையும் பயன்படுத்தியே போராட்டத்தில் வளர்ச்சி கண்டு வந்தவர்கள்.

சர்வதேச நாடுகள் எப்போதும் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாக பேசாது, உதவிகூட செய்யமாட்டார்கள். பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மிக லாவகமாக போராட்டத்தின் நியாயப்பாடுகளை தள்ளிவிடுவார்கள்.

அரசுக்கு அரசு என்பதுதான் சர்வதேச நாடுகளின் கோட்பாடும் நிலைப்பாடுகளும். அரசுகள் எத்தகைய அரச பயங்கரவாதங்களில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலும் அதனை ஜனநாயகம் என்றுதான் பார்ப்பார்கள்.

விடுதலை வேண்டி நிற்கும் இனங்களும் விடுதலை இயக்கங்களும் தங்களுடைய போராட்டத்தை நடத்துகின்ற முறைமையிலேதான் எந்த வெற்றியையும் காணமுடியும். அனால் அதற்காக பல வகையான இழப்புக்களையும் வேதனைகளையும் வல்லரசு நாடுகளின் சோதனைகளையும் விடுதலை இயக்கங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏன் பின்னடைவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். திரைப்பட காட்சிபோன்று மூன்று அல்லது இரண்டரை மணித்தியாலங்களுக்குள் போராட்டத்தில் வெற்றி காணமுடியாது. அல்லது குறித்த இலக்கை அடைய முடியாது.

விடுதலை புலிகளினுடைய போராட்ட வடிவம் இந்த முறைமைகளுக்கு உதாரணமானது. புலிகளை பொறுத்தவரை சிறிலங்கா அரசு, சிறிலங்கா படைத்தரப்பு என்பதை விட அவர்களுக்கு சர்வதேச நாடுகள்தான் தற்போது பிரச்சினையாக இருக்கின்றன.

அதாவது சிறிலங்கா படைத்தரப்புடனான புலிகளின் ஒவ்வொரு சமர்க்கள வெற்றியும் சர்வதேசத்திற்கு சவாலாக இருக்கின்றது. ஆனால், அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை. இருந்தாலும் அவ்வப்போது சர்வதேச ரீதியாக இருக்கின்ற புலிகளின் வலைப்பின்னல்கனை அறுத்துக்கொட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

கிளிநொச்சியில் இருக்கின்ற தகரங்களையும் முல்லைத்தீவில் இருக்கின்ற தடிகளையும் எடுத்துத்தான் புலிகள் விமானம் செய்து சிறிலங்கா இராணுவ நிலைகளை தாக்குகின்றனர். (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கான சிறந்த உதாரணமாக இதனை எடுத்துக்கொள்ளலாம்) ஆனால் சிறிலங்கா அரசு உக்ரேயினிடமும், ரஷ்யாவிடம், இந்தியாவிடமும் விமானங்களை பெற்றுத்தான் புலிகளின் பகுதிகளில் விமான தாக்குதல்களை நடத்துகின்றனர்.

சிறிலங்கா அரசு முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் 1986 ஆம் ஆண்டு விமான தாக்குதலை நடத்தியபோது வெளிநாட்டு விமானிகள் தான் விமானங்களை செலுத்தியிருந்தனர்.

அதே காலப்பகுதியில் புலிகளின் வாசு, பொன்னம்மான் போன்ற தளபதிகள் தமிழர்களுக்கென்று விமானங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். 1986 ஆம் ஆண்டில் அவர்களின் இந்த கன்னி முயற்சி இடம்பெற்றிருந்தது. (இந்த காலப் பகுதியில் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தது.)

இந்த நிலையில் ஆறாயிரம் தடைவை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது கூறுகின்றார், பெருமைப்படுகின்றார். ஆனால் இந்திய ராடர்களையும் வெளிநாட்டு விமானிகளின் உதவிகளையும் பெற்றுத்தான் சிறிலங்கா படைத்தரப்பு இந்த தாக்குதல்களை நடத்துகின்றது. இது வெளிப்படையானது.

உண்மையில அம்பாந்தோட்டையிலுள்ள தகரத்தையும் மாத்தறையிலுள்ள தடிகளையும் எடுத்து விமானம் ஒன்றை செய்து புலிகளின் பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்துவார்களாயின் அது பாராட்டுக்குரியதுதான். அத்துடன் படைகளுக்கு தேவையான வளங்களையும் படைகளுக்கு வேண்டிய ஆளணிகளையும் சிறிலங்காவின் சிங்கள மண்ணில் இருந்தே சிறிலங்கா அரசு பயன்படுத்துமாக இருந்தால் அது இன்னும்; விசேடமானதும் பாராட்டுக்குரியதுமாக இருக்கும். (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதற்கு சிங்கள படைத்தரப்புக்கு ஏற்புடையதல்ல.)

ஆனால், சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் அவ்வாறு செய்வார்களா? ஜே.ஆர் காலத்திலிருந்து தற்போதைய மஹிந்த ராஜபக்ச வரை புலிகளுக்கு எதிரான போருக்கு வெளிநாட்டு படைகளையும் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளையும்தான் பெறுகின்றனர்.

இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச கூறியதுபோல் புலிகள் ஆறு தடவை மாத்திரம்தான் விமான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்றால் அது ஆறாயிரம் தடவைகள் தாக்கியதற்கு சமன். ஏனெனில் புலிகளின் விமானம் என்பது அவர்களின் சொந்த தயாரிப்பு.

விமானிகளும் தமிழர்கள்தான். இந்தியாவுக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று சிங்கள தேசம் மற்றையது தமிழர் தேசம். இதனை நிறுவியது புலிகளின் வினைத்திறன்தான்.

சொந்த மண்ணில் உள்ள வளங்களை பயன்படுத்தி சிறப்பான போராட்டம் நடத்துகின்ற விடுதலை இயக்கங்களுக்கான அங்கீகாரம் அல்லது அந்த விடுதலை இயக்கங்கள் சார்ந்து நிற்கின்ற இனங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது ஜக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இருந்து வெளிப்படாத ஒன்றாக இருக்கின்றது.

- கலையரசன் -

Comments