போக்கு மாற்றம்

மாவிலாற்றில் தொடங்கி இரு வருடங்களுக்கும் மேலாக நீடித்துச்செல்லும் நாலாம் கட்ட ஈழப்போரின் பிந்திய நிலைவரப்படி, இரு தரப்பும் கைவசம் வைத்துள்ள தேர்வுகளின் அடிப்படையில் போரின் போக்கை ஆராயும்போது, புதிய பரிமாணங்கள் தென்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்காக நிறுத்தப்பட்ட படைகளை 'எக்காரணம் கொண்டும் அகற்றமாட்டோம்" என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா பலமுறை சத்திய வாக்குத் தந்திருந்தபோதும், அங்கே அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள், வேறுவிதமான யதார்த்தத்தைச் சொல்கின்றன.

வன்னிப்போர் அரங்கிலே, கால அட்டவணை மற்றும் படைய வளங்களின் அடிப்படையில் கொழும்பின் கையை மீறிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சமர், பூநகரி அல்லது ஆனையிறவு போன்ற ஏதாவதொரு முடிவுப் புள்ளியை எட்டுவதற்கான கால எல்லையைத் திட்டவட்டமாக நிர்ணயிக்க முடியாத ஒரு படைத்துறைச் சூனிய வெளியில் பயணிக்கிறது.

இன்னமும் முடிந்துவிடாத ஒரு போரில், கைப்பற்றி வைத்திருக்கும் தரைப்பரப்பு பெரிதான படைய அனுகூலம் எதையும் தந்துவிடாத நிலையில், அது சவுகரியமா சங்கடமா என்ற கேள்வி சிங்களப் படைத் தலைமையை அரிக்கத் தொடங்கிவிட்டது.

கிளிநொச்சியை எட்டிப்பிடிப்பதற்கான ஜெயசிக்குறு, ஒட்டுசுட்டான், பள்ளமடு என்று விரியவேண்டி நேர்ந்ததையும் ஆய்வாளர்கள் ஒப்பிடுகிறார்கள்.

இந்நிலையில், தரைப்பரப்பிற்கு அப்பால் சிங்களப்படைகள் அடைந்துள்ள பேறுகள் எவை, விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலை அவை எந்த அளவிற்குப் பாதித்திருக்கின்றன என்ற கேள்விகள் முதன்மை யானவை.

முதலாவதாக, கிழக்கில் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து நிகழ்ந்துவரும் சம்பவங்கள், அங்கே போதியளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற படைத்தரப்பு உத்தரவாதத்தைப் பங்கப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற கிளைமோர் மற்றும் சூட்டுச் சம்பவங்களில் மட்டும் குறைந்தது இருபத்தி நான்கு படையினர் கொல்லப்பட்டு அல்லது படுகாயப்பட்டு களத்தில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் (இரண்டுபேர்), வலிந்த தாக்குதல் (நான்கு பேர்), குறிச்சூட்டுத் தாக்குதல் (ஒருவர்) மற்றும் பொறிவெடியில் (ஒருவர்) படையினர் எண்மர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் காயப்பட்டிருக்கிறார்கள். ஆயுத தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென்னிலங்கை ஊடகங்களும் உறுதிப்படுத்தும் இந்தப் புள்ளி விபரங்கள் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் செயல் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டிநிற்பதோடு, அங்கே போதிய படைபலம் நிறுத்தப்பட்டுள்ளதான அரசாங்கத்தின் உத்தரவாதத்தைக் கேள்விக்குரியதாக்கியுள்ளன.

ஆயினும், கிழக்கு பற்றிய சிங்களப் படைத் துறையின் கவலைகள் அத்தோடு முடிந்து விடவில்லை.

கடந்த முப்பதாம் திகதி மணலாறு-திருமலை எல்லையருகே திருமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அங்குள்ள படையினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

பதவியா குளத்திற்குத் தெற்காக அமைந்திருக்கும் பெருவெளிப் பகுதியில் அன்று காலையில் நிகழ்ந்த மோதல் ஒன்றைத் தொடர்ந்து, பெருந்தொகையான விடுதலைப் புலிகள் வன்னியில் இருந்து கிழக்கிற்கு ஊடுருவிச் செல்வதாகவும், வன்னியில் நிகழும் போரைத் திசை திருப்பும் பாரிய தாக்குதல் ஒன்றிற்கான நகர்வே அது என்றும், அடுத்த கட்டமாக அவர்கள் எங்கும் தாக்கலாம் என்றும் எழுந்த பீதி, சிறிலங்காப் படைகளின் திருமலைக் கட்டளைப் பணியகத்தைப் பிடித்து உலுப்பியது.

