வவுனியா படைத்தளத்தின் மீதான புலிகளின் தரை - வான் தாக்குதல்கள் - சிறிலங்காப் படைத்துறை மூலோபாயத்தின் உயிர்மையத்தில் விழுந்த அடி.


விடுதலைப்புலிகளின் வான்படையினராலும் கரும்புலிகளினாலும், கிட்டு பீரங்கிப்படைப் பிரிவின் ஆட்லறி சூட்டாதரவுடன் மேற் கொள்ளப்பட்ட தரை மற்றும் வான் வழியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதல்களானது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைத்துறையினதும் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த பாரிய நெத்தியடியாகும்.

அத்துடன் சிறிலங்காப் படைகளின் எதிர்கால நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கங்களையும் நெருக்கடிகளையும் புலிகளின் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் ஏற்படுத்தப்போகின்றது.

அதாவது தற்போது வன்னி பிராந்தியத்திலே இடம்பெறுகின்ற சிறிலங்காப் படையினரின் அனைத்து போர் நடவடிக்கைகளுக்குமான கட்டளைபீடமாகவும் தொடர் பாடல் மையமாகவும் மற்றும் வலிந்த தாக்குதல்களுக்கு தேவையான படைகளை ஒருங்கிணைக்கின்ற இடமாகவும் இப்படைத்தளம் விளங்குகின்றது.

அத்துடன் நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களையும் ஏனைய வழங்கல்களை விநியோகின்ற தளமாகவும் இக்கூட்டுப்படைத்தளம் செயற்பட்டு வருகின்றது.

இதனோடு இணைந்திருக்கின்ற விமானப்படைத்தளமானது களமுனைகளிலே காயமடைகின்ற படையினரை உலங்குவானூர்திகளில் அவசரமாக ஏற்றிஇறக்குவதற்கு பயன்படுத்தப்படுவதுடன் வான் புலிகளின் விமானங்கள் ஏதாவது நடவடிக்கைக்காகப் புறப்பட்டால் அதனைக் கண்காணிப்பதற்காக ராடர் நிலையம் ஒன்றும் இங்கே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு-வவுனியா- மன்னார் ஆகிய நகரங்களை இணைக்கின்ற இடத்திலே இப்படைத்தளம் அமைந்திருப்பதும் அதன் முக்கியத்துவத்தினை அதிகரித்துள்ளது. சிறிலங்காப் படையினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வன்னிப்பகுதியிலே பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதில் இருந்தே இப்படைத்தளத்தின் முக்கியத்துவம் பெரிதாக அதிகரிக்கத் தொடங்கியது.

சிறிலங்காப் படையினரின் 59ஆவது படையணியானது மணலாறில் முன் னேற்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்ற அதேவேளை மன்னார்ப் பிராந்தியத்திலே 57ஆவது படையணி, இடுபணி குழு-1, இடுபணி குழு-2 மற்றும் 61ஆவது படையணி என்பவை வன்னி மேற்கு பிராந்தியத்தின் ஊடாகவும் வவுனியா பாலமோட்டை, நவ்வி பகுதி ஊடகவும் முன்னேற்ற முயற்சிகளைப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகள் படையினரின் இந்த மூன்று பகுதிகளின் ஊடான முன்னேற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்த்து போராடி வருவதுடன் தமது மூலோபாய தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு அமைவாக சில பிரதேசங்களில் படையினரின் முன்னேற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதுடன் சில பிரதேசங்களிலே எதிரிக்கு இழப்புக்களை ஏற்படுத்தியவாறு பின்வாங்கியும் செல்கின்றார்கள்.

இந்த வகையில் மணலாறு பகுதிகளிலும் வவுனியா பாலமோட்டைப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு படையினருக்கு பாரிய இழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதுடன் படையினரை பெரியளவிற்கு முன்னேறவிடாது தடுத்தும் வருகின்றார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினரின் வன்னிக்கான கட்டளைபீடமாக செயற்பட்ட வவுனியா தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களானது விடுதலைப்புலிகள் மேலே கூறப்பட்ட பிரதேசங்களை ஏன் மூர்க்கத் தனமாகப் போராடி, சிறிலங்காப் படையினரை முன்னேறவிடாது வெற்றிகரமாகத் தடுத்தார்கள் என்பதை விளங்கப்படுத்துகின்றது.

விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினரின் வவுனியா படைத்துறை தலைமையகத்தின் மீது வியப்பூட்டும் வகையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது சிறிலங்கா அரசதரப் பினருக்கும் சிறிலங்காப் படைத்துறை உயர் மட்டத்தினருக்கும் பாரிய அதிர்ச்சிகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதாவது விடுதலைப் புலிகளின் வன்னிப்பிராந்தியத்தினையும் அவர்களது தலைநகரான கிளிநொச்சி யினையும் கைப்பற்றப்போவதாகவும் விடுதலைப்புலிகள் போரில் தோற்றுக் கொண்டிருப்பதாகவும் சிறிலங்காவின் அரச மற்றும் படைத்துறை பேச்சாளர்கள் அறிக்கைகள் தொடர்ச்சியாக விட்டுக் கொண்டிருந்தார்கள்.

முழுச் சிங்கள தேசமும் இந்தப் பரப்புரையை நம்பியதுடன் மகிந்த அரசின் போர் நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் தமது முழு ஆதரவினையும் தெரிவித் தார்கள். இது தவிர சிங்கள தேசத்தின் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகவியலாளர் களும் சிறிலங்காப் படைகள் விரைவில் போரில் வென்றுவிடும் என்ற கருத்துப்பட தமது பத்திகளையும் செய்திகளையும் எழுதி வந்தார்கள்.

ஆனால் தற்போது சிறிலங்காப் படையினரின் மையப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி முழுப் படைத்துறைச் செயற்பாட்டையும் முட மாக்குகின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதானது சிறிலங்காப் படைத்துறை தனது எதிர்கால மூலோபாயச் செயற்பாடுகளையே மாற்றியமைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

அதாவது சிறிலங்காப் படைகளின் வன்னி பிராந்தியம் மீதான படைநடவடிக்கைகளுக்கான உயிர் மையமாகவும் உயிர் நாடியாகவும் செயற்பட்ட வவுனியா படைத்தலைமையகம் மீதான தாக்குதல்கள் உடனடி மற்றும் நீண்டகால நெருக்கடிகளை, படைத்துறைச் செயற்பாட்டிலும் மூலோபாய தந்திரோபாயங்களிலும் ஏற்படுத்தப்போகின்றது.

அதாவது சிறிலங்காப் படைத்துறையானது, தற்போது ஒரு பாதுகாப்பான, விடுதலைப்புலிகளினால் பாரிய தாக்குதல்கள் எதுவும் மேற்கொள்ள முடியாதளவிற்கு நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு படைத்துறை கட்டளை மையத்தினை உடன டியாக உருவாக்கவேண்டும்.

அவ்வாறு ஒரு பாதுகாப்பான கட்டளை மையத்தினை செயற்படுத்தவேண்டுமெனில் ஒன்றில் அவ்வாறான கட்டளை மையத்தினை விடுதலைப்புலிகளின் நீண்ட தூர வீச்சுக் கொண்ட ஆட்லெறிகளின் எறிகணை வீச்சிற்கு எட்டாத தூரத்திற்கு நகர்த்த வேண்டும் அல்லது விடுதலைப்புலிகளின் வவுனியா முன்னரங்க நிலைகளை நீண்ட தூரம் பின்னுக்குத் தள்ளவேண்டும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் சிறிலங்காப் படைத்துறைக்கு நிறையவே சிக்கல்களும் நெருக்கடிகளும் இருக்கின்றன. அதாவது விடுதலைப்புலிகளின் ஓமந்தை தற்காப்பு அரண் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி ஆட்லெறி எறிகணைகள் எட்டாதளவிற்கு வவுனியா படைத்தளத்தினை பாதுகாக்க வேண்டும் என்றால் 1990களின் கடைசிக் காலப்பகுதியில் மேற்கொண்ட ஜெயசிக்குறு படைநடவடிக்கை போன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

