சூடு பிடிக்கும் வன்னிப்போர்

வன்னியில் நடந்து கொண்டிருக்கும் சிறிலங்காப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. சண்டைகள் இப்பொது கிளிநொச்சி மையத்தை அண்டிய பகுதிகளில் நடைபெற ஆரம்பித்துள்ளன.

இந்தப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் களமுனைகளில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட படையினரின் 20 உடலங்கள் கிளிநொச்சியில் வைத்து பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இவை கடந்த 1ம் 2ம் திகதிகளில் நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், மற்றும் வன்னேரிக்குளம் அக்கராயன்குளம் பகுதிகளுக்கிடையேவுள்ள 8ம் கட்டை, 9ம் கட்டை ஆகிய பகுதிகளிலும் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகளின் போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் எதிர்த்தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள்.

விடுதலைப்புலிகளின் இத்தாக்குதல்களில் 75 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லபட்டு 100 இற்கும் மேற்பட்ட படையினார் படுகாயமடைந்து களத்திலிருந்து அகற்றப்பட்டனர். இத்தாக்குதல்களின் போது படையினரின் பெருமளவிலான இராணுவத் தளபாடங்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.

2ம் திகதி காலை 5.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரையும் நடைபெற்ற கடும் சமரில் அரச படைகளால் முதற்தடவையாக சிறிய ரக ராங்கி எதிர்ப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆயுதம் அண்மையில் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய இராணுவ ராங்கிகளை அழித்தொழிக்கும் இந்த ஏவுகணையினை விடுதலைப்புலிகளின் காவலரண்களை அழிப்பதற்காக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நவீன ஆயுதத்தை பயன்படுத்திய களத்தில்தான் சிறிலங்காப்படையினர் விடுதலைப்புலிகளிடம் கடும் எதிர்த்தாக்குதல்களை எதிர்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இந்தக்களத்தில் தான் 30 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு 50 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளார்கள். இந்தக்களத்தில் தான் விடுதலைப்புலிகள் படையினரின் 10 சடலங்களை கைப்பற்றியிருக்கின்றார்கள்.

ஆக, சிறிலங்காப்படையினரால் முதல்தடவையாகப பயன்படுத்தப்பட்ட அந்தப் புதிய ஆயுதம் அவர்கள் எதிர்பார்த்த பலனைத்தரவில்லை. இதே வேளை நவீன ஆயுதங்களினால் உரமேற்றப்பட்ட சிறிலங்காப்படையினரின் உளவுரண் பாதிக்கப்படுவதற்கும் இக்களமுனை வழிசமைத்திருக்கின்றது.

இன்னொரு புறத்தில் விடுதலைப்புலிகள் குறித்த ஆய்வாளர்களின் கருத்துக்களின் படி விடுதலைப் புலிகள் இன்னமும் அவர்களின் முழுஅளவிலான படைப்பலத்தைப் பிரயோகிக்கவில்லை. அவர்களின் கடற்படை, வான்படை அகியவற்றின் உச்ச செயற்பாடுகளை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அவர்களிடமிருக்கும் பாரிய அயுதங்களின் பயன்பாடு இன்னமும் களத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் இன்னமும் எதிர்ச்சமரிலேயே ஈடுபட்டு வருகின்றனர். புலிகள் வலிந்த தாக்குதல்களை படையினருக்கு எதிராக ஆரம்பிக்கும் போது தான் இவையெல்லாம் வெளித் தெரியவரும்.

வன்னியின் ஆழமானப் பகுதிக்குள் நகரும் சண்டைகள் தங்களுக்குச் சவாலாக அமையும் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார். இது களமுனைகளில் தற்போது தென்படத்தொடங்கியுள்ளது. தற்போது படைநடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைகள் சிறப்புப்பயிற்சி பெற்ற அணிகளாகும். பல நாடுகளிலிருந்தும் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ஆயுதங்கள், கருவிகள் என்பனவே போரில் விடுதலைப்புலிகளை வெல்ல முடியும் என்கிற உளவுரணை படையினரக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாயுதங்கள் பலனளிக்காமல் போகும் போது படையினரின் உளவுரண் மோசமான சரிவிற்குள்ளாகும். அவ்வாறானதொரு நிலை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

போரில் பல்வேறு போக்குகளைக்காட்டி, எதிரியை ஆழ உள்ளிழுத்து அழிக்கும் வல்லமையுடன் விடுதலைப்புலிகள் இருப்பதாகவும், வன்னி நிலம் சிங்களப்படைக்கு வரலாற்றுத் தோல்வியை வழங்கும் எனவும், எதிர்வரும் நாட்களில் வன்னிப்போர்க்களத்தில் சிங்களப்படைகளுக்கு பேரழிவு காத்திருப்பதாகவும், வன்னிப்போரரங்கில் சிங்களப்படைகள் சந்திக்கப்போகும் வரலாற்றுப்படுதோல்வியாக அது அமையப்போவதாகவும் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான ‘விடுதலைப்புலிகள்’ ஏடு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மையப்பகுதிகளை நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிக்கும் படையினர் இவ்வளவு நாட்களும் எதிர்கொண்ட எதிர்ப்பு இனிவரும் நாட்களில் பல மடங்காக அதிகரிக்கப் போகின்றது. இதுவரைக் காலப் போர்களில் தமிழ்மக்கள் பின்வாங்கிச் செல்வதற்கான தளங்கள் இருந்தன. இப்போது நடைபெறும் போரில் அவ்வாறான நிலை இல்லை. வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கப் போகும் போர் இது. எனவே, போர் உக்கிரமாகத்தானிருக்கப் போகிறது.

நன்றி: ஈழமுரசு

Comments