26 ஆம் திகதிய வான்புலிகளின் தாக்குதல், இந்த அணியின் தாக்குதலுக்கு ஆதரவு தருவதற்கான ஒத்திகையே என்ற திசையிலும் வதந்திகள் எழும்பி, கொழும்பில் இருக்கும் படைத்துறை நடவடிக்கைச் செயலகத்தையும் பற்றிக்கொண்டு ஆடின.

பதற்றத்தில் உறைந்துபோன கொழும்புக் கட்டளையகம், மேற்குறித்த தகவல்களைச் சனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் உடனடியாக அறிவித்ததாகவும், அதையடுத்து, வன்னி முன்னரங்க நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்புப் படையின் ஒரு தொகுதியை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வதன்படி, 70 தொடக்கம் 100 வரையான சிறப்புப் படையினர் அவசர அவசரமாக வன்னியில் இருந்து திருமலைக்கு ஏற்றிப் பறிக்கப்பட்டனர். மூன்று அல்லது நான்கு நாள் நடவடிக்கையில் அவர்கள் இறக்கப்பட்டார்கள்.

பீதிக்குக் காரணமாக அமைந்த அந்தச் சம்பவத்தில் விடுதலைப் புலிகளும் இழப்பைச் சந்தித்திருந்தார்கள். சிறிலங்காவின் தரப்பில், ஊர்காவற்படையினர் ஒருவர், படையக் காவற்றுறையினர் ஒருவர் மற்றும் சிறப்புப் படையினர் ஒருவரும் கொல்லப்பட்டதை சிறிலங்காப் படைத்தரப்பு ஏற்றுள்ளது.

இழப்புக்கள் அதைவிடச் சற்று அதிகமென்றும், அதிலே லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டாலும், அத்தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை.

மேற்குறித்த நிகழ்வுகள், பெருமெடுப்புத் தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் செய்யும் ஏதுநிலை கிழக்கில் இருப்பதையும், அதைத் தடுப்பதற்குத் தேவையான படைப்பலம் அங்கே கைவசம் இல்லை என்பதையும் நிரூபிப்பதாக படைய அவதானிகள் சொல்கிறார்கள்.

இரண்டாவது, வான் புலிகள் திருமலைக் கடற்படைத் தளத்தின் மீது செய்த தாக்குதல். 25 கிலோ எடை கொண்ட நான்கு குண்டுகள் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய சாதனையை அந்தத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. அதில் கொல்லப்பட்ட கடற்படையினர் 10 பேர் என்றும் காயப்பட்டவர்கள் 40 பேர் என்றும் கொழும்பு ஊடகங்கள் இப்போது உறுதிப்படுத்துகின்றன.

அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதைவிட அதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி படைத்துறையையும் அரசாங்கத்தையும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகத் தென்னிலங்கையில் இருந்து தகவல்கள் வருகின்றன.

இரண்டாம் உலகப் போர்கால வடிவத்தில் இருக்கும் அந்த விமானங்களை நட்சத்திரப் போர்காலத் தொழிநுட்பம் மற்றும் ஆலோசனைகளைக் கொண்டுள்ள உங்களால் முறியடிக்க முடியவில்லையே என்ற கேள்வியை பன்னாட்டு ஆய்வாளர்கள் எழுப்பியிருப்பது முதலாவது சங்கடம்.

சிறிய ரகமாயினும், தாக்குதல் விமானங்கள் (குண்டுகளின் எடைக்கு ஏற்ப நீண்ட ஓடுபாதை தேவை என்ற தொழிநுட்ப அடிப்படையில்) மேலெழுந்து வந்து தாக்கிவிட்டுப் பத்திரமாகத் தரையிறங்கிய ஓடுபாதையை உங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

வான்படையொன்றை இயக்கும் அளவிற்கு பரந்துபட்ட நிலப்பரப்பை விடுதலைப் புலிகள் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்லவேயில்லையே என்று இராசதந்திர மட்டத்தில் கேட்கப்பட்டது இரண்டாவது சங்கடம்.

வான்புலிகளின் ஆரம்பகாலத் தாக்குதல்களின் போது, நவீன கருவிகளால் முறியடிப்போம் என்றே ஆறுதல் சொல்லப்பட்டது. இம்முறை, அப்படித் தேற்றுவதற்குக் கைவசம் புதிய சாட்டுக்கள் இல்லை என்பதாலும், அடுத்த தாக்குதலைக் கையாள்வதற்கான தெளிவான திட்டம் கீழ்மட்ட வீரர்களைச் சென்று சேராததாலும், அவர்களின் உடனடிப் பாதுகாப்புக் குறித்த கேள்விகள் மூன்றாவது சங்கடமாக எழுந்துள்ளன.

நாட்டில் உள்ள அனைத்துப் படைத் தங்ககங்களையும் தரைக்கீழ் அகழிகளுக்குள் அமைப்பது சாத்தியம் இல்லை என்பதால், பாரிய எச்சரிக்கைச் சங்குகளை முழங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதல் போர் பற்றிய எதிர்பார்ப்புக்களை மறுவளமாக்கிவிடலாம் என்று ~லக்பிம| படைய ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார். இதைத் தானே நாராயணனும் சொன்னார் என்றும் சிலர் அங்கலாய்த்துள்ளார்கள்.

இதைவிட, வன்னிப் போர்க்களத்தின் தற்போதைய இலக்காக பூநகரியே உள்ளதென்பது வெளிப்படை. அதை அண்மிப்பதற்கான தீவிர முனைகளாக அக்கராயன், வன்னேரி, நாய்ச்சிக்குடா ஆகிய இடங்கள் செல்லும் வழித்தடத்தில் தீவிர சண்டைகள் நிகழ்கின்றன.

கடந்த 31 ஆம் திகதியன்று மட்டும் அக்கராயன் குளக்கட்டுப் பகுதியை அண்மிப்பதற்காக ஆறு தடைவைகள் கடும் முயற்சிகள் செய்ததாகவும் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன என்று சிறிலங்கா படைத்துறைக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவிர, 1 ஆம் திகதி நாச்சிக்குடாவிலும் 2 ஆம் திகதி வன்னேரி, அக்கராயனுக்கு இடைப்பட்ட ஒன்பதாம் கட்டையிலும் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய முடியடிப்புக்களில் குறைந்தது 120 படையினர் கொல்லப்பட்டோ அல்லது படுகாயப்பட்டோ களமுனையில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் செய்திகள் கிடைத்துள்ளன.

இவை, வன்னிப்போரின் போக்கு மாற்றத்தை முன்மொழிவதாகப் பார்க்கப்படலாம். பூநகரியை எட்டும் வரை வன்னிப் பெருஞ் சமருக்கான திடமான அனுகூலம் எதுவும் சிறிலங்காப் படையினருக்கு இல்லை என்ற படைய யதார்த்தத்தில், அதை மறுப்பதற்கான விடுதலைப் புலிகளின் பதில் நகர்வுகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் படைய வட்டகைகளில் அலசப்படுகின்றன.

அந்த நகர்வை அரண்வரிகளில் மறிப்பதற்கு அல்லது தேவையான காலப்பகுதிவரை தாக்குப்பிடிப்பதற்கு வேண்டிய வலுவளம் விடுதலைப் புலிகளிடம் தற்போது இருப்பதாகவே கருதப்படுகிறது. பழைய போராளிகளின் வருகை இதில் முக்கிய பங்கு பெறுவதான கருத்தும் உண்டு.

கிழக்கை நிலை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தமும், அதைச் செய்வதற்கு ஆட்பற்றாக்குறை உள்ள அதேவேளை, வன்னியில் தொடர்ந்து ஏற்படும் ஆள் இழப்பை இட்டுக் கட்டுவதற்கு சிறிலங்கா படைத்துறை மல்லுக்கட்டுகிறது.

மறுபுறத்தில், வன்னிச் சமரில் போரின் போக்கை மெல்ல மெல்லக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விடுதலைப் புலிகள், தாயகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் சிறிலங்கா படைகளுக்குப் புதிய சவால் மேடைகளைப்போடும் ஆற்றலையும், ~மூலோபாயப்| படை நகர்வொன்றைச் செய்யும் ஏதுநிலையையும் தம்வசம் வைத்துள்ளார்கள்.

பன்னாட்டு ஆதரவுடனும் ஒடுக்குமுறை மனப்பாங்குடனும் செய்யப்படும் படையெடுப்பை, சொந்தக் காலில் நிற்கும் சிறுபான்மை இனமொன்று எதிர்கொள்வதற்கான மிகச்சரியான உபாயம் இதுவேயென்ற முடிவை ஆய்வாளர்கள் நெருங்கி வருகிறார்கள்.

- சேனாதி -

நன்றி: வெள்ளிநாதம் (05.09.08)

Comments