இந்திய மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க. கண்டனப் போராட்டங்கள்

சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமை, அரசியல் உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளன.

காந்தி நினைவு நாளான எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைமையில் (சிபிஐ) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர்களின் அடிப்படை மனித உரிமை, அரசியல் உரிமைகளை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இராணுவ தாக்குதல் மூலம் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி செய்வதை இந்தியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டை நிர்பந்திக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியான எதிர்வரும் புதன்கிழமை (03.10.08) சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியும் ஈழத் தமிழர்களுக்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தா உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவிக்கையில்,

இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது. இதை கண்டித்தும், தீர்வு காண வலியுறுத்தியும் சென்னையில் சிறிலங்கா தூதரகம் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30.09.08) எனது தலைமையில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கு நான் தலைமை தாங்குவேன் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக 1985 ஆம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் கருணாநிதி பேசியவை நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் "தமிழர்களுக்கு ஒரு நாடு; அது தமிழீழ நாடு" என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக ஐந்து உறுதிமொழிகளையும் அவர் அளித்துள்ளார்.

அதில் தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தர பாதுகாப்பு, ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவற மாட்டோம், தமிழினத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயார் என்பதே அவரின் ஐந்து உறுதிமொழிகள். ஆனால் இப்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். மௌனத்தை கலைத்து மத்திய அரசை அவர் வலியுறுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுத்தி உள்ளார்.

இதேவேளையில் நாளை திராவிடகழகத்தின் சார்பாக தொடருந்து நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கி.வீரமணி அறித்துள்ளார் என்பதுடன் இன்று தமிழ்நாடு படைப்பாளிகள் முன்னணி சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments