ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழ் மக்களின் உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், தங்கள் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2008 வியாழக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிவித்து, அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அன்றைய தினம் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில் 02.10.2008 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொள்வார்.

மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டது போல், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து தங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments