"போர் தான் தீர்வு என்றால் நாங்களும் தயார்" - இலங்கை எம்.பி பேட்டி



குண்டு மழை பொழியும் போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்திருக்கிறது இலங்கையில். போரின் விளைவாக சொந்த பந்தங்கள், வீடு வாசல், உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். சலிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் முன்னேறி வரும் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லாவி என்ற கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாக மார்தட்டுகிறது.


ஆனால், ராணுவத்தின் முயற்சியை முறியடித்து இலங்கை வீரர்கள் 75 பேரைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர், விடுதலைப் புலிகள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது? ஈழப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா என்பன உள்ளிட்ட நம் சந்தேகங்களுக்கு அண்மையில் சென்னை வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை யாழ்ப்பாண மாவட்டஎம்.பி. ஸ்ரீகாந்தாவிடம் பேசினோம்.

கடந்த கால் நூற்றாண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் பிரச்னை தீரவில்லையே, ஏன்?

``தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதம் தொடர்கிறது. இடையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, சமாதானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீலங்கா அரசின் நேர்மையின்மையின் காரணமாக, அந்த ஒப்பந்தம் தோல்வி அடைந்து விட்டது. தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில், இப்போதும்கூட இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில்,நியாயமான அரசியல் தீர்வுக்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

இலங்கையைப் பிரிக்காமல் ஒரே நாட்டுக்குள் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயப்பூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண சிங்கள அரசு முன்வருமென்றால், சமாதான முறையில் அதை எட்ட முடியும். அதற்கு சிங்கள அரசிடம் மனமாற்றம் வேண்டும். அந்த மனமாற்றத்தை இதுவரையில் காணமுடியவில்லை.

யுத்தத்தின் ஊடாக ராணுவத் தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிக்கவே ஸ்ரீலங்கா அரசு முயல்கிறது. இதனால் போதிய உணவு, மருந்தில்லாமல் தமிழ் மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். தமக்கென ஒரு சுயாட்சியை, சொந்த அரசினை இலங்கை ஒரே நாடு என்ற வரையறைக்குள் ஒரே நாளில் தீர்த்துக் கொள்ள முடியும். ஸ்ரீலங்காவில் உள்ள ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்குள் இந்தத் தீர்வை எட்டமுடியாது. அரசியல் அதிகாரம் அனைத்தும் சிங்கள மத்திய அரசிடம் மையம் கொண்டுள்ளது. அதிகாரங்களை ஓரளவுக்கு மாகாணங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதன் மூலம் திருப்திப்படுத்த முடியாது. பிரிவினை ஏற்படுத்த முடிந்தால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் உள்ளது போல் ஓரளவுக்கு பரிபூர்ணமான கூட்டாட்சி அரசியல் ஏற்படுத்த முடியும்.''

இந்தத் தீர்வுக்கு இலங்கை மக்கள் சம்மதிப்பார்களா?

``சிங்கள மக்களைக் குறை சொல்ல முடியாது. இப் பிரச்னைக்கு அரசியல் கட்சிகள்தான் காரணம். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்வுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிதான் முரண்டு பிடிக்கிறது.''

விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறதே?

``சுதந்திரப் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முடியாது. ஒரு நாடு சுதந்திரம் அடைந்ததும், அந்த நாடுகளின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிற நாட்டுத் தலைவர்களுடன் சமமாக உட்கார்ந்து வருவதைப் பார்த்திருக்கிறோம். நெல்சன் மண்டேலா இதற்கு ஓர் உதாரணம். ஆகவே, புலிகளை பயங்கரவாதிகள் என்ற கோஷத்துடன் ஸ்ரீலங்கா பிரச்னையை அணுகக்கூடாது.

உண்மையில் சிறுபான்மை மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஸ்ரீலங்கா நடத்தி வருகிறது. 1983-ல் இருந்து அல்ல; 1956-ல் இருந்தேதமிழினத்தின் மீது பயங்கரவாதம் ஏவிவிடப்பட்டு வருகிறது. இதை எதிர்த்துத்தான் எங்கள் இளைஞர்கள் போராடத் துணிந்தார்கள்.


அடக்கி ஒடுக்கப்படுகின்ற ஓரினம், தன்னால் இயன்ற சகல வழிகளிலும் போராட நிர்ப்பந்திக்கப்படுகிறது. இல்லையென்றால் அந்த இனம் வாழ முடியாது. போராளியாக வேண்டும்; இல்லை செத்து மடிய வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடுவது யார்? தமிழ் இளைஞர்கள் தானே. அப்படியென்றால் தமிழினமே போராடுகிறது என்றுதானே அர்த்தம்?''

ராஜீவ்காந்தி படுகொலையில் புலிகளின் தொடர்பு இருக்கிறதே?

``ராஜீவ் காந்தி படுகொலை என்பது ஓர் இமாலயத் தவறு. அவர் கொல்லப்பட்டதும், இலங்கைத் தமிழர்கள் நேர்மையான முறையில் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இலங்கை பிரச்னையை அமரர் ராஜீவ் காந்தி படுகொலையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது அறிவுபூர்வமானது அல்ல. அந்த வழக்கில் புலன்விசாரணை நடந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். சிலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதில், எங்களுக்கு முழுமையான ஒப்புதல் உண்டு. இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ராஜீவ் காந்தி உயிருடன் இருந்து பிரதமராகத் தொடர்ந்திருந்தால், ஸ்ரீலங்கா அரசு, தமிழர்கள் பிரச்னையில் வாலாட்ட அனுமதித்திருக்க மாட்டார். வடகிழக்கு மாகாணங்கள் பிளக்கப்படுவதை இலங்கை அரசு ஒரு நிமிடம் கூட சிந்திக்க முடியாது. ஏனென்றால், ராஜீவ்காந்தி ஒரு விடயத்தில் முடிவெடுத்தால், அதில் உறுதியோடு செயல்படும் வைராக்கியத்தை தன் தாயிடம் இருந்து பெற்றிருக்கிறார்.''

இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதாக தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறதே?

``தமிழர்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்த ஸ்ரீலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.


இதைப் பற்றி இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள்தான் அதிகம் கவலைப்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பித்தான் நான் சார்ந்துள்ள டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., பிளாட், ஈ.ஆர்.ஓ.எஸ்., ஈ.என்.டி.எல்.எஃப். ஆகிய ஐந்து அமைப்புகள் ஆயுதங்களை ஒப்படைத்தோம். இந்திய_இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்த நாங்கள் இப்போது என்ன பெற்றிருக்கிறோம்?

அந்த ஒப்பந்தம் ஈட்டிக் கொடுத்த தமிழ் மாநிலமான வடகிழக்கு மாகாணத்தையே இப்போது இழந்து விட்டோம். ஒப்பந்தம் மூலம் ராஜீவ்காந்தி ஈட்டித் தந்த ஒன்றுபட்ட தமிழ் மாநிலத்தையே இலங்கை அரசு தட்டிப் பறித்துவிட்டதே. அதே நேரத்தில், இலங்கைக்கு இந்திய அரசுசெய்யும் யுத்த ரீதியிலான உதவியை எந்த வார்த்தையில் வர்ணிப்பது என்றே தெரியவில்லை.''

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தீர்வுதான் என்ன?

``எமது மக்கள் அமைதியை நாடுகிறார்கள். இரு இனமும் ஒரே நாட்டில் சேர்ந்து வாழ முடியும். ஒரே நாடு என்ற இலக்குடன் அரசியல் நிர்வாக வரையறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நாடு என்ற எல்லைக்குள் எங்களுடைய சுயாட்சி எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்பதையும், அரசியல் சாசன ரீதியாக எழுத்திலும் நடைமுறையில் நிலத்திலும் வகுத்துக் கொள்ள முடியும். அப்படி வகுத்துக் கொள்ள அவர்கள் (ஸ்ரீலங்கா அரசு) தயார் என்றால், அதற்கு அமைதியான சமாதான முறையில் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

மாறாக, யுத்தத்தின் ஊடாக எங்களை அடக்க முடியும் என்று அவர்கள் நம்பினால் (கோபமாக...) அதே யுத்தத்தின் மூலம் அவர்களை வெற்றி கொள்வது மூலம் எமது மண்ணில் சுதந்திர அரசினை மீண்டும் விஸ்தரிக்க முடியும்.


அவர்கள் போராடத் தயார் என்றால், அதற்கு நாங்களும் தயார். இதை உலக அமைதி, மனித உரிமைகள் பெயரால் இயங்கும் அமைப்புகள் தூர இருந்து வேடிக்கை பார்க்கப் போகிறதா?


சர்வதேச அமைப்புகளின் அளவுகோல் நாட்டுக்கு நாடு, பிரச்னைக்குப் பிரச்னை மாறுபடுகின்றன. ஆனால், இலங்கைப் பிரச்னையில் இந்தியா ஒரு முடிவெடுத்தால், சர்வதேச அமைப்புகள் யாரும் வாலாட்ட முடியாது. இந்தியாவை எதிர்த்து இலங்கை அரசால் ஒரு தும்மல் கூட போட முடியாது'' என்று முடித்துக் கொண்டார் ஸ்ரீகாந்தா. ஸீ

வே. வெற்றிவேல்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Sept 14, 2008


Comments