பாக்குநீரிணையில் கூட்டுரோந்துக்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு

பாக்குநீரிணையில் இலங்கை, இந்தியக்கடற்படையினர் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கடும்எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்திருக்கிறார்.

இந்தத்தருணத்தில் கூட்டு ரோந்துக்கான தேவை இல்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மூலம் கருணாநிதி நேற்று சனிக்கிழமை தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

தமிழக மீனவர்களை காக்கும் வகையில் இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படையை வலுப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கச்சதீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டிற்கு ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர். அண்மையில் முதலமைச்சர் கருணாநிதியை

சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இனி இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டார்கள் என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த உறுதிமொழிக்கு மாறாக இலங்கைக் கடற்படை கடந்த 28ஆம் திகதி மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த மீனவர் முருகன் என்பவர் கொல்லப்பட்டார்.

இலங்கைப் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருவதை அடுத்து,இந்த விடயம் குறித்து, வெளியுறவு அமைச்சர் பிராணப் முகர்ஜி அண்மையில் நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்தபோது விவாதித்தார்.

அப்போது அவர் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கவலையை வெளியிட்டார். இதனையடுத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இந்திய, இலங்கை கடற்படைக் கூட்டு ரோந்து பணியை மேற்கொள்ளலாம் என்று இலங்கை அமைச்சர் யோசனை தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்தக் கூட்டு ரோந்துப் பணியை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்த்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டு ரோந்து என்பது தமிழக மீனவர்களுக்கு எதிரான கூட்டுச்சதியாகும் என்றும் இதனை உடனே கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் கூட்டு ரோந்துத் திட்டத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், இதை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கூட்டு ரோந்து பணியை மேற்கொள்ளக்கூடாது என்று கூறி முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில அவர் கூறியிருப்பதாவது;

இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் அண்மையில் நடத்திய ஆலோசனையில் கூட்டு ரோந்துத் திட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய கடல் எல்லைப் பகுதியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய கடற்படையும் கடலோர காவல் படையும் தேவையான அதி நவீன வசதிகள் மற்றும் கருவிகள் அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கூட்டுரோந்துத் திட்டம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நமக்கு சாதகமானது இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் முந்தைய தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் விரிவாக விவாதித்து கூட்டு ரோந்து கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போதும் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கு நவீன சாதனங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வலுப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன். எனவே, அதனை உடனடியாக மேற்கொண்டால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்தச் சமயத்தில் நான் ஏற்கனவே கூறியபடி கூட்டு ரோந்து என்பது தேவையற்றதாகும். எனவே, இந்த விடயத்தில் இலங்கை அரசின் கோரிக்கையை பரிசீலிக்க தேவையில்லை என்று கேட்டுக்கொள்கின்றேன்.



Comments