நடைப்பிணங்களாக வாழும் யாழ் குடாநாட்டு மக்கள்

யாழ் . மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் யுத்த அரக்கனின் கொடுமையினாலும், பொருளாதாரமின்மையினாலும் நாளாந்தம் நடைப் பிணங்களாக மாறி வருகின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளை விட யாழ்.குடாநாட்டின் பொருட்களின் விலைவாசி உயர்வுகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக திகழ்கின்றது.

விலைவாசிகளின் உயர்வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படும் நிலையில் அவற்றையும்விட மோசமான நிலைகளைச் சுமந்து வரும் யாழ்.மாவட்ட மக்கள் பற்றிக் குரல் கொடுக்கவோ, கை கொடுக்கவோ, யாரும் இல்லா அனாதைகள் போல் அங்கலாய்த்துக் கொண்டு இருக் கின்றார்கள்.

தொழில் வாய்ப்பின்மை, வேலைக்கேற்ற கூலியின்மை, வறுமை நிலை, குடும்பப் பொருளாதாரத்தை சுமக்க முடியாமல் திக்குத் திசை தெரியாது தடுமாறும் மக்கள் கூட்டம். அத்தியாவசியப் பொருட்களின் உச்ச விலையேற்றம், நாளாந்த உணவுக்கே மற்றாரின் கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர் களுக்கு உதவி செய்ய யார் முன் வருகின்றார்கள்.

பொருளாதார வளம் குன்றி குடும்பச் சக்கரத்தை நகர்த்த முடியாமல் தள்ளாடும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறிக் கொண்டு வருகின்றது. மீன்பிடித்தடை, பாஸ்கெடுபிடி, குறுகிய கடல் எல்லைக்குள் தொழில் செய்தல் இவை அனைத்துக்கும் அப்பால் கடல் உணவுகளை கடலில் பறிமுதல் செய்தல் போன்ற மனிதத்தன்மையற்ற செயல்களினால் சிக்குண்ட குடும்ப பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் நாளாந்தம் கண்ணீரோடு கரைதிரும்பும் கடற்றொழிலாளர்களின் கண்ணீர் காவிய இது. யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாகவும், மீன்பிடித் தொழிலைச் செய்ய ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நடைமுறை காரணமாக அத்தொழிலை விட்டுவிட்டு மூட்டைகள் சுமக்கும் வேலைகளுக்கு மாறிவருகின்றார்க ள். இது அவர்களது நிரந்தரத் தொழிலாக மாறி விடுமோ என்ற அச்சம் அவர்களுக்குண்டு.

யாழ்.குடாக்கடல் நீரேரிப் பகுதிகளில் கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இற்றை வரைக்கும் சிறகு வலையைப் பயன்படுத்தி தொழில் செய்வதற்கு படைத்தரப்பினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

சிறகுவலைத் தொழிலில் ஈடுபட்ட பெருமளவான கடற்றொழிலாளர் குடும்பங்கள் தொடர்ந்தும் பதிக்கப்பட்டு வருகின்றது. சிறகுவலைத் தொழிலில் ஈடுபட்ட 10,000 கடற்றொழிலாளர்கள் இன்று அத்தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் தமது பாரம்பரியத் தொழிலை விட்டு கூலித் தொழிலாளர்களாக காங்கேசன் துறைமுகத்திலும், மயிலிட்டித் துறைமுகத்திலும் கப்பலில் வரும் சாமான்களை இறக்கி, ஏற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்தக் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றன. அதிகாலை 5.30 மணிக்கு வீட்டைவிட்டு மயிலிட்டித் துறைமுகத்திற்கு மூட்டை தூக்கும் வேலையை முடித்துக் கொண்டு ஒரு கிழமைக்குப் பின்னர் வரும் இவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பின்பே வேலை செய்ததற்கான கூலி யாழ்.செயலக அதிகாரிகளால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது தங்க நகைகளை வங்கிகளில் ஈடு வைத்து விட்டு அதில் வரும் பணத்தில் தங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கு என்று செலவிடுகின்றார்கள், நாளாந்த உணவுகளுக்காகவும் செலவிடுகின்றார்கள்.

வங்கியில் ஈடு வைத்த தங்க நகைகளை மீளப்பெற்றுக்கொள்ள வழியில்லாததால் அத் தங்க நகைகள் வங்கியில் ஏல விற்பனையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கடற்றொழிலாளர்களது குடும்பங்களின் காதுகளை கூட தோடு இல்லாத நிலையில், குடும்பப் பெண்கள் தற்போது இருந்து வருகின்றார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறிவருகின்றது.

அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள், அரச அதிகாரிகள் இவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களது எதிர்காலம் பற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!!

-ஜெ.டானியல்-

Comments