மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம்

வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர்.

மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்புவதா எனச் சிந்திக்க வேண்டிய நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர். நாச்சிக்குடா வரை சென்று விட்ட படையினருக்கு பூநகரி நோக்கிச் செல்ல முடியாதிருக்கிறது.

வன்னேரி மற்றும் அக்கராயனைச் சமீபித்து விட்ட படையினருக்கு கிளிநொச்சி நோக்கிச் செல்ல முடியாதிருக்கிறது. வன்னியில் புலிகளின் படைத்தலைமையகங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப் படுத்தும் போது அவர்கள் நிலைகுலைந்து விடுவரெனக் கருதும் படைத்தரப்பு, கிளிநொச்சிக்குள்ளும் முல்லைத்தீவுக்குள்ளும் சென்றுவிட்டால் ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விடுமெனவும் கருதுகிறது.

இதனால்தான், வடபகுதிப் போருக்கான இராணுவக் கட்டளைத் தலைமையகங்களையும் விநியோக மையங்களையும் இலக்கு வைப்பதன் மூலம் வன்னிப் படை நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடப் புலிகளும் திட்டமிடுகின்றனர்.

வன்னிக்குள் படையினரைப் பரந்து விரிந்து அகலக்கால் வைக்கச் செய்து விட்டு புலிகள் தற்போது தங்கள் திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளனர். வன்னிக்குள் நுழைந்துவிட்ட படையினர் தங்கள் இலக்குகளை அடைவதற்குப் பெருமுயற்சி செய்கின்றனர்.

புலிகளின் தாக்குதல்கள் மற்றும் ஆட்பற்றாக்குறை காரணமாக அவர்களது படை நடவடிக்கைகள் இடை நடுவில் நிற்கின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த புலிகள், தங்கள் பகுதிக்குள் முன்னேறிவந்துவிட்ட படையினரைத் தடுத்து நிறுத்தி விட்டு அவர்களது படைத் தலைமையகங்கள் மீதும் விநியோக மையங்கள் மீதும் கடும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.

பாரிய படை நடவடிக்கைகள் நடைபெறும் நேரம் அந்தப் படை நடவடிக்கைகளுக்கான கட்டளைத் தலைமையகங்கள் புலிகளின் பாரிய தாக்குதல்களுக்குள்ளான போதெல்லாம் அந்தப் படை நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன அல்லது பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன.

இது ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாறு. இதனொரு கட்டமாக, யாழ்.குடாவைக் கைப்பற்றுவதற்காக 1995 இல் ?ரிவிரச? படை நடவடிக்கையை ஆரம்பிக்க முன் அந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வலிகாமம் பகுதியை மையமாக வைத்து ?ஒப்பரேசன் லீப் போவேர்ட் (முன்னேற்றப் பாய்ச்சல்) என்ற படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பலாலியிலிருந்து இந்தப் படை நடவடிக்கை ஆரம்பமானது. வலிகாமம் வடக்கிலிருந்து புறப்பட்டு வலி .மேற்கை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை நடவடிக்கைக்காக அளவெட்டிப் பகுதியில் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டிருந்தது. முன்னேறிய படையினர் வட்டுக்கோட்டை வரை வந்த போது அளவெட்டி இராணுவக் கட்டளைத் தலைமையகம் மீது புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்து பேரழிவை ஏற்படுத்தினர். ?புக்காரா? விமானமொன்றும் வீழ்த்தப்பட்டது.

முன்னேற்றப் பாய்ச்சலுக்கான படைத்தலைமையகம் அழிக்கப்படவே, வட்டுக்கோட்டை வரை முன்னேறிய படையணிகள் பின் வாங்கின. ஓரிரு தினங்களில் அந்தப் படை நடவடிக்கையும் கைவிடப்பட்டது. இதுபோன்றே 1997 இல் வன்னிக்குள் ?ஜெயசிக்குரு? படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ?ஏ9? வீதியை கைப்பற்றி வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் தரை வழிப் பாதையை திறக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட காலப் படை நடவடிக் கைக்கு கனகராயன்குளத்தில் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படைத்தளம் மீது புலிகள் நடத்திய பாரிய தாக்குதலில் அது அழிக்கப்பட, நெடுங்கேணி முதல் வவுனியா வரை அனைத்துப் படைத் தளங்களும் ஒரு சில நாட்களுக்குள் புலிகளிடம் வீழ்ச்சி கண்டது வரலாறு. குடாநாட்டில் முன்னேற்றப் பாய்ச்சல் படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட பெருந்தோல்வி, யாழ்.குடாநாட்டை பாதுகாக்க வேண்டுமானால் பலாலி இராணுவத் தலைமையகத்தை வலுப்படுத்தி அதனைப் பாதுகாக்க வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்த, வலிகாமம் வடக்கை அதி உயர் பாதுகாப்பு வலயமாக்கி பலாலி இராணுவத் தலைமையகத்தை பாதுகாத்து குடாநாட்டையும் படையினர் பாதுகாத்தனர்.

அதேபோன்றே ?ஜெயசிக்குறு? படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வி, வவுனியாவைப் பாதுகாக்க வேண்டுமானால் வன்னிக்கான வவுனியா இராணுவத் தலைமையகத்தை வலுப்படுத்திப் பாதுகாக்க வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்த வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் உருவாக்கப்பட்டு வவுனியா பாதுகாக்கப்பட்டது.

வன்னியில் தற்போது நடைபெற்று வரும் பாரிய படை நடவடிக்கைக்கான கட்டளைத் தலைமையகம் மீதே கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இங்கு படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வன்னிக்குள் படை நடவடிக்கையைத் தொடர்வதா அல்லது வவுனியாவில் இராணுவக் கட்டளைத் தலைமையகத்தை பாதுகாப்பதா என்ற பெரும் பிரச்சினை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னிப் படை நடவடிக்கைக்காக அனைத்துப் படையணிகளும் புலிகளின் முன்னரங்கக் காவல் நிலைகளை நோக்கி நகர தற்போது வவுனியாவையும் அங்குள்ள இராணுவக் கட்டளைத் தலைமையகத்தையும் பாதுகாக்க முடியாததொரு நிலையேற்பட்டுள்ளது.

வவுனியாவை பாதுகாக்க வேண்டுமானால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு பெரும் படையணிகளை நகர்த்த வேண்டுமென்றதொரு நிலையேற்றப்பட்டுள்ளது. இது வன்னியில் இடம்பெற்று வரும் பாரிய படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கப் போகிறது.

அண்மையில் திருகோணமலை கடற்படைத் தளம் மற்றும் துறைமுகம் மீதான வான் புலிகளின் தாக்குதல் யாழ்.குடாநாட்டிலுள்ள படையினரின் விநியோக மையத்தை தகர்க்குமொரு முயற்சியாகும்.

குடாநாட்டிலுள்ள படையினருக்கான அனைத்து கடல் வழி விநியோகங்களும் திருகோணமலையிலிருந்தே மேற்கொள்ளப்படுவதால் இதன் மீதான தாக்குதல் குடாநாட்டுப் படையினருக்கான விநியோகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதேபோன்றே வவுனியா இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதல் வன்னிப் போர்முனையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இவ்விரு தாக்குதலும் வடபகுதியில் இடம்பெறும் படை நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகள் விடுத்த மிகப் பெரும் சவாலாகவே கருதப்படுகிறது. இவ்விரு தாக்குதலிலும் வான் புலிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இனிமேல் வடக்கே இடம்பெறப் போகும் தாக்குதல்களிலும் வான்புலிகள் முக்கிய பங்காற்றவுள்ளதாலேயே வவுனியா கூட்டுப் படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் விமானப் படையினரின் ராடரை புலிகள் இலக்கு வைத்தனர். இதன் மூலம் வான் புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருப்பவற்றை புலிகள் முடக்கிவிட முனைவது தெளிவாகியுள்ளது. அத்துடன் வன்னிப் போர் முனையில் இனி வான் புலிகளின் நடவடிக்கை தீவிரமடையக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் புலிகளின் ஒரு விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக விமானப் படையினர் கூறியுள்ள போதும் அதனை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. தங்கள் விமானத்தை விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலைப் போன்றே இங்கும் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். எனினும் அநுராதபுரத் தாக்குதலில் புலிகளின் பீரங்கிப் படையணி பங்கேற்கவில்லை. ஆனால் இந்தத் தாக்குதலில் புலிகள் தங்கள் பீரங்கிப் படையணியைப் பயன்படுத்தியதால் கரும்புலிக் கொமாண்டோக்களால் கூட்டுப் படைத்தலைமையகத்திற்குள் இலகுவாகப் புக முடிந்தது.

