இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் திலீபன் மற்றும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட வேங்கைகளின் வீணான சாவுகள்

1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன.

இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது.

ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.

அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற்ற சில தமிழ் உறவுகளின் கூற்றுப்படி தமிழ் இளைஞர்களுக்கான பயிற்சி இலங்கை அரசின் இராணுவ நடமாட்டங்களைக் கண்காணிப்பதும் வெளிநாட்டு ஊடுருவல் இடம்பெறாமல் தவிர்ப்பதுமாகவே இருந்தது.

மேலும் உறுதியான தீர்வு கேட்டு அன்றைய வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதியிடம் மூன்று இலங்கையர் பேசிக்கொண்டிருந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியில் இந்திரா அவரது 3 சீக்கியக் காவலாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஆதி பராசக்தியாகவும் கருதப்பட்ட இந்திரா காந்தி வரம் தர வந்த சாமியா இல்லையா எனத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளும் காலம் வரும் முன்னரே அவரது உயிர் பறிப்பு நிகழ்ந்து விட்டது.

இந்திராவின் கொலையில் வெளிநாடுகளின் கைகள் இருக்குமாயின் இலங்கையின் கைகளும் இருப்பது சாத்தியமே. இந்திராவின் இடத்துக்கு வந்த அவரது மகன் ராஜீவோ அல்லது ஏனைய இந்தியத் தலைவர்களோ இந்திரா காந்தியின் கொலை பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை.

இவை எதனையும் தெரிந்து கொண்டவராகவோ அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவராகவோ இந்திராவின் இடத்துக்கு வந்த ராஜீவுக்கு இருக்கவில்லை. அதனை அவரது குறையாகவும் கருத முடியாது.

பரம்பரை அரசியல் நாகரிகத்துக்கு இந்திய ஜனநாயக முறை அடிமைப்பட்டுப் போன அவலமே காரணம் எனலாம். அத்துடன் அவர் அதிகார பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டு நாகரிகம், வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டுக் காதலியான மனைவி, பாரத மண் அவர் காலில் பட்டிருக்குமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்நியரானவர். செய்த தொழிலும் வானத்தில் பறக்கும் விமான ஓட்டி. மொத்தத்தில் பாரத மண்ணுக்கும் அவருக்கும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பு.

இப்படியான சூழலில் விமான ஓட்டியாக உலக சுகங்களை அனுபவித்து வந்த ராஜீவுக்கு இலங்கையின் இனப் பிரச்சனையிலும் விமானம் ஓட்டுவது போல் ஓட்டிவிடலாம் என நினைத்து விட்டார்.

அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத காரணத்தாலும் அக்கறையின்மையாலும் அவர் அருகில் உள்ளவர் நினைத்தபடி நினைத்த பாட்டுக்கு ஆடும் பொம்மை ஆனார். அந்த அருகில் உள்ளவரைக் கூட அணுவளவும் நம்பாத குணமும் திமிரும் இருந்தது.

அதனால் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் தமிழர் என்ற காரணத்தால் ஜே.ஆரின் விருப்பப்படி இந்திராவுடன் செயலாற்றிய பார்த்தசாரதியையும் பின்னர் கோபாலசாமியையும் ஒருவர் பின் ஒருவராக நீக்கி விட்டு வடநாட்டவரான ரொமேஷ் பண்டாரியை நியமித்தார்.

இதன் பின்னர் எல்லாமே ஜே.ஆர் நினைத்தபடியே நிiவேறின. வலுக்கட்டாயமாகத் தமிழர் மீது திணிக்கப்பட்ட மாகாண சபை கூட இயங்கவிடாத படிச் செய்தபடியே தமிழ் மண்பறிப்பும் தமிழின அழிப்பும் விடுதலை இயக்கங்களுக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியும் தமிழரின் அமைதி வழி அரசியல் தீர்வு கால் நீராகவே போக்கடிக்கும் செயல்களே நடந்தேறின.

இவற்றுக்கு ஒரு முடிவு தேடி தன்னைத் தீயாக்கித் தியாக தீபம் ஆனான் திலீபன். பல போர்முனைகளைக் கண்ட மாவீரன் திலீபன். விழுப்புண் ஏந்தியும் தமிழினத்துக்காகப் பல களமுனைகளைக் காணக் காத்திருந்தவன்.

காந்தி தேசத்துக்குக் காந்தியின் காந்தீயம் புரியும் என நினைத்தது திலீபன் மட்டுமல்ல. ஈழத் தமிழினமே நம்பிக்கையோடு திலீபனின் தவம் பலித்துத் தமிழீழ வரம் கிடைக்கும் என இலவு காத்த களியாகக் காத்திருந்தது. வந்து பார்த்துப் போன இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றும் இந்தியத் தூதுவராக நடக்காது ஜே.ஆரின் சிங்களத் தூதுவராகவே நடந்து கொண்டார்.

திம்புவில் பேசியதும் தமிழர் தரப்பை இந்தியா தண்டிக்க முயன்றதும் தமிழரது நியாயமான கோரிக்கைகள் சேரும் இடம் குப்பைக் கூடைதான் என்பதை உணரத் தவறிய இனமாகத் தமிழினம் மாறிவிட்டது. மீண்டும் மீண்டும் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் அடுப்புக்குமாக மாறி மாறித் தவிப்பதே தமிழினத்தின் தலைவிதியாக இன்றும் தொடருகிறது.

பன்னிரண்டு நாட்கள் அனல் மேல் புழுவாய்த் துடித்த பின் வரம் தரும் சாமி தரிசனம் கிடைக்காமலே திலீபனின் தவம் தீயிலே கருகியது. கருகியது திலீபனின் உடல் அல்ல தமிழினத்தின் உள்ளங்கள். இன்றும் நினைத்தாலும் தமிழினத்தின் உள்ளங்களைத் தீ தானாகவே பற்றிக்கொண்டு விடும். ஆனால் அவன் மறைந்த கொடூர நினைவுகள் அடங்கும் முன்னரே அடுத்த பேரிடி ஈழத் தமிழினத்தின் தலைகள் மீது விழுந்தது.

ஒக்டோபர் இலங்கை - இந்திய ஒப்பந்தம் அமுலாகி ஓரிரு மாதங்களே ஆகியிருந்த நிலையில் அந்த ஒப்பந்த விதிகளுக்கு அமைய ஒரு சில தற்காப்பு ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்படப் 17 பேர் சென்ற படகை இலங்கைக் கடற்படை தடுக்கிறது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் என ஒன்று இல்லாதிருந்தால் இடைமறித்த கடற்படை உயிர்தப்பியிருக்க முடியாது. கடற்படை தப்பியிருந்தால் 17 பேரும் சமராடி வீரச்சாவைத் தழுவியிருப்பர். ஆனால் திலீபனின் உயிரைக் குடித்த அதே இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இந்தியாவின் மீதுள்ள மதிப்பும் மீண்டும் கரங்களைக் கட்டிய காரணத்தால் இந்தப் 17 பேரும் சிங்களத்தின் சிறைக் கைதிகளாயினர். அவர்களைச் கொழும்புக்குக் கொணடு போய் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்ய முற்பட்ட சிங்களத்தை இந்திய பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அல்லது விரும்பவில்லை.

இந்திய அரசுடன் செப்டெம்பர் 28 ஆம் திகதி புலிகள் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருப்பதை அனுமதிக்கிறது எனச் சுட்டிக் காட்டியும் பயனற்றதால் 17 பேரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி குப்பி கடித்தனர். அதில் 12 பேர் மாண்டனர். யாழ். தளபதியான குமரப்பா மணமாகிச் சில நாட்களே ஆன நிலை.

புலேந்திரன் திருமலைத் தளபதி. ஏனைய 15 பேரும் அதிமுக்கியமும் அனுபவமும் வாய்ந்தவர்கள். திலீபன் மறைவால் பொங்கிய கண்ணீர் வெள்ளம் முடிவு காணும் முன்னரே 12 மாவீர மணிகளின் வித்துடல்களுக்கு விழியாலும் விம்மும் அழுகையாலும் மலர்தூவி வழி அனுப்பி வைத்தோம்.

இத்தனையும் கண்டு அனுபவித்த பின்னரும் இந்தியா நமக்கு வரம் தரும் எனச் சாமியாடும் தொண்டர் படையை நினைக்கும் போது அப்பாவித்தனம் என்பதா இனத் துரொகம் என்பதா? நாங்கள் இன்னமும் எமது சிந்தனையைச் சீர்செய்யாது இருப்போமானால் எப்படி எமது முன்னைய தமிழர் தலைவர்களைக் குறை சொல்லமுடியும்?.

ஈழத் தமிழினம் கொழும்புத் தமிழரால் வழிநடத்தப்பட்ட நிலை சேர் பொன் அருணாசலத்தின் அரசியல் யாழ். இளைஞர் பேரவையைத் தமது வழிக்குத் திருப்பிய 1920 களில் தொடங்கி விட்டது. இதனால் தொடர்ச்சியான விட்டுக் கொடுப்புகளால் எமது இனம் இழந்த நிலமும் வளமும் வாழ்வும் அளவிட முடியாதவை. இந்த நீண்டகால அசமந்தப் போக்கை எமக்கு உணர வைத்தவர் சிங்களத் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க. அவரே தமிழ்த் தலைவர்களுக்கு பதவி பாராட்டுக்களை வழங்கி தமிழரின் உயிர் குடித்த பருந்து.

தமிழினத்தின் ஏமாளித்தனத்தை ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமது 50:50 என்ற கோரிக்கை மூலம் தமிழ்ப் பொதுமக்களுக்கும் சிங்களத்துக்கும் வெளிப்படுத்தினார். பின்னர் அவர் குட்டைக்குள் விழுந்தாலும் அவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட தந்தை செல்வாவும் அவருடன் கோப்பாய்த் தொகுதிப் பிரதிநிதியாக 1947 இல் தெரிவான கு.வன்னியசிங்கமும் தமிழினத்தின் தர்மநோக்கும் உரிமைக்குரலும் தடம் புரளாமற் காப்பாற்றினர்.

இவர்கள் இருவரும் நல்லவராக இருந்ததால் இந்திய வம்சாவழித் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் அழிக்க முடியாத வரலாற்றுத் துரோக வழியில் தமிழினம் போகாது தப்பியது. இவர்களால் தொடங்கப்பட்ட தமிழரசுக் கட்சி முன்வைத்த சுவிஸ் அரசமைப்பு முறையிலான சமஷ்டி ஆட்சிமுறையைச் சிங்களத் தலைமை ஏற்றிருந்தால் இன்று இலங்கை பூலோக சொர்க்கமாக இருந்திருக்கும்.

இன்றைய இந்த அவல நிலைக்குப் படிக்காத சிங்கள மக்களும் தமிழ்ப் பொது மக்களும் காரணம் எனக்கூற முடியாது. ஆங்கிலக் கல்வி கற்ற சிங்கள, தமிழ்த் தலைவர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டியவர்கள்.

அப்பாவிப் பொதுமக்களுக்குப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வாக்கு மோசடிகளைச் செய்து பதவிக்கு வருவது, பின்னர் தமக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட போட்டிகளால் நாட்டைச் சூறையாடிக் குட்டிச்சுவராக்கும் அரசியல் நடத்துவது.

கடந்ந 80 ஆண்டுகளாக டி.ஏஸ் முதல் மகிந்தர் வரை நடக்கும் கதை இதுதான். இவ்வகையாக உருவாக்கப்பட்ட சிங்களத் தமிழ் அரசியல் முரண்பாடுகள் வெளியார் தலையிட வசதியாக இருந்தது.

இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமைப் பறிப்பும் நாடற்றவராக்கி நாடு கடத்தும் சிங்களத்தின் செயலும் இந்திய அரசுக்குத் தலையிட அன்றே போதுமான காரணிகளாக இருந்தன. தன்னால் முடியாது போனாலும் இந்தியா சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால் இரு தேசத் தலைவர்களும் ஆங்கில மோகத்தில் ஊறிய ஆதிக்கப் பிரபுக்கள் வகுப்பினர். காட்டிக் கொடுத்தே ஆங்கில அரசிடமிருத்து நற்பெயர் பெற்றவர்கள். அதனால் இவர்களுக்கு மக்கள் நலமோ நாட்டு நலமோ சுட்டுப் போட்டாலும் வராத சமாச்சாரங்கள்.

இரு நாடுகளிலும் இன்றும் ஆளும் கதிரைக்கு அதே ஆங்கில, அல்லது மேல்நாட்டு மோகம் கொண்ட பிரபுக்களின் வாரிசுகளே அலங்கரித்து வருகின்றனர். வாரிசுகள்தான் வரவும் முடியும் என்ற நிலையில் இந்திய அரசு உறுதியாக நிற்பது தெரிகிறது.

இன்று மக்களின் கருத்து உலகம் அளவு விரிந்த அறிவைப் பெற முடிவதால் ஆளும் வர்க்கத்துக்குப் பதவியில் இருக்கத் தேவையானது மக்களின் கவனமாகும். மக்களின் கவனத்தை இலகுவில் ஈர்க்கக் கூடியவையாக இன்று மதமும் மதம் சார்ந்த அடிப்படைவாத வன்முறைகளும் இருப்பதால் இலங்கையில் புத்தம், இந்தியாவில் இந்துத்துவம், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்கம், பாக்கிஸ்தான் ஆப்கான் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் என்பன இன்று வன்முறைக் களங்களாக உள்ளன.

இப்படியான சூழலில் இரத்தம் சிந்தும் கோரச் செயல்கள் சொத்தழிவு உயிர்க் கொலை என்பன முரண்பாடுகளின் பொதுமையான பின் விளைவுகள் என்ற உண்மைகள் மறைக்கப்படுகின்றன. அரச இயந்திரங்களிலிருந்து பாயும் துப்பாக்கி ரவைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் எத்தகைய அழிவுகளைத் தந்தாலும் அவை மக்களாட்சி என்ற பெயரால் நியாயப்படுத்தும் கொடுமை நடக்கிறது.

நியாயமான அரசியல் கோரிக்கைகளை அமைதியான வகையில் அணுகித் தீர்வு காணாது அரச இராணுவ இயந்திரங்களைக் கொண்டு வன்முறையால் அடக்குவது எப்படி மக்களாட்சி ஆகமுடியும்? மக்களால் மக்களுக்காக மக்களை ஆழும் முறை மக்களாட்சி என்றால் எப்படி ஒரு அரசு தான் ஆளும் மக்களையே அரசியல் காரணங்களுக்காகக் கொல்ல முடியும்?

அப்படிப் பார்த்தாலும் 1977 முதல் தமிழ் மக்கள் சுதந்திரமான வாக்களிப்பு மூலம் இனிமேலும் சிங்களத்துடன் ஒற்றையாட்சியில் இருக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர்.

ஆனாலும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் நோக்கமாகவே தேர்தல்களில் பங்களித்து வந்தனர்.

1972 இலும் 1980 இலும் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு மூலம் தொரிவான சம்மதம் இல்லாமலே சிங்களத்தாலும் அதன் நியமனத் தமிழ் பிரதிநிதிகளாலுமே ஏற்கப்பட்டவை. சிங்களத்தின் அணுகுமுறை மாறும் என நினைத்து ஏமாந்த நிலையில் இன்றைய அரசுத் தலைவர் தமிழ் மக்களின் வாக்குப் பெறாமலே பதவிக்கு வந்தவர். அவருக்குத் தமிழர் மீது ஆட்சி செய்யவோ ஆணை செலுத்தவோ எந்தவிதமான ஜனநாயக யோக்கியதையும் கிடையாது.

ஆனால் இன்று உலகம் எங்கும் மக்களாட்சி என்ற பெயரால் தன் மக்களைத் தானே கொன்று அழிக்கும் அரசுகள்தான் இயங்குகின்றன. இதில் இயங்கு சக்தியாக ஆளுவோர் யார் மீதும் எதற்காகவேனும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட முடிகிறது. இது இலங்கை அரசைப் பொறுத்த வரை தமிழரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைக்கச் சிறந்த ஆயுதமாக உள்ளது.

இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிப்பவருக்கு ஒன்று புரியும். மகிந்தரின் இடத்தில் எவர் பதவிக்கு வந்தாலும் இதே வழியைத்தான் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது பண்டாரநாயக்க ஜே.ஆர். 1940களில் தொடக்கி வைத்த அரசியலின் பரிணாம வளர்ச்சி. இதில் பின்நோக்கிப் போக முடியாதபடி 1960 இல் அரசுடமையாக்கப்பட்ட கல்வித்துறையும் அது புகுத்திய பாடநெறிப் புத்தகங்களும் செய்து விட்டன. இதனை அறியாதவர் இலங்கையின் இன முரண்பாடுகளை என்றுமே விளங்கிக் கொள்ள முடியாது.

ஒரு புதிய சிங்கள இனமேலாதிக்கச் சிந்தனைக்குள் முழுச் சிங்கள இனமும் சிக்கிக் கொண்டு விட்டது. வேறு இனங்களை முக்கியமாக அரசியல் பொருளாதார அறிவியல் என்பவற்றில் தொடர்ந்தும் மேல் நிலையைத்தக்க வைக்கும் தமிழினத்தை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை.

இராணுவ ரீதியாக மட்டுமல்ல வாழ்வியல் ரீதியாகப் பார்த்தாலும் சிங்களம் புலி வாலைப் பிடித்துக்கொண்டவன் கதையாகவே உள்ளது. இந்நிலை ஜே.ஆரின் காலத்தில் தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். திம்புவிலும் பெங்களூரிலும் நேருக்கு நேராகப் பொது மேடையில் எமது அரசியல் தோன்றியபோதே சிங்களம் புலிவாலைப் பிடித்து விட்டது.

இலங்கை அரசியல் உண்மையான மக்களாட்சியாக இருந்தால் திலீபன் போல் எத்தனையோ கல்வியிற் சிறந்த மாணவர்களைப் பாழாய்ப் போன சிங்களப் பேரினவாத அரசியலும் காட்டிக்கொடுக்கும் தமிழ் அரசியல் துரோகிகளின் தன்னலமும் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து முடிவில்லாத போருக்கு இன்று வரை பலியாக்கி வருவது எமது இனத்தின் சாபக்கேடாக உள்ளது. இதற்கு முடிவு காணும் வாய்ப்பும் வசதியும் புகலிடத் தமிழரிடமே உள்ளன. இன்று உள்ள நிலையில் இது வன்னி மக்களதோ தமிழீழ மக்களதோ பிரச்சனையாக இல்லை- மாறாக அனைத்துலகத் தமிழரதும் மனித இனத்தினதும் பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்

இன்று வன்னியில் நடப்பது மனித வதை, இன அழிப்பு மற்றும் மனித இனத்துக்கு எதிரான போரக்குற்றங்களாகும். இதே குற்றத்தைக் கிழக்கில் செய்தபோது அனைத்துலக அரசுகளும் அமைதிப் பேச்சின் அனுசரணையாளர்களும் நடவடிக்கை எடுப்பர் என நம்பி நாம் ஏமாந்து விட்டோம்.

வன்னியில் இடம்பெறும் குற்றச் செயல்களின் பொறுப்பாளிகளாக, முக்கிய குற்றவாளிகளாக இலங்கை இந்திய அரசுகள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்னியின் இலங்கைப் படைத் தளத்தில் காயம் பட்டவர்களில் இரு இந்தியர்கள் இருப்பது இந்திய அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போதுமானதாக உள்ளது. எமது அடுத்த நடவடிக்கை இது பற்றியதாக இருக்க வேண்டியது நியாயமான தேவையாக உள்ளது. காலத்தின் கட்டாயம் தெரிந்து இதனைச் செய்வோமா?.

- த.எதிர்மனசிங்கம் -

Comments