சிறுபான்மையினர் என்றால் அடக்கப்பட வேண்டியவர்களா?



இந்த நாடு சிங்களவருக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஆனால் இங்கு சிறுபான்மைச் சமூகங்களும் உள்ளன. அவர்களையும் எமது மக்களைப் போன்றே நடத்துகிறோம்.

நாம் நாட்டின் பெரும்பான்மையினர். சிங்கள மக்கள் 75 சத வீதத்தினர். அதனால் எமது நாட்டைக் கைவிடமாட்டோம். நாம் வலிமையான தேசம். அவர்கள் எம்முடன் வாழ முடியும். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது.

தாயகத்தை விரும்பும் தமிழர்கள் அதற்கான இடமாக இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களச் சமூகம், சிறுபான்மையினரான தமிழர்கள் நாட்டைத் துண்டாட ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள்.

இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்திருப்பவர் இந்த நாட்டின் அரசியல்வாதி அல்லர்.

தமிழ் மக்களை அடக்கி அவர்களின் பூர்வீகத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்தியலில் மூழ்கிய இனவாதப் புத்திஜீவியுமல்லர். நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவே இந்தளவு இனவாத விஷ யத்தையும் கக்கி இருக்கிறார்.

கனடாவில் இருந்து வெளிவரும் ""நாஷனல் போஸ்ட்'' என்ற பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரூவேர்ட் பெல் என்பவருக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் சரத் பொன் சேகா இவ்வாறு அவரது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

நினைவுக்கு எட்டிய வரையில் கே.எம்.பி.இராஜரத்தினா, பேராசிரியர் எவ்.ஆர்.ஜெயசூரியா, மெத்தானந்தா, சிறில் மத்தியு மற்றும் பல இனவாத, தமிழினத் துரோக அரசியல் வாதிகளின் பட்டியலில் இப்போது படைத் தளபதி ஒருவரும் சேர்ந்திருக்கிறார் எனக் கொள்ளலாம்.

ஏற்கனவே இலங்கையின் படைத் தளபதிகளாக இருந்த வேறு உயர் அதிகாரிகளும் இனவாதம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பது எமது கடமை, விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டே தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்களைக் கொன்று, இன ஒழிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.

இப்போதைய இராணுவத் தளபதி ஒரு படி முன்னேறி, அரசியல்வாதிகள் போன்று, இலங்கை நாடு தமிழர்களுக் குச் சொந்தமானது அல்ல. அவர்கள் வெறும் சிறுபான்மை யினர். சிங்கள மக்கள் கிள்ளித் தெளிக்கும் அரசியல் பிச்சையைப் பெற்றுக் கொண்டு வாய்மூடிக் கொண்டிருக்க வேண்டியவர்கள் என்ற தொனியில் கருத்து வெளிப் படுத்தியிருக்கிறார்.

இந்தவகை சார்ந்த எல்லோருமே

தமிழர்களுக்கு ஒரு பூர்வீகம் உண்டு. அவர்கள் தனி ஆட்சி நடத்தியவர்கள். தம்மைத் தாமே ஆண்டவர்கள். அவர்களுக்கெனச் சொந்தப் பூமி இருந்தது. மொழி, கலை, கலாசாரங்கள், பண்பாடுகள், நாகரிகங்களைக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் இப்போது பெரும்பான்மையாக வாழும் பூமி ஆண்டாண்டு காலமாக அவர்களது மூதாதையாளர்களால் ஆளப்பட்ட பூமி என்பதை மறைத்து

இலங்கை என்ற நாட்டிற்குப் பெரும்பான்மையினரான சிங்கள மக்களே சொந்தக்காரர்; மற்றவர்கள் எல்லோரும் இரண்டாம் தரத்தினர்; அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள். அடங்கி வாழவேண்டியவர்கள் என்ற கருத்தியல் கோட்பாட்டை, வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த உடனேயே இனவாத புத்திஜீவிகளும், அரசியல் வாதிகளும் வகுத்துக் கொண்டனர்.

தங்களது கருத்தியல் கோட்பாட்டை உண்மைப் படுத் தும் நோக்குடன் சிங்கள அரசியல், தலைவர்கள் முதலில் ஏவிய அம்பு தமிழர் பிரதேசங்களைக் கபளீகரம் செய்யும் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் சொந்த மண்ணில் கால் பதித்தவர்கள் அடுத்து அவர்களின் மொழி மீது கை வைத்தார்கள்.
டி.எஸ். சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர்ப்பட்டியல் நீழும்.

இந்த அட்டவணை நீண்டு தொடர்ந்து கொண்டிருக் கிறது. தமிழர்களைக் கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு இரவோடு இரவாக அவர்களது விருப்பத்துக்கு மாறாக வல்வந்தமாகக் குடிபெயர்த்தமை மிகச் சமீபகால இனக்கு ரோத நடவடிக்கை.

இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் வாழும் தமிழர்களைப் பாதுகாப்புக் காரணம் எனக் கூறி சந்தேகப் பிரகிருதிகள் என்ற கண்கொண்டு பார்த்ததும் பதிந்தமையும் இனஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய கொடுமை நிறைந்த அத்தியாயமே.

இந்தவகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிந்திய கருத்து சிங்கள மக்களுக்கு மட்டும்தான் இலங்கை சொந்தம் என்ற கோஷம் பல விடயங்களை, நோக்கங்களை பூடகமாகச் சொல்வதாகவே அமைகிறது.

தமிழினத்தைச் கொச்சைப்படுத்தும் அவர்கள் தமக் குள்ள பிரிக்கமுடியாத பிறப்புரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்ற கருத்தையே குறுகிய இனவாதத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இலங்கையில் சிங்களர் தேசியம், தமிழர் தேசியம் என் பன இருந்தன. இரண்டு தேசிய இனங்கள் வாழ்ந்தன, வாழ்கின்றன என்பதைக் கரிபூசி முற்றாக அழித்துவிடும் முயற்சியாகவே அமைகிறது.

இலங்கையில் சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழர்களுக்கும் உண்டு என்ற வெளிப்படையான உண் மையை அழித்துவிடும் கெட்ட நோக்கமுடைய முயற்சியாகும்.

இப்போது முற்றிப்போய் போராக மாறியுள்ள இன நெருக்கடிக்கான இனப்பிரச்சினைக்கான மூலகாரண காரியங்களைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று உணர்ந்து கொள்ளாதவர்களாக எவர் கருத்துக் கூறினும் எந்த வகையிலும் பொருத்தமற்றது.

கிளிநொச்சியை வன்னியை படை நடவடிக்கைகள் மூலம் இன்னும் சில தினங்களில் கைப்பற்றப்போவதாக இராணுவத் தளபதியும், ஜனாதிபதியும், அரசாங்க அமைச்சர்களும் நாளொரு தகவலும் பொழுதொரு எதிர்வு கூறலாகவும் சொல்லிக்கொண்டிருக்கும் இவ் வேளையில்

சிங்கள மக்களுக்கு மட்டுமே இலங்கை சொந்தம் என்ற கருத்து தமிழர் இன அழிப்புக்கான முன்னறிவித்தலாக இருக்குமோ என்ற சந்தேகத்தைத் தமிழர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.


Comments