ஏ-9 வீதியின் கிழக்குப் புறமாக வவுனியா நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்குள்ள கூட்டுப்படைத் தலைமையகத்தினுள் இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தலைமையகமும் அருகருகில் உள்ளன. இரு படைத்தளங்களையும் பிரிக்குமிடத்திற்குச் சமீபமாகத்தான் ?இந்திரா - II? ராடர் நிலையமும் இருந்துள்ளது. இதனை இலக்கு வைத்தே கரும்புலிகளின் கொமாண்டோ அணி படைத்தளங்களினுள் ஊடுருவியிருந்தது.

மணலாறு, பதவியா ஊடாக வவுனியா எல்லையில் ஈரற்பெரியகுளத்திற்கு வந்தே அங்கிருந்து கரும்புலிகள் கூட்டுப் படைத்தளத்தினுள் ஊடுருவியது தெரிய வந்துள்ளது. முதலில் இந்தக் கூட்டுப் படைத் தலைமையகம் மீது புலிகள் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக பெருமளவு ஷெல்கள் படைத்தளத்தின் நாலாபுறமும் வந்து விழ படையினர் அனைவரும் பதுங்கு குழிகளினுள் புகுந்து கொண்டனர். இந்த வேளையிலேயே கரும்புலிகளின் அணி படைத்தள பாதுகாப்பு வேலிகளை ஊடறுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தது.

கரும்புலிகளின் இலக்கு விமானப் படைத்தளத்திலிருந்த ராடராகும். வான் புலிகளின் பறப்புக்களை கண்காணிப்பதற்காக இது அங்கு பொருத்தப்பட்டிருந்தது. ராடர் நிலையத்தை இலக்கு வைத்தே கரும்புலிகள் அணி நகர்ந்தது. தங்கள் வசமிருந்த செய்மதித் தொலைபேசி மூலம், வன்னியிலிருந்து புலிகள் ஏவும் ஆட்லறி ஷெல் தாக்குதல் இலக்குகளை அவர்கள் நெறிப்படுத்தியவாறு படைத்தளங்களுக்குள் மேலும் ஊடுருவினர். அவர்கள் சென்ற பகுதிகளில் ஷெல்கள் விழாததால் தளங்களுக்குள் அவர்களால் இலகுவாக ஊடுருவ முடிந்தது. எனினும் புலிகள் ஏவிய ஷெல்கள் எங்கு வீழ்கின்றன எனத் தெரியாததால் படையினர் பதுங்கு குழிகளுக்குள்ளிருந்தனர்.

இங்கு ஊடுருவிய கரும் புலிகளில் சிலர், ஆட்லறி ஷெல்களை சரியான இலக்கில் ஏவுவதற்கான இடங்களைக் காண்பிக்கக் கூடியவர்கள் (artillerly spotters). இதனால் அவர்கள், படைத்தளத்தினுள் ஊடுருவியதும் அங்குள்ள முக்கிய நிலைகள் மீது எவ்வாறு எந்தத் திசையில் எந்தளவு தூரத்திற்கு ஆட்லறி ஷெல்களை ஏவவேண்டுமென செய்மதித் தொலைபேசி ஊடாக நெறிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக படையினரும் பதுங்குகுழிகள் மற்றும் காப்பரண்களிலிருந்து கரும்புலிகள் மீது தாக்குதலை நடத்த இருதரப்பிற்குமிடையே கடும் மோதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.



இந்த நேரத்தில் களநிலைமை வாய்ப்பாக இருக்க தங்கள் விமானங்களை கரும்புலிகள் அங்கு வரவழைத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அங்கு வந்த புலிகளின் விமானமொன்றை விமானப்படையினரின் ராடர் அவதானித்துள்ளது.

அந்த விமானம் அங்கு வந்து தாக்குதலை நடத்திய போது அவர்களது மற்றொரு விமானமும் அங்கு வரவே கூட்டுப் படைத் தளத்திலிருந்தும் வவுனியாவிலுள்ள படை முகாம்களிலிருந்தும் புலிகளின் விமானங்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனினும், அதற்கிடையில் இரு விமானங்களும் நான்கு குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பிவிட்டன. இவ்வேளையில், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து வந்த விமானப் படை விமானங்கள் வன்னிக்குள் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன. எவ்-7 விமானத்தின் தாக்குதலால் புலிகளின் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக பின்னர் படைத்தரப்பு அறிவித்தது. முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் அந்த விமானம் தரையிறங்குவதற்கிடையில் எவ்-7 விமானம் அதனை இடைமறித்து, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்த விமானத்தை தாக்கியதாகக் கூறப்படும் எவ்-7 விமானத்தில், தாக்குதல் நடைபெறும் போது அந்தத் தாக்குதலை மிகத் துல்லிய மாக ஒளிப்பதிவு சேய்யக் கூடிய நவீன கமராக்கள் இருந்தும் அவை இதனைப் பதிவு செய்யவில்லை. அத்துடன் புலிகளின் தாக்குதலில் விமானப் படைத்தள ராடர் அழிக்கப்படவில்லையென்றால் அந்த ராடர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பதிவு செய்திருக்கும். ஆனால், அதுபற்றி படைத்தரப்பு எதுவுமே கூறாததால் விமானங்கள் எதுவும் அழிக்கப்பட்டதற்கான பதிவுகள் அந்த ராடரில் இல்லாததுடன் பின்னர் அந்த ராடர்கள் அழிக்கப்பட்டுமிருக்க வேண்டும். இதனால்தான் புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பொய்யென்பதும் விமானப்படையினரின் ராடர் அழிக்கப்பட்டது உண்மையென்பதும் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இவற்றை மறைக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தும் போதும் அவற்றை படையினரால் தாக்கியழிக்க முடியாது போகிறது. இது சாதாரண படையினர் மத்தியிலும் தென்பகுதி மக்கள் மத்தியிலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புலிகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், கிளிநொச்சி வாசலில் படையினர் நிற்பதாக அரசும் படைத் தரப்பும் கூறிவந்த நேரத்தில் புலிகள் வவுனியா வாசலுக்கு வந்தமை தென் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வான் வழித் தாக்குதலை நடத்தியது மட்டுமன்றி தரை வழித் தாக்குதலையும் கூட்டுப் படைத் தலைமையகத்தினுள் சுமார் இரு மணி நேரங்களுக்கு மேலாக 80 இற்கும் மேற்பட்ட ஆட்லறி ஷெல்களையும் புலிகள் ஏவியது மிகப் பெரும் அதிர்ச்சியாகும். இதைவிட ராடர் நிலையமும் அழிக்கப்பட்டு விட்டதென்ற செய்தியும் வெளியே தெரிய வந்தால் மிகப்பெரும் அவமானமாகி விடும் என்பதாலேயே, இவையேல்லாவற்றையும் மறைப்பதற்காக புலிகளின் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அரசும் படைத்தரப்பும் கூறின.

புலிகளிடம் மேலும் சில விமானங்கள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் அடுத்த முறை விமானத் தாக்குதல் நடைபெற்றால் அதுவேறு விமானங்களெனக் கூறிவிட முடியுமென்பதால் முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் புலிகளின் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அரசும் படைத் தரப்பும் கூறுகின்றன.

எனினும், புலிகளின் விமானங்கள் ராடர் திரையில் தென்பட்டு மூன்று நிமிடங்களுக்குள் அவை வவுனியாவுக்குள் வந்துவிட்டதாக படைத்தரப்பு கூறுவதால் புலிகளின் விமானங்கள் இந்தத் தாக்குதலுக்காக முல்லைத்தீவிலிருந்து வந்தனவா என்பது பெரும் சந்தேகமாகும். அதேநேரம், முல்லைத்தீவிலிருந்துதான் அவை வந்திருந்தாலும் தாக்குதலின் பின் திரும்பும் போது விமானப் படை விமானங்கள் துரத்தி வந்து தாக்கும் ஆபத்திருப்பதால் தாக்குதலை நடத்திவிட்டு அவை கூடிய தூரத்திற்குப் பறந்து சென்றிருக்க மாட்டா. விரைவில் பாதுகாப்பான ஓரிடத்தில் தரையிறங்கியிருக்குமென்பதால் விமானமொன்றை முல்லைத்தீவு காட்டில் வைத்து அழித்து விட்டதாக படையினரால் சுலபமாக கூறிவிட முடிந்திருக்கிறது.

எனினும், அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவர்களால் காண்பிக்க முடியவில்லை. இதேநேரம், வன்னியில் புளியங்குளம் பகுதியிலிருந்தே புலிகள் கூட்டுப் படைத்தளம் மீது ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக படையினர் கூறுகின்றனர்.

ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுகள் செலுத்தும் இடங்களைக் கண்டறிவதற்காக மணலாறு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஆட்லறி, மோட்டார் ராடர் இதனைத் தெரிவித்ததாக படைத்தரப்பு கூறுகிறது. எனினும், புளியங்குளத்தில் தங்கள் ஆட்லறிகள் மீது படையினர் பதில் தாக்குதலை நடத்திவிடுவதைத் தவிர்ப்பதற்காக புலிகள் அங்கு தங்கள் ஆட்லறிகளை தொடர்ந்தும் இடத்திற்கிடம்மாற்றியவாறே கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியதால் படையினரால் புலிகளின் ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது தாக்குதலை நிறுத்த முடியவில்லை.

இதற்கிடையில் தரைவழியால் படைத்தளங்களுக்குள் புகுந்த புலிகள் முடிந்தவரை தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தி அவற்றுக்குச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

ஊடுருவிச் சென்ற கரும்புலி ஒருவரே ராடர் நிலையம் மீது ஆர்.பி.ஜி. தாக்குதலை நடத்தி அதனை அழித்ததாகவும் தெரியவருகிறது.

படைத் தளங்களினுள் கரும்புலி அணிகள் சுமார் இரு மணிநேரம் வரை நின்றுள்ளன.

அதிகாலை 3.30 மணியளவில் படைத்தளங்கள் மீது கடும் ஷேல் தாக்குதலை ஆரம்பித்த புலிகள் காலை 6 மணிவரை தொடர்ச்சியாக அங்கு ஷேல் தாக்குதலை நடத்தி, உள்ளே ஊடுருவிய கரும்புலிகள் தாக்குதலை நடத்த வசதிகளை ஏற்படுத்தித் கொடுத்துள்ளனர்.

கடைசிக் கரும்புலி இறக்கும்வரை புலிகளின் ஷேல் தாக்குதல் தொடர்ந்துள்ளது. அவரது தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரே புலிகள் தங்கள் ஷெல் தாக்குதலை நிறுத்தியுள்ளனர். இருமணி நேரத்திற்கும் மேலாக உள்ளே நின்ற புலிகள் எந்தளவு சேதத்தை ஏற்படுத்தியிருப்பரென்பதை ஊகிக்கத் தேவையில்லை.

வன்னிப் படைத்தலைமையகத்திற்கே ஆபத்தென்றால் வன்னிக்குள் முன்நகர்ந்து சென்றிருக்கும் படையினரின் நிலை என்னவாகுமெனச் சிந்திக்கத் தேவையில்லை. அங்கும் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாகும்.

வவுனியாவை உடனடியாகப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால், அதற்கான படைவலு தற்போது படையினரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கிளிநொச்சி நகர் தங்களின் ஷேல் வீச்சு எல்லைக்குள் வந்துவிட்டதாகக் கூறிவந்த படையினருக்கு வவுனியா கட்டளைத் தலைமையகம் தங்கள் ஷெல் வீச்சு எல்லைக்குள் இருப்பதை புலிகள் காண்பித்துள்ளனர்.

வவுனியா படைத்தளம் மீதான வான் தாக்குதலையும் ஷெல் தாக்குதலையும் படையினரால் முறியடிக்க முடியாது போனமை வன்னிச் சமரில் மாற்றங்களேற்படப் போவதை உணர்த்தியுள்ளது. புலிகள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது.

தருணம் பார்த்து வந்தவர்கள் தற்போது தாக்கத் தொடங்கி விட்டதால் இனி யுத்தமுனையில் மாற்றங்களேற்படுவது சகஜமாகிவிடும்.

-விதுரன் -

Comments