சிங்களத்தின் சீனக் காதலும் இந்தியாவின் சிங்கள நெருக்கமும்

சமீப காலமாக மகிந்த நிர்வாகத்தினர் சீனாவை நெருங்கி வருவது குறித்து இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களிலும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததை நாமறிவோம். இதன் உச்சக்கட்டமாகத்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.

அதில், இந்தியா ஒரு பிராந்திய சக்தி (Regional power) என்பதை வலியுறுத்திய நாராயணன், எமது வெளியுறவு கொள்கையின் வரம்புக்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இலங்கை தனது இராணுவ தேவைகளுக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய உச்சக் கட்டம் இதுவாகும் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன் பின்னரும் மகிந்த நிர்வாகம் தமது சீனாவுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. இதனை உணர்ந்த இந்தியா வழமைபோல் சிங்களத்தை அரவணைத்து வழிக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது.

நீண்ட காலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியா ஒருவிதமான திரைமறைவு செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தது. இந்தத் திரைமறைவு அணுகுமுறையை (Underground intervention) நாம் தலையிடாக்கொள்கை என அழைத்துக்கொண்டாலும் அடிப்படையில் இதனை நேரடித் தலையீடுகளற்ற காலமென்றே நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஒரு அவதானிப்பாளராகத் தன்னைச் சுருக்கிக்கொண்ட இந்தியா, அமைதிப் பேச்சுக்கான சூழல் படிப்படியாக மீளவும் யுத்த நிலைமைகளை நோக்கி நகரத்தொடங்கிய வேளையிலேயே, இலங்கை விவகாரம் குறித்த தனது அவதானத்தை விரிவுபடுத்திக் கொள்ள முயன்றது.

குறிப்பாக மகிந்த நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை முறித்துக்கொண்ட பின்னர் இலங்கையின் களநிலைமைகளை அவதானிப்பதில் இந்தியா கூடிய கவனத்தைச் செலுத்தியது.

இந்தியாவின் முக்கியமான இராணுவ, அரசியல் ஆய்வுத் தளங்கள் மீளவும் இலங்கை அரசியல் குறித்து கூடுதல் கவனம் கொண்ட ஆய்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கின. இவ்வாறான ஆய்வுகள் பெரும்பாலும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான சக்திகள் குறிப்பாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையின் உள்ளக அரசியலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, இது விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது என்ற வகையிலேயே அமைந்திருந்தன. இது ஒரு வகையில் இந்தியா மீளவும் இலங்கை விவகாரத்தில் வலுவான தலையீட்டைச் செய்வதற்கான முன் தயாரிப்புக்களாகவே இருந்தன எனலாம்.

மகிந்த நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆட்சிப்பரப்பு எல்லைகளைக் கைப்பற்றுதல் என்ற தெளிவான நிகழ்சி நிரலுடன் களமிறங்கிய காலமே, மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேண முற்பட்ட காலமாகவும் இருந்தது.

மீளவும் ஒரு இராணுவ நிகழ்சி நிரலின் கீழ் இலங்கையின் இனப்பிரச்சினையை மகிந்த அணுக முற்படுவதை விமர்சித்த மேற்கு அரசுகள், ஆரம்பத்தில் சில இராஜதந்திர அழுத்தங்களையும் பின்னர் அவ்வாறான அழுத்தங்களுக்கு சிறிலங்கா அரசு செவிசாய்க்க மறுத்ததைத் தொடர்ந்து பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் பிரயோகித்தன.

ஆனால், யுத்த வாதத்தில் தீவிர நாட்டம் கொண்டிருந்த மகிந்த நிர்வாகம் மேற்கின் அழுத்தங்களால் ஏற்பட்ட தொய்வுகளை மேற்குடன் முரண்படும் சக்திகளைக் கொண்டு ஈடுசெய்து கொள்ளும் தந்திரோபாயத்தில் இறங்கியது.

இந்தியாவிடமிருந்து உடனடியான இராணுவத் தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மகிந்த நிர்வாகத்தினர் ஆசியப் பிராந்தியத்தில் பலமான நிலையில் உருப்பெற்று வரும் சீனாவை பொருத்தமான மாற்றாகத் தழுவிக்கொண்டனர்.

இது விடயத்தில் மகிந்த நிர்வாகத்திடம் இரண்டு கணிப்புக்கள் இருந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். ஓன்று மேற்கின் அழுத்தங்களைப் புறந் தள்ளுவதற்கான பலத்தைப் பெறுவது. இரண்டு இந்தியாவை தமது வழிக்குக்கொண்டு வருவது. எனது அவதானத்தில் கிட்டத்தட்ட மேற்படி இரண்டு கணிப்பிலும் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது.

சீனா, சமீப காலங்களில் சிறிலங்கா அரசிற்கு அதிகமான ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதுடன் இலங்கையில் தனது இருப்பை வலுப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வெள்ளிடைமலை. ஜயன் 7 விமானங்கள் ஜே.வை - 11 அடி ஆகாயக் கண்காணிப்பு ராடார்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள் மேலும் பல ஆயுதங்களையும் சீனா, வழங்கியிருக்கின்றது.

மேலும் சீனா, சிறிலங்காவுடன் துப்பாக்கி, குண்டுகள், மோட்டார்கள், மற்றும் வெடிகுண்டுகளை பெறுவதற்காக, 37.6 மில்லியன் டொலர்களுக்கு பொலி டெக்னொலொஜி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.

மேலும் சமீப காலங்களில் சீனா சிறிலங்காவிற்கான பிரதான நிதி வழங்குனராகவும் மாறியுள்ளது. சமீபத்தில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அளவான கடனுதவிகளை சிங்களம் சீனாவிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கடனுதவி இதுவரை காலமும் சிறிலங்காவின் பிரதான நிதி வழங்குனராக தொழிற்பட்டு வந்த ஜப்பானை பிரதியீடு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன் ஹம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்காக, சீனாவின் எக்ஷம் வங்கி ஒரு பி;ல்லியன் டொலர் கடனுதவியை வழங்கியிருப்பதுடன், இரு மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரு அதிவேக சாலையையும் நிர்மாணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

சீனாவின் மேற்படி சிங்கள நெருக்கத்தை, சீனா தனது கடற்படையை விரிவாக்க முயலும் மூலோபாய நகர்வுகளின் பின்புலத்தில் சில அரசியல் அவதானிகள் விளக்குகின்றனர்.

மியன்மார் மற்றும் பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளை பயன்படுத்தி வரும் பரந்தளவிலான மூலோபாய நகர்விற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறிப்பான முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

சீனாவின் இந்த மூலோபாய நகர்வுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது கடற்படை மேலாதிக்கத்தை நிலைப்படுத்தும் இந்தியாவின் குறிக்கோளுடன் நேரடியாக மோதுவதற்கான வாய்ப்புண்டு என்பதே இந்திய ஆய்வாளர்களின் கணிப்பு.

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தியா தனக்கான காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகிறது. அது சமீப காலங்களில் சிங்களத்துடனான நெருக்கத்தை அதிகரித்திருப்பதுடன் கிழக்கில் தனது இருப்பை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் பொருளாதார ரீதியான தலையீடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய இடமான சம்பூரை இராணுவம் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்கு ஒரு அனல் மின்நிலையம் கட்டும் திட்டத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் (ONGC) ஈடுபட்டுள்ளது.

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் விஸ்தரிக்கும் வகையிலான உடன்படிக்கை (Comprehensicve Economic Partnership Agreement - CEPA) ஒன்றிற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இலங்கையின் மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வு ஆராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரத்தையும் இந்தியக் கம்பனியொன்று பெற்றுள்ளது.

