கொழும்பிலிருந்து மக்களை வெளியேறக் கோரும் அரசு வன்னியிலிருப்பவர்களை அழைப்பது வேடிக்கை - மனோ எம்.பி.

கொழும்பில் காரணமின்றி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி அரசாங்க பகுதிகளுக்கு வரவேண்டுமென கோருவது வேடிக்கை. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக மக்களை பலிக்கடாக்களாக்குவதை மக்கள் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கிளிநொச்சியிலிருந்து தன்னார்வ அமைப்புக்களை வெளியேற்றுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, வன்னியில் பாரிய மனிதப் பேரவலம் தொடர்ந்த வண்ணமிருக்கின்றது. இது விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். இதனை உலகமும் அறியும். நீண்ட நெடுங்காலமாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள், ஐ.நா. அமைப்புக்கள் வன்னியில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணங்களையாவது வழங்கி வந்தன. எனவே அந்த அமைப்புக்களை வெளியேற்றுவது நியாயமற்ற செயலாகும்.

தமிழ் மக்களை பாதுகாக்கவே யுத்தம் செய்கின்றோம் என்ற அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரம் உதவி அமைப்புக்களை வெளியேற்றுவதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இன்று தமிழ் மக்கள் தன்னார்வ அமைப்புக்களை வெளியேற வேண்டாமென கதறியழுகிறார்கள். ஏன் இவ்வளவு காலம் ஒரு சில உயிர்களாவது இவ் அமைப்புக்களின் உதவிகளுடன் உயிர்வாழ்ந்தன. அவர்களும் வெளியேறினால் தம்மை யார் பாதுகாப்பார்களென்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.


Comments