தற்போது சிறிலங்காப் படையினர் மன்னார் மேற்கு பகுதியின் ஊடாக மன்னார்-பூநகரி பாதை யினை கைப்பற்றும் நோக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இவ்வா றான நடவடிக்கை அவர்களின் முழு மூலோபாய நோக்கங்களையும் திசைதிருப்பி விடுவதுடன் இந் நடவடிக்கைக்கு பெரும் எண்ணிக்கையிலான ஆட்தொகையும் சிறி லங்கா அரசிற்குத் தேவைப்படும். ஏற்கெனவே ஆட்தொகை பற்றாக்குறையாலும், படையில் இருந்து பெரும் எண்ணிக்கையில் படையினர் தப்பிஓடுவதாலும் ஆளணிகளை படை நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்துவதில் திணறிக்கொண்டிருக்கும் சிங்கள அரசானது இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற் கொள்வது என்பது பெரிதும் சிரமமான காரியமாகும்.

இரண்டாவது தேர்வான புதிய படைத் துறை தலைமையகத்தினை புலிகளின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட ஆட்லெறிகள் எட்டாத தொலைவில் அமைப்பது என்பதுவும் எவ்வளவு தூரத்திற்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்கிடமானது ஆகும்.

ஏனெனில் விடுதலைப்புலிகளின் வான்படையினரும் கரும்புலிகளும் சிங்களதேசத்தின் எப்பகுதிக் கும் சென்று தாக்குதல்களை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதில் வல்லவர்கள் என்பதனை பலதடவைகள் நிரூபித்துள்ளதுடன் சர்வதேச ரீதியாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களாலும் பாராட்டப் பட்டுள்ளார்கள்.

எனவே இவ்வாறான ஒரு புதிய படைத்துறை தலைமையகத்தினை விடுதலைப்புலிகள் மீண்டும் வெற்றிகரமாக தாக்கியழிப்பதற்கான வல்லமையையும் இயலுமையையும் கொண்டிருக்கின்றார்கள் என்பது சிறிலங்காப் படைத்துறை உயர்மட்டத்தினருக்கு நன்கு தெரியும்.

எனவே தற்போது சிறிலங்கா அரசினதும் படைத்துறையினதும் விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதற்கான தாக்குதல் மூலோ பாயங்களும் வியூகங்களும் பல்வேறு நெருக் கடிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளதுடன் அவர்களது முழு மூலோபாயங் களும் தேசியத் தலைவர் அவர்களின் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓரிரு வெற்றி கரமான தாக்குதல்களிலேயே முழுமையாக ஆட்டம் கண்டுவருவதை சிங்கள அரசும் அதன் படைத்துறையும் தற்போது உணரத் தொடங்கிவிட்டன.

அதாவது சீனப்போரியல் மேதையான சன் சூ கூறியதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானது. ‘எதிரியினை எமது தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்ப வடிவமைப் பது என்பது போரியல் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இதற்கான நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் ஒரு சிறந்த ஜெனரல் கைக்கொள்வார். அதாவது எதிரிகள் தாம் போரிடும் தரப்பினர் பலவீனமானவர்கள் என்று கருதி வெற்றி மமதையில் தந்திரோபாய தவறுகளை படைநடவடிக்கையில் மேற் கொள்வதற்கு இரையைக் காட்டி தூண்ட வேண்டும்.

அவர்களின் கவனங்களை நன்கு திட்டமிட்டு திசைதிருப்பவேண்டும். அவர் களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்தக் கூடியவகையில் தாக்குதல்களை நடத்தி அவர்களை நிலை தடுமாறச்செய்யவேண்டும். இதன்பின் நன்கு ஒழுங்கமைப்பட்ட வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு நாட்டினை எதிரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடு விக்கலாம்.'

- எரிமலை


Comments