மேலும் பிறிதொரு இந்திய கம்பனியான RITES - IRCON கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையில் ரயில் பாதையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சின் இணையத்தை மேற்கோள் காட்டும் செய்தியொன்று இந்திய கூட்டு வணிகத்தில் 50 வீதமும், தெற்காசியாவில் இந்தியாவின் சொத்து முதலீட்டின் 54 வீதமும் இலங்கையில் இருப்பதாக குறிப்பிடுகிறது.

ஒருபுறம் சீனாவால் தனது தேவைகளை ஈடு செய்துகொண்ட சிங்களம், சீனாவைக் காரணம் காட்டி தற்போது சிங்களத்தை அரவணைப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியாவிடமிருந்தும் நன்மையைப் பெற்றுவருகிறது.

சீனா, தனது மூலோபாய நகர்வுகளுக்காக சிங்களத்திற்கு முண்டு கொடுக்கலாம். சீனாவின் மூலோபாய நகர்வுகள் தனது பிராந்திய நலனுக்குக் குறுக்காக வருவதைத் தடுக்க இந்தியா சிங்களத்தை அரவணைக்கலாம்.

ஆனால், இரண்டுமே மகிந்த நிர்வாகத்தினரால் தமிழர் தேசத்திற்கு எதிராக புதுப்பிக்கப்பட்டுள்ள போர் வெறிக்குத் தீனி போடுகிறது என்பதே உண்மை.

சீனா, தமிழர்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்று வாதிடும் அரசியல் ஆய்வாளர்கள் உண்டு. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டிய புள்ளி, சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகின்றதா இல்லையா என்பதுதான்.

ஆனால், இந்தியாவின் அணுகுமுறை இதில் சிக்கலானது. இந்தியா தமிழர் போராட்டம் தொடர்பாக தெளிவான நிகழச்;சி நிரலைக்கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

இந்தியா எப்போதுமே இலங்கையை தனது செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே கருதி வருகிறது. இலங்கையில் தனது பார்வைக்கு அப்பால் எதுவும் நடக்க முடியாது என்ற கணிப்பே அதற்குண்டு.

ஆனால், இலங்கை தொடர்பான தனது அனுபவங்களிலிருந்து செயற்பட வேண்டிய பொறுப்பை இலகுவில் தட்டிக்கழிக்கவும் இந்தியாவால்; முடியாதுள்ளது. அதிலும் குறிப்பாக விரைவில் ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய மத்திய அரசு, தமக்கான ஆதரவுத் தளங்களில் ஒன்றான தமிழகத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பையும் உணர்ந்தே காய்களை நகர்த்தி வருகிறது. இங்கு நமது நிலையில் குறித்துக் கொள்ள வேண்டிய விடயம் என்வென்றால் இந்தியா தனது பிராந்திய நலனுக்காகச் செயற்படுவதல்ல பிரச்சினை.

இந்தியா எப்போதுமே தனது பிராந்திய நலனுக்காக தமிழர் நலன்களைப் பலிகொடுத்து சிங்களத்தை அரவணைத்து நிற்பதுதான் பிரச்சினை. இது விடயத்தில் இலங்கை அரசியலில் தலையீடு செய்யும் வேறு எந்தவொவொரு அன்னிய சக்திகளுக்கும் இல்லாத பாத்திரம் இந்தியாவிற்கு மட்டும் இருக்கிறது.

இந்தியா எத்தனையோ தடைவைகள் பிராந்தியத்தைக் காட்டி அச்சுறுத்திய போதும் இன்றுவரை சிங்களத்தைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.

இந்தியாவின் இவ்வாறான அணுகுமுறைத் தோல்விக்கு முக்கிய காரணம், இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் புலிகளையும் எதிர்நிலையில் மதிப்பிடுவதுதான். அவ்வாறனதொரு பிழையான மதிப்பீட்டில் இந்திய கொள்கை வகுப்பு வேர்கொண்டிருக்கும் வரையில் இந்தியா இலங்கை அரசியல் குறித்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களுக்கு எதிராகவே இருக்கும்.

-தாரகா-

நன்றி: நிலவரம் (12.09.08)

Comments