எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ள சிறிலங்கா வான்படை

வன்னிப்பெரு நிலப்பரப்பின் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகையில் சிறிலங்கா வான்படை புதிய வகை எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.



கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருகின்றது.

சிறிலங்கா படையினரின் முன்நகர்வுகள் மந்த நிலையை அடைந்து வருவதனைத் தொடர்ந்து அரசு புதிய வகையான திரவ எரிகுண்டுகளை வான்படையின் வானூர்திகள் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் வீசத் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா வான்படை கடந்த வாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது.

இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

வானூர்தியில் இருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக்கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது.

எனவே, அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

நான்காவது ஈழப்போரில் சிறிலங்கா வான்படை பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன்நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் சி.எஸ் எனப்படும் நச்சுவாயுவை பயன்படுத்தியதாக அரசு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட சில நாட்களில் எரிகுண்டுகளை வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது வான்படை வீசத் தொடங்கியுள்ளதானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது.


Comments