திருமலையில் துரிதமாக நிறைவேறும் அரசின் சிங்கள மயமாக்கல் திட்டங்கள்

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் அச்சமடைந்து பீதியில் உள்ளார்கள்.


கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்குள்ள மூவின மக்களும் ஜனநாயகமாக வாழ்கின்றார்கள் என கொக்கரிக்கும் அரசாங்கத்தின் பரப்புரைக்கு நேர்மாறான நிகழ்வுகளே இடம்பெற்றுவருகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான செயற்பாடுகளை படையினர் இதுவரையில் கைவிடவில்லை. கிழக்கில் விடுதலை புலிகள் இருந்த காலப்பகுதியில் மக்கள் இவ்வாறான துப்பங்களை அனுபவிக்கவில்லை.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கிழக்கு வந்தபின்னர் இராணுவத்தினாலும் துணைக் குழுக்களினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

1985,86 காலப்பகுதியில் இருந்து துணை இராணுவக்குழுக்கள் இருந்தன. இன்று தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கடத்தல்கள், கொலை, கொள்ளைகள், கப்பம் கோரல் போன்ற வன்முறைகளும், அநீதிகளும் குறிப்பிடத்தக்களவு இடம்பெற்றன எனக் கூறலாம். எனினும் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவத்தின் பகுதிகளுக்கு வரும் மக்களை புலி என்ற பார்வை இருந்தது. அன்றைய காலப்பகுதியில் மாற்று இனமான இனவெறி பிடித்த இராணுவத்தினரே பெரும்பாலான அட்டூழியங்களை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் இன அழிப்புக்கு தமிழர்களே துணைபோகின்றனர். . கிழக்கு மக்களை வாழவைப்போம், கிழக்கு மண்ணை மீட்போம் என்றெல்லாம் கூக்குரல் எழுப்பும் தரப்பினருக்கு ஒழுங்கான அரசியல் கொள்கை இல்லை. அவர்களிடையே ஒன்றுமையில்லை, தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் இவர்கள் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும். பொது மக்கள் இன்று பல்வேறு வழிகளிலும், பல்வேறு விதமான முறைகளிலும் வன்முறைகளை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் மிகவும் பின்தள்ளப்படுகின்றது, இருக்கின்ற வளமும் இராணுவத்தினால் அழிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாண ஆட்சிகளை கைப்பற்றி மக்களின் குறைகளை தீர்ப்போம் என்பது வெறு வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும்.

அரசாங்கம் இந்த குழுக்களை வைத்தது தமிழர்களை அழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றித் தரப்போவதில்லை. இவ்வாறு பாதிக்கப்படும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவர்களின் மாவட்டங்களுக்கு செல்லவிடாது குழுக்களின் மூலம் அச்சுறுத்தி மிரட்டி வைத்துள்ளனர்.

ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் மாவட்டங்களில் இருந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளியுலகுக்கு வெளிக்காட்டிவிடுவார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் திட்டம் மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அங்குள்ள அரச அலுவலகம், தனியார் கம்பனிகள், பெரிய வர்த்தக நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் சிங்களவர்கள் தான் உயர் பதவியில் இருக்க வேண்டும். இதனால் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியார் சுட்டுக் கொல்லப்பட்டார், வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அரச ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள், இவ்வாறு தமிழர்களை படுகொலை செய்து தமிழர்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் சிறந்த முறையில் காய்களை நகர்த்துகின்றது.

தற்போதைக்கு வணக்கஸ்தலங்களிலும் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் பிரதம குருக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம்.

இவ்வாறான படுகொலைகள் அனைத்தும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. அப்படியென்றால் படைத்தரப்புக்கு, காவல் துறையினருக்கு தெரியாமல் இடம்பெற வாய்ப்பில்லை. 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என படைத்தரப்பினர் தெரிவித்தனர். இருந்தாலும் அவர்கள் புலனாய்வுப் பிரிவினர், மற்றும் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் சிலர் இருக்கலாம்.

ஆனால் அவர்களினால் ஆலய குருக்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த 18ஆம் திகதி ஆரையம்பதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட யோகநாத் சுரேஸ் வயது 25, கணேசமுதலி சுகந்தன் வயத 16 இரு இளைஞர்கள் கால்நடை விற்பனைக்காக காத்தான்குடி பகுதிக்கு சென்றவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இவர்களை வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் ஆயுதக்குழுக்கள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது முஸ்லிம்களினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இந்த இரு இளைஞர்களுக்கும் என்ன நிகழ்ந்துள்ளது என்பது மர்மமாகவே உள்ளது. இரு இளைஞர்களும் ஆடு விற்பனைக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்த பணத்திற்காகத்தான் இச்சம்வம் இடம்பெற்றதாகவும் மற்றொரு தகவல் தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்து தமிழர் கிராமங்களை சுற்றிவளைத்து தேடுதல்களை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களை கைது செய்து தடுத்து வைக்கும் படையினர் ஏன் முஸ்லிம் பகுதிகளில் உள்ள ஆயுதங்களையும் அதனுடன் தொடர்புடைய தரப்பினரையும் கைது செய்ய முடியவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அத்துடன் இனங்களிடையே நல்லூறவை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்க சபைகளை முதல் அமைச்சர் அண்மையில் உருவாக்கியிருந்தார். இரு இளைஞர்களும் கடத்தப்பட்டமை தொடர்பாக ஏன் இந்த அமைப்பு விரைந்து செயற்படவில்லை என்ற கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

கிழக்கு மாகாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து அசம்பாவிதங்களும் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தான் இடம்பெற்றுவருகின்றது. இந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட தரப்பி னர் மறுத்தால் கிழக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பரப்புரையை கைவிட வேண்டும். அத்துடன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

சிவநடேசன்


Comments