ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் துரோகத்தனத்தை கண்டித்து மறியல் போராட்டம்: மதிமுக அறிவிப்பு



ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் துரோகத்தனத்தை கண்டித்து வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய மத்திய அரசு அலுவலகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.10.08) மறியல் போராட்டம் நடத்தவுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு கடந்த 50 ஆண்டு காலமாக கொடிய அடக்குமுறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந்துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழ் மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்துலக தொண்டு நிறுவனங்களைத் தமிழர் பகுதிகளிலிருந்து அச்சுறுத்தி சிங்கள அரசு வெளியேற்றுகிறது.

ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கமிசனும், அனைத்துலக பத்திரிகையாளர்களும் பேரழிவுக்கு ஆளாகும் தமிழர் பகுதிகளுக்குள் செல்வதற்கு சிங்கள அரசு அனுமதிப்பதில்லை.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கொப்ப வேதனைப்படும் தாய்த் தமிழகத்து மக்கள் திரட்டித் தந்த உணவையும், மருந்தையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க இந்திய அரசு கடந்த 18 மாத காலமாக மறுத்து வரும் செயல் ஈவு இரக்கமற்ற கொடுமை என்பதோடு சிங்கள அரசு நடத்தும் இனப் படுகொலைக்குப் பகிரங்கமாக உதவுகின்ற அக்கிரமமும் ஆகும்.

சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு இராணுவ உதவியும், தளவாடங்களும், ராடர்களும் தந்து வந்ததோடு, இந்திய இராணுவப் பொறியாளர்களையும் நிபுணர்களையும் சிறிலங்காவின் இராணுவத் தாக்குதலுக்கு
உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது செப்ரெம்பர் 9 ஆம் நாள் வன்னியில் நடைபெற்ற சண்டையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டுவதோடு தமிழ் இனத்துக்கு இந்திய அரசு செய்யும் இந்த மன்னிக்க முடியாத துரோகத்துக்குக்
கண்டனம் தெரிவிக்கவும், இந்திய அரசு செய்துவரும் இராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சென்னை மாநகரில் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் நாள் முற்பகல் 11:00 மணியளவில் எனது தலைமையில் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டுச் சென்று உத்தமர் காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) அமைந்துள்ள மத்திய அரசின் அலுவலகமான வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

மறியல் போராட்டத்தை கழக அவைத்தலைவர் திரு.மு.கண்ணப்பன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சி.இ. சத்யா, துரை. பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்க இருக்கும் இந்த அறப்போருக்குத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments