''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக்



குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்!

பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்து, கொஞ்சம் அடக்கி வாசிப்பதுதான் ஜெயலலிதாவின் அணுகுமுறை. புலிகளின் சீனியர் ஆலோசகராக விளங்கிய ஆண்டன் பாலசிங்கம், உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வில் இறங்கவேண்டிய நிலை வந்தபோது, மனிதாபிமான கண்ணோட்டத்தை எல்லாம் தாண்டி அதற்கு எதிர்ப்புத் தெரிவத்தவர் ஜெயலலிதா. கடந்த வாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்ட நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்து, கடைசி நேரத்தில் தன் பிரதிநிதி யாரையும் அனுப்பாமல் அ.தி.மு.க. கழண்டுகொண்டதும்கூட சர்ச்சை அலைகளைக் கிளப்பியது.

இத்தனைக்கும் நடுவே, இலங்கை பிரச்னையில் மட்டும் தன் கூட்டணித் தலைமையோடு கருத்தொருமித்த கண்ணோட்டம் இல்லாமல் நெருடலுடனேயே இருந்துவந்தது ம.தி.மு.க! இப்போது அதிரடியாக ஜெ. அறிக்கை வந்துவிடவும்... அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னருகில் இருந்தவர்களுடன் இனிப்பு பரிமாறிக் கொண்டார் வைகோ!

''ம.தி.மு.க-வுக்கு இது உணர்வுபூர்வமான பிரச்னை என்றால் அ.தி.மு.க-வுக்கு அரசியல்ரீயான பிரச்னையும்கூட..! தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதோடு, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் தி.மு.க-வின் பலவீனங்களை வெளிச்சப்படுத்தி, ஓட்டு வங்கியை பலப்படுத்த முடிவெடுத்துவிட்டார்'' என்றே போயஸ் தோட்டத்துத் தகவல்கள் சொல்கின்றன.

இத்தகைய சூழலில் வைகோவை நாம் சந்தித்தோம்.

''இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் மனமாற்றத் துக்குக் காரணம் நீங்கள்தானா?''

''மேடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்தப் பிரச்னையை ஆழ்ந்து யோசித்திருப்பார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் ஈவு-இரக்கமற்ற கொடூரங்களைப் பற்றிய விவரங்களை திரட்டியிருப்பார். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகங்கள் குறித்த தகவல்களை முழுமையாக சேகரித்திருப்பார். அதில் தெளிவு பெற்ற பின்னர் தான் இப்படியரு அறிக்கையை வெளியிட்டி ருக்கிறார்.



சிங்கள ராணுவத்தை எதிர்க்க ஈழத் தமிழர் களுக்குக் தளம் அமைத்துக் கொடுத்தது எம்.ஜி.ஆர்தான். அவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திக் கொண்டுதான் ஒவ்வொரு ஈழத் தமிழனும் இந்த நிமிடம் வரையில் போர்க்களத்தில் நிற்கிறான். புரட்சித் தலைவரின் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இன்றைக்கு அவருடைய வழியிலேயே ஈழத் தமிழனைப் பாதுகாக்க முன்வந்திருக்கிறார்.

இதற்கு முன்பு 2006-ம் வருடம் ஈழப் பிரச்னைக்காக டெல்லி யில் எங்கள் கட்சி உண்ணாவிரதம் இருந்தபோது, அ.தி.மு.க-வின் மூன்று எம்.பி-க்களை அனுப்பி ஆதரவு கொடுத்தார் ஜெயலலிதா. 2007-ம் வருடம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதானோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அப்போதே இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக்கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது வந்திருக்கும் அவருடைய அறிக்கை தமிழக முதல்வர் பதவியில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தமிழர் நலனையே விட்டுத் தரத் தயாராக இருக்கும் கலைஞரின் உண்மையான கலரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது! ஜெய லலிதாவின் அறிக்கைக்குப் பிறகுதான் ஈழத் தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவராக பிரதமருக்குத் தந்திகள் அனுப்பச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஈழத் தமிழனுக்கு மயிலை மாங்கொல்லையில் இவர் பொதுக்கூட்டம் போட்டுப் பேசு வாராம்... அதைக் கேட்டு இலங்கை அரசாங்கம் தன் அட்டூழியத்தை உடனே நிறுத்தி விடுமாம். யாரை ஏமாற்றும் வேலை இது?

கலைஞர் நினைத்தால், அவர் வீட்டுக் கொல்லையில் டெல்லி மந்திரி பிரதானிகள் அத்தனை பேரும் வந்து நிற்பார்களே..! இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவின் உதவியை உடனே நிறுத்தவேண்டும் என்று அவர்களிடம் இவர் கட்டளை போடலாமே. அதைவிட்டுவிட்டு மாங்கொல்லையில் கூட்டம் கூட்டுவானேன்?''

''இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என இந்திய அரசு சொல்கிறது. ஆனால், ஜெயலலிதா சில மீடியா செய்திகளை மேற்கோள் காட்டி சாடியிருக்கிறாரே..?''

''ஆமாம்... நூறு இலங்கை ராணுவத்தினருக்கு ஹரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சிகள் அளித்ததாக வந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.

இதுபோல் ஏராளமான ஆதாரங்களை எடுத்து வைக்க முடியும். செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சிங்கள ராணுவ கேந்திரத்தின் மீது புலிகள் விமானத் தாக்கு தல் நடத்தினார்கள். கரும்புலிகள் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய மறுநாள், தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து ஒரு செய்தி வெளியாகிறது. அதில் இந்திய அதிகாரிகளான ஏ.கே.தாகூர் மற்றும் ரவுட் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட் டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் இடத்தில் இந்திய அதிகாரிகளுக்கு என்ன வேலை? இதற்கும் மறுநாள் இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று, மற்றொரு செய்தியை வெளியிடுகிறது. அதில் '265 இந்திய ராணுவ வல்லுநர்கள் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பெயர் சொல்ல விரும்பாத இந்திய செய்தி தொடர்பாளர் ஒருவர் சொன்னதாக அதே செய்திக்குறிப்பு சொல்கிறது. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிமிடம் வரை இந்திய அரசு மறுக்கவில்லையே.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு மூத்த செய்தியாளர் என்னிடம் பேசினார். ராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் அவரும் கலந்து கொண் டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, 'இந்திய சர்க்கார் நம் பக்கம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் 'தமிழ்... தமிழ்' என்று முழங்கும் சில கைக்கூலிகள்தான் நம்மை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடாது. இந்தியாவின் துணையோடு நம் இலக்கை அடைந்துவிடுவோம்' என்று பேசியதாக அந்த செய்தியாளர் சொன்னார்.

இந்திய அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் கொழும்புக்குச் சென்று திரும்புகிறார்கள். இலங்கைக்கு இரண்டு சதவிகித வட்டியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது இந்தியா! இந்தக் கடன் தொகையைக்கொண்டு பொன்சேகா பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்கும் முயற்சிகளில் இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. தமிழனை அழிக்க தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் பங்கு வகிக்கும் இந்திய அரசு பணம் கொடுக்கிறது!''

''இலங்கை விவகாரத்தில் இத்தனை எதிர்ப்புக்கு நடுவிலும் இந்திய அரசு அசைந்துகொடுக்காமல் நிற்பதன் அவசியம் என்ன?''

''அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் தான் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசைக் குழப்புகிறார்கள். முதலில் இப்படி குழப்பப்பட்டவர் ராஜீவ்காந்தி! போஃபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கிய சமயத்தில் அதை மறைக்க எதையாவது செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ராஜீவ். அந்த நேரத்தில் அவரை தன்னுடைய தந்திர வலையில் சிக்க வைத்து இலங்கை-இந்திய ஒப்பந்தம் போட்டார் ஜெயவர்த்தனே. அந்தத் தவறை நியாயப்படுத்த, இப்போதும் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசிகளாகவும் தமிழர்களுக்கு வில்லன்களாகவும் இந்திய அதிகாரிகளில் ஒரு கூட்டமே செயல்படுகிறது.

அப்போது போட்ட ஒப்பந்த ஷரத்துக்களை மீண்டும் ஒப்பந்த வடிவில் கொண்டுவர இந்தியா முயன்றபோது நான் எதிர்த்தேன். உடனே, அது கைவிடப்பட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால், ஒப்பந்தம் போடாமலேயே ஷரத்துகளை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த துணிச்சலில் 'பிரபாகரன் பிடிபடுவார், ரொம்ப நாள் அவர் உயிரோடு இருக்க முடியாது' என்று இலங்கையின் ராணுவ தளபதி பொன்சேகா சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது. அவருடைய போர்த்தந்திரங்களை எதிர்கொள்ள எத்தனை நாட்டு ராணுவம் இலங்கைக்குத் துணையாக நின்றாலும் ஜெயிக்க முடியாது!''

வைகோ-வின் உற்சாக முழக்கம் இப்படி யிருக்க, இலங்கைப் பிரச்னை தொடர்பான ஜெயலலிதாவின் அறிக்கைக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருப்பது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம். 'இலங்கை விவகாரத்தை முழுமையாக கையில் எடுத்து இன்னும் சில நாட்களில் கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் ஜெயலலிதா தயாராகி வருகிறார்' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர் தலைவர்கள் சிலர்.


Comments