இந்தியாவின் சமீபகால அணுகுமுறையை விளங்கிக் கொள்ளல்?

இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியா சென்றிருக்கிறார்.

சார்க் மகாநாட்டை முன்னிட்டு சிறிலங்கா வந்திருந்த உயர்மட்டக் குழு சம்பந்தரை சந்தித்து, இந்தியாவிற்கு தமிழர் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி அவரை மகிழ்வித்திருந்தது.

தற்போது மீண்டும் அவ்வாறானதொரு மகிழ்விப்பிற்காக சம்பந்தரை இந்தியா அழைத்திருக்கலாம்.

நீண்டகாலம் தனது சொந்தத் தொகுதியான திருகோணமலைக்கு செல்லாதிருந்த சம்பந்தர் சமீபத்தில் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலைக்குச் சென்று கந்தசாமியை தரிசித்துவிட்டு தற்போது இந்தியாவிலுள்ள சில நாராயணன்களை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.

அவர் என்ன செய்தி கொண்டு வரப் போகின்றார் என்ற ஆவல் விடயமறிந்த எந்தவொரு தமிழ்க் குடிமகனிடமும் இருக்கப்போவதில்லை.

இந்தியாவின் தலையீடு குறித்து எழுதுவதில் உள்ள சிக்கலான விடயம் என்னவென்றால், அவ்வாறான எழுத்துக்களில் மீண்டும், மீண்டும் ஒரே விடயம் உரையாடப்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்துவதுதான்.

இது ஒரு வகையில் சாதாரண வாசகர்களுக்கு ஒருவிதமான சலிப்பைக்கூடக் கொடுக்கக்கூடும். ஏலவே இந்தியா பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். அதன் போதெல்லாம் இந்த சிக்கலை நான் உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் இதில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த இந்தியாவின் அணுகுமுறை ஒரே மாதிரி இருப்பதால் இந்தியா பற்றிய நமது அவதானங்களும் ஒரே மாதிரித்தான் இருக்க முடியும்.

இங்கு காலமும், பங்குபற்றும் நபர்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, அரசியல் அணுகுமுறையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இது ஒருவகையில் காலத்திற்கு காலம் ஆட்சியில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டிக்கும் தெற்கின் சிங்களத் தலைமைக்கு ஒப்பானது.

சமீப காலமாக குறிப்பாக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்நகர்ந்ததைத் தொடர்ந்து, இந்தியா என்ன வகையான அணுகுமுறைகளை கைக்கொண்டு வருகிறது என்று பார்ப்போம்.

ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் நாம் அக்கறையுடன் இருக்கிறோம், யுத்தம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகாது என்றெல்லாம் வெளிப்படையாக கூறிவரும் இந்தியா, மறுபுறம் கிழக்கில் தனது தலையீடுகளை அதிகரிப்பதற்கான காய்களையும் நகர்த்தி வருகிறது.

இது எரியும் வீட்டில் குளிர்காய்வதற்கு ஒப்பானது. இதில் இந்தியா மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது என்பதில் வேறு பேச்சுக்கு இடமில்லை.

இந்தியா, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனது பிராந்திய நலன் என்ற நோக்கில் அணுகியதே ஒழிய, ஈழத் தமிழர்களின் நலன் குறித்து எந்தவிதமான கரிசனையும் இந்தியாவிடம் இருக்கவில்லை.

1987 இலிருந்து இன்றுவரை இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை ஒரே கோட்டில்தான் நகர்ந்து செல்கிறது என்பதற்கு இது தக்க சான்றாகும். ஆனாலும் இந்தியா ஏன் அவ்வப்போது ஈழத் தமிழர் நலன் குறித்து அக்கறைப்படுவது போன்று காட்டிக்கொள்கிறது என்று ஒருவர் கேட்கலாம்.

இந்தியா எப்போதும் தனது தலையீட்டிற்கு பக்கபலமானதொரு துணைக்காரணியாக தமிழகத்தையே பயன்படுத்தி வந்திருக்கிறது.

எனவே தமிழகத்தை தொடர்ந்தும் ஒரு துணைக்காரணியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை நன்கு புரிந்து வைத்திருக்கும் இந்திய கொள்கை வகுப்பினர் ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழகத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும் வகையிலேயே தமது காய்களை நகர்த்தி வருகின்றனர்.

ஈழத் தமிழர் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள ஆதரவினை எடை போட்டே இந்திய மத்திய அரசு இலங்கை விவகாரத்தை கையாண்டு வருகிறது.

சமீப காலமாக இந்தியா சிறிலங்கா தொடர்பில் ஒரு விதமான தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பது போன்றே காட்டிவந்தது. இதில் ஒருவகையான தமிழகத்தை திருப்திப்படுத்தும் அணுகுமுறையும் ஒழிந்திருந்தது.

ஆனால் இந்திய மத்திய அரசிடம் தமிழகத்தை ஆளும் தி.மு.க. கட்சியினரின் குறிப்பாக கருணாநிதியின் ஈழத் தமிழர் ஆதரவின் எல்லை குறித்தும் தெளிவான கணிப்பிருக்க வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்.

தற்போது கருணாநிதியின் ஈழத் தமிழர் ஆதரவு என்பது இந்திய மத்திய அரசின் கொள்கை நெறிக்கு ஆட்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

ஏலவே நாராயணன்களிடமிருந்து பாடம் படித்த கருணாநிதி தன்னை எப்போதும் இந்திய மத்திய அரசின் கொள்கை நெறிக்குள் அடங்கும் ஒருவராகக் காட்டிக்கொள்வதில் அக்கறையுடையவராகவும் இருக்கின்றார்.

இவை குறித்து துல்லியமான மதிப்பீட்டினைக் கொண்டிருக்கும் இந்தியா, ஈழத் தமிழர்களை இந்திய எல்லைக்குள் உள்வாங்குவதை தொடர்ந்தும் அனுமதிப்பதன் மூலம் தனது தந்திரோபாயங்களை வகுக்கின்றது.

இந்திய மத்திய அரசு தமிழகத்தை திருப்திப்படுத்தும் தந்திரோபாயத்தை கைக்கொள்ளும் அதேவேளை, கூடவே கட்டுப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களையும் கைக்கொண்டு வருகிறது.

கருணாநிதிக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையிலேயே இந்திய வெளியக புலனாய்வுத்துறையான றோ, புலிகள் கரையோரப்பகுதிகளினூடாக ஊடுருவுகின்றனர், தமிழகத்திலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன போன்றவாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர் தொடர்பில் சில இறுக்கமான நடவடிக்கைளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கருணாநிதி மீது சுமத்தப்படுகின்றது.

இவ்வாறான பின்புலத்தில்தான் இந்தியா கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட சில பின்னடைவுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டிவருகின்றது.

மகிந்த நிர்வாகம் இந்தியாவின் பிராந்திய நலனுக்கு குந்தமாக சீனா மற்றும் பாக்கிஸ்தானுடன் நெருங்கி வருவதை தடுப்பதே இந்தியாவின் சமகால தலையீட்டிற்கு காரணமாகக் சொல்லப்படுகிறது.

எப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசியல் குறித்து பேச விழைகிறதோ அப்போதெல்லாம் இந்தியா மேற்படி பழைய பல்லவியைத்தான் பாடுவதுண்டு.

இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிரான சக்திகள் இலங்கை அரசியலில் குறுக்கீடு செய்கின்றனர் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு என்பதுதான் இந்தியா கடந்த இருதசாப்தங்களாக சொல்லிவரும் வாதம். இலங்கை தொடர்பான இந்திய கொள்கை வகுப்பே இந்த வாதத்தில்தான் நிலைகொண்டிருகிறது.

ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தனது பிராந்திய நலனுக்கு எதிராக சிறிலங்கா நகர்வதை தடுப்பதே தனது தலையீட்டிற்கான காரணமாகச் சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஒருபோதுமே சிங்களத்தை கட்டுபடுத்துவதன் மூலம் தனது பிராந்திய அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விழையவில்லை.

மாறாக எப்போதும் சிங்களத்தை திருப்திப்படுத்துவதன் மூலமே அதனை சாதிக்க விழைகிறது.

தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோம் என்று தமிழகத்தை திருப்திப்படுத்தும் வகையில் கூறிவந்த இந்தியா, தற்போது சீனா மற்றும் பாகிஸ்தானைக் காரணம் காட்டி சிங்களத்தை பலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைளுக்கு உதவி வருகிறது.

2008 - 2009 காலப்பகுதியில் 500 இராணுவத்திற்கு மீசோராமிலுள்ள இராணுவப் பள்ளியில் பயிற்சி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதே போன்று மகராஸ்ராவின் தேவ்லாளி என்னும் இடத்தில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் உளவுத்துறை கூட்டு நடவடிக்கைளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது.

இது கொழும்பின் சிங்களத் தலைமையை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது பிராந்திய அதிகாரத்தை உறுதிப்டுத்திக்கொள்ள இந்தியா முயல்கின்றது என்பதற்கான சமீபத்தைய சான்றுகளாகும். மறுபுறமாக கிழக்கில் தனது இருப்பை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் பொருளாதார ரீதியான தலையீடுகளையும் செய்துவருகின்றது.

எனவே இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து நோக்கும் போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்தியா என்ன செய்யும் என்பதை விட அது என்னவெல்லாம் செய்யாது என்பதுதான்.

இந்திய அனுபவத்தில் நாம் திரும்பத் திரும்ப கண்டுவரும் உண்மை, இந்தியா ஒருபோதும் ஈழத் தமிழர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது பிராந்திய நலனை பேணிக் கொள்ளாது, மாறாக சிங்களத் தலைமைகளை திருப்திப்படுத்துவதன் மூலமே அது தனது பிராந்திய நலனை உறுதிப்படுத்திக் கொள்ள முயலும்.

அப்படி இந்தியா முயலும் போதெல்லாம் அதன் நடவடிக்கைகள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்திருக்கும்.

எனவே இந்தியாவிற்கு அடிக்கடி காவடி எடுப்பதாலோ அல்லது அங்கு நாராயணன்களை தரிசிப்பதாலோ நிலைமைகள் மாறப்போவதில்லை. இது நமது அரசியல்வாதிகளுக்கு விளங்குகிறதோ இல்லையோ, மக்களுக்கு விளங்கினால் சரி.

-தாரகா-

தினக்குரல் (07.09.08)

Comments